ஆஸ்திரேலியாவுக்கு எதிரான 2-வது ஆட்டத்திலும் இந்தியா வெற்றி


ஆஸ்திரேலியாவுக்கு எதிரான 2-வது ஆட்டத்திலும் இந்தியா வெற்றி
x
தினத்தந்தி 21 Sep 2017 11:00 PM GMT (Updated: 21 Sep 2017 7:46 PM GMT)

ஆஸ்திரேலியாவுக்கு எதிரான 2-வது ஒரு நாள் கிரிக்கெட் போட்டியிலும் இந்திய அணி அபார வெற்றி பெற்றது.

கொல்கத்தா,

இந்தியாவில் சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ள ஆஸ்திரேலிய கிரிக்கெட் அணி 5 போட்டிகள் கொண்ட ஒரு நாள் தொடரில் பங்கேற்றுள்ளது. சென்னையில் நடந்த முதலாவது ஆட்டத்தில் இந்திய அணி 26 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது.

இந்த நிலையில் இவ்விரு அணிகள் இடையிலான 2-வது ஒரு நாள் போட்டி கொல்கத்தா ஈடன்கார்டனில் நேற்று நடந்தது. இந்திய அணியில் மாற்றம் ஏதும் செய்யப்படவில்லை. ஆஸ்திரேலிய அணியில் பவுல்க்னெர், ஆடம் ஜம்பா நீக்கப்பட்டு அவர்களுக்கு பதிலாக கனே ரிச்சர்ட்சன், ஆஷ்டன் அகர் சேர்க்கப்பட்டனர்.

‘டாஸ்’ ஜெயித்த இந்திய கேப்டன் கோலி முதலில் பேட் செய்வதாக அறிவித்தார். இதன்படி ரோகித் சர்மாவும், ரஹானேவும் இந்தியாவின் இன்னிங்சை தொடங்கினர். ரோகித் சர்மாவின் ராசியான மைதானம் என்று அழைக்கப்படும் இங்கு இந்த முறை அவர் ஜொலிக்கவில்லை. 7 ரன்னில், பந்து வீசிய கவுல்டர்-நிலேவிடமே கேட்ச் ஆகிப்போனார்.

அடுத்து கேப்டன் விராட் கோலி, ரஹானேவுடன் இணைந்தார். வேகம் குறைந்த இந்த ஆடுகளம் இருவித தன்மையுடன் காணப்பட்டது. அதாவது பந்து திடீரென உயர்ந்து செல்வதும், தாழ்வாக செல்வதுமாக இருந்தது. சூழ்நிலைக்கு தகுந்தபடி நேர்த்தியான ஆட்டத்தை வெளிப்படுத்திய கோலி-ரஹானே ஜோடி அணியை சரிவில் இருந்து காப்பாற்றியது. 19.5 ஓவர்களில் இந்தியா 100 ரன்களை தொட்டது.

இவர்கள் ஆடிய விதத்தை பார்த்த போது இந்திய அணி 300 ரன்களை நெருங்கும் போலவே தோன்றியது. அணியின் ஸ்கோர் 121 ரன்களாக (23.4 ஓவர்) உயர்ந்த போது, ரஹானே (55 ரன், 64 பந்து, 7 பவுண்டரி) தேவையில்லாமல் 2-வது ரன்னுக்கு ஆசைப்பட்டு ரன்-அவுட் ஆனார். அடுத்து இறங்கிய மனிஷ் பாண்டே (3 ரன்) வந்த வேகத்தில் பெவிலியன் திரும்பினார்.

இதன் பின்னர் கேதர் ஜாதவ் நுழைந்தார். இவர், கோலிக்கு ஓரளவு ஒத்துழைப்பு கொடுக்க இந்திய அணி 35 ஓவர்களில் 3 விக்கெட்டுக்கு 185 ரன்களுடன் நல்ல நிலையை எட்டியது. இந்த சூழலில் கேதர் ஜாதவ் (24 ரன், 24 பந்து, 2 பவுண்டரி, ஒரு சிக்சர்), கேப்டன் விராட் கோலி (92 ரன், 107 பந்து, 8 பவுண்டரி) ஆகியோரை கவுல்டர்-நிலே தனது அடுத்தடுத்த ஓவர்களில் காலி செய்தார். 31-வது சதத்தை அடிப்பார் என்று எதிர்பார்க்கப்பட்ட கோலிக்கு, பந்து பேட்டின் உள்பகுதியில் பட்டு ஸ்டம்பை பதம் பார்த்தது. அடுத்து வந்த விக்கெட் கீப்பர் டோனியும்(5 ரன்) தாக்குப்பிடிக்கவில்லை. 4 ஓவர் இடைவெளியில் 3 முன்னணி தலைகள் உருண்டதால் ரன்வேகம் தடாலடியாக சரிவுக்குள்ளானது. ஆட்டத்தின் போக்கு ஆஸ்திரேலியாவுக்கு சாதகமாக மாறியது.

