கிரிக்கெட்

இலங்கைக்கு எதிரான கடைசி ஒரு நாள் போட்டியில் இந்தியா எளிதில் வெற்றி + "||" + Against Sri Lanka Last one day match India won easily

இலங்கைக்கு எதிரான கடைசி ஒரு நாள் போட்டியில் இந்தியா எளிதில் வெற்றி

இலங்கைக்கு எதிரான கடைசி ஒரு நாள் போட்டியில் இந்தியா எளிதில் வெற்றி
இலங்கைக்கு எதிரான கடைசி ஒரு நாள் கிரிக்கெட் போட்டியில் இந்திய அணி 8 விக்கெட் வித்தியாசத்தில் அபார வெற்றி பெற்றது. தவான் சதம் அடித்தார்.
விசாகப்பட்டினம்,

இந்தியா - இலங்கை அணிகள் இடையிலான 3-வது மற்றும் கடைசி ஒரு நாள் கிரிக்கெட் போட்டி விசாகப்பட்டினத்தில் நேற்று நடந்தது. இரு அணியிலும் தலா ஒரு மாற்றம் செய்யப்பட்டன. இந்திய அணியில் உடல்நலக்குறைவால் அவதிப்படும் வாஷிங்டன் சுந்தருக்கு பதிலாக குல்தீப் யாதவ் சேர்க்கப்பட்டார். இலங்கை அணியில் திரிமன்னே நீக்கப்பட்டு சமரவிக்ரமா இடம் பிடித்தார்.


‘டாஸ்’ ஜெயித்த இந்திய கேப்டன் ரோகித் சர்மா, ‘இரவில் பனிப்பொழிவுக்கு மத்தியில் பந்தை துல்லியமாக பிடித்து வீசுவது கடினம்’ என்பதை மனதில் கொண்டு முதலில் பந்து வீச்சை தேர்வு செய்தார்.

இதன்படி இலங்கை அணி முதலில் பேட்டிங் செய்தது. உபுல் தரங்காவும், குணதிலகாவும் இலங்கை அணியின் தொடக்க ஆட்டக்காரர்களாக இறங்கினார்கள். குணதிலகா 13 ரன்னில் பும்ராவின் பந்து வீச்சில் ஆட்டம் இழந்தார்.

இதன் பின்னர் தரங்காவும், சமரவிக்ரமாவும் கைகோர்த்து தங்கள் அணியை சரிவில் இருந்து மீட்கும் பணியில் ஈடுபட்டனர். இந்திய பந்து வீச்சை தரங்கா பின்னியெடுத்தார். குறிப்பாக ஹர்திக் பாண்ட்யாவின் ஒரே ஓவரில் தொடர்ச்சியாக 5 பவுண்டரிகளை சாத்தினார். இதனால் இலங்கை அணியின் ஸ்கோர் துரிதமாக நகர்ந்தது. 17-வது ஓவரில் அந்த அணி 100 ரன்களை தொட்டது. ஸ்கோர் 136 ரன்களாக உயர்ந்த போது சமரவிக்ரமா (42 ரன், 57 பந்து, 5 பவுண்டரி), யுஸ்வேந்திர சாஹலின் பந்து வீச்சை தூக்கியடித்த போது தவானிடம் சிக்கினார். அடுத்து முன்னாள் கேப்டன் மேத்யூஸ் வந்தார்.

தொடர்ந்து அதிரடியில் மிரட்டிய தரங்கா, சாஹலின் ஓவர்களில் மட்டும் மூன்று சிக்சர்களை பறக்க விட்டார். 27 ஓவர் முடிவில் இலங்கை அணி 2 விக்கெட்டுக்கு 160 ரன்கள் எடுத்ததை பார்த்த போது, எளிதில் 300 ரன்களை கடக்கும் என்றே நினைக்கத்தோன்றியது.

