ரோகித் அபார சதம்: காரைக்குடியை வெளியேற்றியது கோவை கிங்ஸ்


ரோகித் அபார சதம்:  காரைக்குடியை வெளியேற்றியது கோவை கிங்ஸ்
x
தினத்தந்தி 16 Aug 2017 10:45 PM GMT (Updated: 16 Aug 2017 8:56 PM GMT)

டி.என்.பி.எல். கிரிக்கெட் வெளியேற்றுதல் சுற்று ஆட்டத்தில் கோவை கிங்ஸ் அணி ரோகித் விளாசிய சதத்தின் உதவியுடன் காரைக்குடியை வீழ்த்தியது.

நத்தம்,

கோவை அணி அடுத்து தகுதி சுற்றில் சேப்பாக் சூப்பர் கில்லீசுடன் நாளை மோத உள்ளது.

2-வது தமிழ்நாடு பிரிமீயர் லீக் (டி.என்.பி.எல்.) 20 ஓவர் கிரிக்கெட் தொடரில், வெளியேற்றுதல் சுற்று ஆட்டம் (எலிமினேட்டர் சுற்று) திண்டுக்கல் மாவட்டம் நத்தத்தில் நேற்றிரவு நடந்தது. இதில் புள்ளி பட்டியலில் 3-வது மற்றும் 4-வது இடத்தை பிடித்த காரைக்குடி காளையும், கோவை கிங்சும் பலப்பரீட்சை நடத்தின.

டாஸ் ஜெயித்த கோவை கேப்டன் முரளிவிஜய் பந்துவீச்சை தேர்வு செய்தார். இதன்படி விஷால் வைத்யாவும், அனிருதாவும் காரைக்குடி அணியின் தொடக்க ஆட்டக்காரர்களாக இறங்கினர். 2-வது ஓவரிலேயே அனிருதா 15 ரன்னில் வெளியேறி இருக்க வேண்டியது. அவர் கொடுத்த கேட்ச் வாய்ப்பை முரளிவிஜய் வீணடிக்க, அந்த பொன்னான வாய்ப்பை அனிருதா சூப்பராக பயன்படுத்தி கொண்டார். விஷால் வைத்யா 7 ரன்னில் வெளியேறினாலும், அடுத்து வந்த ஆதித்யா அனிருதாவுக்கு நன்கு ஒத்துழைப்பு கொடுத்தார்.

பேட்டிங்குக்கு உகந்த இந்த ஆடுகளத்தில் அனிருதா, சிக்சரும், பவுண்டரியுமாக சர்வசாதாரணமாக ஓட விட்டார். 10 ஓவர்களில் அந்த அணி 100 ரன்களை தொட்டது. ஸ்கோர் 118 ரன்களை எட்டிய போது அனிருதா 79 ரன்களில் (36 பந்து, 10 பவுண்டரி, 5 சிக்சர்) கேட்ச் ஆனார். அடுத்த ஓவரில் ஆதித்யாவும் (31 ரன், 29 பந்து, ஒரு பவுண்டரி, 2 சிக்சர்) பெவிலியன் திரும்பினார்.

இதைத் தொடர்ந்து கேப்டன் பத்ரிநாத்தும், ஷாஜகானும் அணியின் ஸ்கோரை அதே வேகத்தில் கொண்டு சென்றனர். 20 ஓவர் முடிவில் காரைக்குடி அணி 3 விக்கெட் இழப்புக்கு 193 ரன்கள் சேர்த்தது. பத்ரிநாத் 42 ரன்களுடனும் (25 பந்து, 5 பவுண்டரி, ஒரு சிக்சர்), ஷாஜகான் 25 ரன்களுடனும் (23 பந்து, ஒரு பவுண்டரி, 2 சிக்சர்) களத்தில் இருந்தனர்.

கடின இலக்கை நோக்கி தொடர்ந்து விளையாடிய கோவை அணிக்கு தொடக்கம் திருப்திகரமாக அமையவில்லை. சூர்யபிரகாஷ் ஒரு ரன்னிலும், அனிருத் சீத்தா ராம் 11 ரன்னிலும் ஆட்டம் இழந்தனர்.

இதன் பின்னர் கேப்டன் முரளிவிஜயும், விக்கெட் கீப்பர் ரோகித்தும் இணைந்து அணியை சிக்கலில் இருந்து மீட்டெடுத்து ரன்ரேட்டையும் 10 ரன்களுக்கு மேலாக நகர்த்தினர். விஜய் 34 ரன்களில் (27 பந்து, 4 பவுண்டரி) ரன்-அவுட் ஆக, கோவை அணிக்கு நெருக்கடி உண்டானது.

மறுமுனையில் ரோகித், காரைக்குடி பவுலர்களை நைய புடைத்து எடுத்தார். குறிப்பிட்ட இடைவெளியில் விக்கெட் விழுந்தாலும் அவரை மட்டும் காரைக்குடி பவுலர்களால் அசைக்க முடியவில்லை.

கடைசி ஓவரில் கோவை அணியின் வெற்றிக்கு 14 ரன்கள் தேவைப்பட்டது. 20-வது ஓவரை வேகப்பந்து வீச்சாளர் சோனு யாதவ் வீசினார். முதல் பந்தை நோ-பாலாக வீச, அதை ரோகித் சிக்சருக்கு அனுப்பினார். எக்ஸ்டிரா வகையிலும் ஒரு ரன் கிடைத்தது. இதன் பின்னர் மீண்டும் வீசப்பட்ட பிரிஹிட் பந்தும் நோ-பாலாக மாற, அந்த பந்தை மைதானத்திற்கு வெளியே தூக்கியடித்து பரபரப்புக்கு முற்றுப்புள்ளி வைத்தார். அந்த சிக்சர் மூலம் சதத்தையும் ரோகித் நிறைவு செய்தார்.

கோவை அணி 19 ஓவர்களில் 6 விக்கெட்டுக்கு 194 ரன்கள் குவித்து 4 விக்கெட் வித்தியாசத்தில் வெற்றி பெற்று, காரைக்குடியை விரட்டியடித்தது. 26 வயதான ரோகித் 102 ரன்களுடன் (46 பந்து, 6 பவுண்டரி, 8 சிக்சர்) களத்தில் இருந்தார். டி.என்.பி.எல். கிரிக்கெட்டில் ஒரு வீரரின் அதிவேக சதம் இதுவாகும்.

இந்த வெற்றியின் மூலம் இறுதிப்போட்டிக்கான 2-வது தகுதி சுற்றில் கோவை கிங்ஸ் அணி, சேப்பாக் சூப்பர் கில்லீசை நெல்லையில் நாளை எதிர்கொள்ள இருக்கிறது.


Next Story