முந்தைய ஆட்டத்தின் ‘ஹீரோ’ ஹர்திக் பாண்ட்யாவும் (20 ரன், 26 பந்து, 2 பவுண்டரி) பெரிய அளவில் கைகொடுக்கவில்லை. இதற்கிடையே 47.4 ஓவர்களின் போது மழை குறுக்கிட்டதால் 15 நிமிடம் ஆட்டம் பாதிக்கப்பட்டது. தொடர்ந்து விளையாடிய இந்திய அணி 50 ஓவர்களில் 252 ரன்களுக்கு ஆல்-அவுட் ஆனது. கடைசி 15 ஓவர்களில் இந்திய பேட்ஸ்மேன்கள் வெறும் 67 ரன்கள் மட்டுமே எடுத்தனர். ஆஸ்திரேலிய தரப்பில் வேகப்பந்து வீச்சாளர்கள் நாதன் கவுல்டர்-நிலே, கனே ரிச்சர்ட்சன் தலா 3 விக்கெட்டுகளை கைப்பற்றினர்.

பின்னர் 253 ரன்கள் இலக்கை நோக்கி ஆடிய ஆஸ்திரேலிய அணி திணறியது. தொடக்க ஆட்டக்காரர்கள் கார்ட்ரைட் (1 ரன்), துணை கேப்டன் டேவிட் வார்னர் (1 ரன்) இருவரும் புவனேஷ்வர் குமாரின் பந்து வீச்சுக்கு இரையானார்கள். இதன் பிறகு கேப்டன் ஸ்டீவன் சுமித் நிலைத்து நின்று ஆட, மறுமுனையில் சீரான இடைவெளியில் விக்கெட்டுகள் விழுந்த வண்ணம் இருந்தது.

தனது 100-வது ஒரு நாள் போட்டியில் கால்பதித்த ஸ்டீவன் சுமித் 59 ரன்களில் ( 76 பந்து, 8 பவுண்டரி) ஹர்திக் பாண்ட்யா வீசிய ‘ஷாட்பிட்ச்’ பந்தை தூக்கியடித்த போது கேட்ச் ஆனார். அதன் தொடர்ச்சியாக சுழற்பந்து வீச்சாளர் குல்தீப் யாதவ், ‘ஹாட்ரிக்’ விக்கெட் சாய்க்க, ஆஸ்திரேலியா தடம் புரண்டது.

இறுதி கட்டத்தில் ஆல்-ரவுண்டர் மார்கஸ் ஸ்டோனிஸ் தனி வீரராக போராடினார். கடைசி விக்கெட் ஜோடியான கனே ரிச்சர்ட்சனின் துணையுடன் அவர் சில சிக்சர்களை பறக்கவிட்டு மிரட்டினார். ரிச்சர்ட்சனை பாதுகாக்கும் வகையில் ஒரு ரன் எடுப்பதையே தவிர்த்து பார்த்தார். ஆனாலும் கடைசியில் ரிச்சர்ட்சன் (0) புவனேஷ்வர்குமாரின் பந்து வீச்சில் எல்.பி.டபிள்யூ. ஆனார். டி.ஆர்.எஸ். முறைப்படி அப்பீல் செய்தும் பலன் இல்லை. ஸ்டோனிசின் (62 ரன், 65 பந்து, 6 பவுண்டரி, 3 சிக்சர்) முயற்சி வீண் ஆனது.

ஆஸ்திரேலிய அணி 43.1 ஓவர்களில் 202 ரன்களுக்கு ஆல்-அவுட் ஆனது. இதன் மூலம் இந்தியா 50 ரன்கள் வித்தியாசத்தில் அபார வெற்றி பெற்றது. புவனேஷ்வர்குமார், குல்தீப் யாதவ் தலா 3 விக்கெட்டுகளை வீழ்த்தினர். விராட் கோலி ஆட்டநாயகனாக தேர்வு செய்யப்பட்டார்.

வெற்றியின் மூலம் 5 போட்டிகள் கொண்ட ஒரு நாள் தொடரில் இந்தியா 2-0 என்ற கணக்கில் முன்னிலை பெற்றுள்ளது. 3-வது ஒரு நாள் போட்டி வருகிற 24-ந்தேதி இந்தூரில் நடக்கிறது.

Next Story