ஆனால் ஒரே ஓவரில் சுழற்பந்து வீச்சாளர் குல்தீப் யாதவ் வைத்த ‘இரட்டை செக்’ ஆட்டத்தின் போக்கை தலைகீழாக புரட்டிபோட்டது. தரங்கா 95 ரன்களில் (82 பந்து, 12 பவுண்டரி, 3 சிக்சர்) குல்தீப்பின் பந்து வீச்சில் நூலிலை வித்தியாசத்தில் டோனியால் ஸ்டம்பிங் செய்யப்பட்டார். 4-வது விக்கெட்டுக்கு ஆட வந்த டிக்வெல்லா அடுத்தடுத்து இரண்டு பவுண்டரி அடித்த கையோடு அதே ஓவரில் ‘ஸ்லிப்’பில் நின்ற ஸ்ரேயாஸ் அய்யரிடம் கேட்ச் ஆகிப்போனார். சிறிது நேரத்தில் மேத்யூசும் (17 ரன்) நடையை கட்டினார்.

இதன் பிறகு இலங்கை அணியினர் மகுடிக்கு மயங்கிய பாம்பு போல் ஒரேயடியாக ‘சரண்’ அடைந்தனர். வேகம் குறைந்த இந்த ஆடுகளத்தில் சுழற்பந்து நன்கு சுழன்று திரும்பியது. குல்தீப், யுஸ்வேந்திர சாஹல் ஆகியோரின் சுழல் தாக்குதலில் சிக்கி இலங்கை அணி முற்றிலும் சீர்குலைந்தது.

44.5 ஓவர்களில் அந்த அணி 215 ரன்களுக்கு ஆல்-அவுட் ஆனது. கடைசி 17 ஓவர்களில் இலங்கை அணி வெறும் 2 பவுண்டரி மட்டுமே அடித்தது. மேலும் கடைசி 55 ரன்களுக்கு 8 விக்கெட்டுகளை பறிகொடுத்ததும் கவனிக்கத்தக்கது. இந்திய தரப்பில் குல்தீப், சாஹல் தலா 3 விக்கெட்டுகளை சாய்த்தனர்.

இதையடுத்து 216 ரன்கள் இலக்கை நோக்கி இந்திய அணி விளையாடியது. முந்தைய ஆட்டத்தில் இரட்டை சதம் நொறுக்கிய கேப்டன் ரோகித் சர்மா (7 ரன்) இந்த முறை ஏமாற்றினார். சுழற்பந்து வீச்சாளர் அகிலா தனஞ்ஜெயாவின் பந்து வீச்சில் கிளன் போல்டு ஆனார்.

இதன் பின்னர் ஷிகர் தவானும், ஸ்ரேயாஸ் அய்யரும் ஜோடி சேர்ந்து அணியை நிமிர வைத்தனர். இலங்கை பந்து வீச்சை சிரமமின்றி எதிர்கொண்ட இவர்கள் வெற்றிப்பாதைக்கு அடித்தளம் போட்டனர். தொடர்ந்து 2-வது அரைசதத்தை பூர்த்தி செய்த ஸ்ரேயாஸ் அய்யர் 65 ரன்களில் (63 பந்து, 8 பவுண்டரி, ஒரு சிக்சர்) கேட்ச் ஆனார். தொடர்ந்து, தினேஷ் கார்த்திக் களத்திற்குள் நுழைந்தார்.

ஷிகர் தவானும் அவ்வப்போது பந்தை எல்லைக்கோட்டிற்கு ஓடவிட்டு ரசிகர்களை குதூகலப்படுத்த தவறவில்லை. தினேஷ் கார்த்திக் 7 ரன்னில் இருந்த போது, அவருக்கு நடுவர் எல்.பி.டபிள்யூ. வழங்கினார். பிறகு டி.ஆர்.எஸ். முறையில் அப்பீல் செய்த போது பந்து முதலில் பேட்டில் உரசுவது தெரிய வந்ததால் தினேஷ் கார்த்திக் தப்பினார்.

இன்னொரு பக்கம், அபாரமான ஆட்டத்தை வெளிப்படுத்திய ஷிகர் தவான் சதத்தை நோக்கி முன்னேறினார். அணியின் வெற்றிக்கு 10 ரன் தேவையாக இருந்த போது அவர் மூன்று இலக்கை எட்ட 8 ரன் தேவைப்பட்டது. அப்போது தொடர்ந்து 2 பவுண்டரி விளாசி தவான் தனது 12-வது சதத்தை எட்டினார். இறுதியில் தினேஷ் கார்த்திக் பவுண்டரியுடன் ஆட்டத்தை தித்திப்பாக முடித்து வைத்தார்.

இந்திய அணி 32.1 ஓவர்களில் 2 விக்கெட்டுக்கு 219 ரன்கள் சேர்த்து 8 விக்கெட் வித்தியாசத்தில் சுலபமாக வெற்றி பெற்றது. தவான் 100 ரன்களுடனும் (85 பந்து, 13 பவுண்டரி, 2 சிக்சர்), தினேஷ் கார்த்திக் 26 ரன்களுடனும் (31 பந்து, 3 பவுண்டரி) களத்தில் இருந்தனர். குல்தீப் யாதவ் ஆட்டநாயகன் விருதையும், ஷிகர் தவான் தொடர்நாயகன் விருதையும் பெற்றனர்.

இந்த வெற்றியின் மூலம் ஒரு நாள் தொடரை 2-1 என்ற கணக்கில் இந்தியா தனதாக்கியது. முன்னதாக முதலாவது ஆட்டத்தில் இலங்கை அணி 7 விக்கெட் வித்தியாசத்திலும், 2-வது ஆட்டத்தில் இந்தியா 141 ரன்கள் வித்தியாசத்திலும் வெற்றி பெற்றிருந்தன. சொந்த மண்ணில் இலங்கையுடன் ஒரு நாள் தொடரை இழந்ததில்லை என்ற பெருமையையும் இந்தியா தக்கவைத்துக் கொண்டது.

அடுத்து இந்தியா-இலங்கை இடையே 3 போட்டிகள் கொண்ட 20 ஓவர் தொடர் நடத்தப்படுகிறது. முதலாவது 20 ஓவர் போட்டி நாளை மறுதினம் (புதன்கிழமை) கட்டாக்கில் நடக்கிறது.


4 ஆயிரம் ரன்களை கடந்தார், தவான்

* இலங்கை வீரர் தரங்கா ஒரு நாள் போட்டியில் இந்த ஆண்டில் ஆயிரம் ரன்களை (25 ஆட்டத்தில் 1,011 ரன்) கடந்த 3-வது வீரர் என்ற சிறப்பை பெற்றார். ஏற்கனவே இந்தியாவின் விராட் கோலி (1,460 ரன்), ரோகித் சர்மா (1,293 ரன்) ஆயிரம் ரன்களை கடந்திருக்கிறார்கள்.

* இந்திய தொடக்க ஆட்டக்காரர் ஷிகர் தவான் 62 ரன்கள் எடுத்த போது ஒரு நாள் போட்டியில் 4 ஆயிரம் ரன்களை (95-வது இன்னிங்ஸ்) கடந்தார். இந்த மைல்கல்லை அதிவேகமாக எட்டிய 6-வது வீரர் தவான் ஆவார். இந்திய அளவில் விராட் கோலிக்கு (93 இன்னிங்ஸ்) பிறகு இந்த இலக்கை வேகமாக அடைந்திருக்கிறார்.

* 2017-ம் ஆண்டில் இந்திய அணியின் ஒரு நாள் போட்டி பயணம் நேற்றோடு நிறைவடைந்தது. இந்திய அணி இந்த ஆண்டில் 29 ஆட்டங்களில் பங்கேற்று 21-ல் வெற்றியும், 7-ல் தோல்வியும் கண்டுள்ளது. ஒரு ஆட்டத்தில் முடிவில்லை. இந்த ஆண்டில் அதிக வெற்றிகளை ருசித்த அணி இந்தியா தான். அதே சமயம் இலங்கை அணி 29 ஆட்டங்களில் விளையாடி 5-ல் மட்டுமே வெற்றி பெற்றிருக்கிறது.

* விசாகப்பட்டினத்தில் 7-வது ஆட்டத்தில் ஆடிய இந்தியா அதில் பதிவு செய்த 6-வது வெற்றி இதுவாகும்.

* இந்திய அணி தொடர்ச்சியாக கைப்பற்றிய 8-வது ஒரு நாள் தொடர் இதுவாகும். இரு நாடுகள் இடையிலான ஒரு நாள் தொடரை தொடர்ச்சியாக அதிக தடவை வென்ற அணி வெஸ்ட் இண்டீஸ் (14) ஆகும். அடுத்த இடத்தில் ஆஸ்திரேலியாவும், இந்தியாவும் (தலா 8) உள்ளன.