டெஸ்ட் தரவரிசை புள்ளி எண்ணிக்கையில் பிராட்மேனின் சாதனையை நெருங்குகிறார், ஸ்டீவன் சுமித்


டெஸ்ட் தரவரிசை புள்ளி எண்ணிக்கையில் பிராட்மேனின் சாதனையை நெருங்குகிறார், ஸ்டீவன் சுமித்
x
தினத்தந்தி 19 Dec 2017 9:30 PM GMT (Updated: 19 Dec 2017 6:49 PM GMT)

டெஸ்ட் கிரிக்கெட் பேட்ஸ்மேன்களின் தரவரிசை புள்ளி எண்ணிக்கையில் பிராட்மேனின் சாதனையை ஆஸ்திரேலிய கேப்டன் ஸ்டீவன் சுமித் நெருங்கியுள்ளார்.

துபாய்,

டெஸ்ட் கிரிக்கெட் பேட்ஸ்மேன்களின் தரவரிசை புள்ளி எண்ணிக்கையில் பிராட்மேனின் சாதனையை ஆஸ்திரேலிய கேப்டன் ஸ்டீவன் சுமித் நெருங்கியுள்ளார்.

மிரட்டும் ஸ்டீவன் சுமித்

ஆஸ்திரேலிய கிரிக்கெட் அணியின் கேப்டன் ஸ்டீவன் சுமித், பேட்டிங்கில் பிரமிப்பூட்டும் வகையில் விளையாடி வருகிறார். எதிரணி பவுலர்களுக்கு சிம்மசொப்பனமாக விளங்கும் ஸ்டீவன் சுமித், ஆ‌ஷஸ் தொடரில் இங்கிலாந்துக்கு எதிரான 3–வது டெஸ்டில் 239 ரன்கள் குவித்து அசத்தினார். இதன் மூலம் ஆஸ்திரேலிய அணி இன்னிங்ஸ் வெற்றி பெற்றதுடன் ஆ‌ஷஸ் கோப்பையையும் கைப்பற்றியது.

28 வயதான ஸ்டீவன் சுமித் இதுவரை 59 டெஸ்டுகளில் பங்கேற்று 22 சதம், 21 அரைசதங்கள் உள்பட 5,796 ரன்கள் (சராசரி 62.32) சேர்த்துள்ளார். இதில் 14 சதங்கள் கேப்டனாக எடுத்தவை ஆகும். குறைந்தது 20 இன்னிங்ஸ் ஆடிய வீரர்களின் பட்டியலில் டான் பிராட்மேனுக்கு (99.94) அடுத்து சிறந்த சராசரியை பெற்றிருப்பவர், ஸ்டீவன் சுமித் தான்.

பிராட்மேனை நெருங்குகிறார்

சர்வதேச கிரிக்கெட் கவுன்சிலின் (ஐ.சி.சி.) டெஸ்ட் தரவரிசையில் அதிக புள்ளிகளை குவித்தவர் என்ற பெருமை, ‘கிரிக்கெட்டின் பிதாமகன்’ என்று அழைக்கப்படும் மறைந்த டான் பிராட்மேனின் வசம் அரை நூற்றாண்டு காலத்திற்கு மேலாக உள்ளது. 1948–ம் ஆண்டு பிராட்மேன் 961 புள்ளிகளை எட்டியதே இதுநாள் வரை ஒரு வீரரின் அதிகபட்ச ஐ.சி.சி. புள்ளி எண்ணிக்கையாகும்.

பிராட்மேனின் இச்சாதனையை ஸ்டீவன் சுமித் வெகுவாக நெருங்கியுள்ளார். நேற்று வெளியிடப்பட்ட புதிய தரவரிசை பட்டியலில் ஸ்டீன் சுமித் 7 புள்ளிகள் கூடுதலாக பெற்று மொத்தம் 945 புள்ளிகளுடன், இங்கிலாந்தின் லென் ஹட்டனை (இவர் 1954–ம் ஆண்டு 945 புள்ளிகள் பெற்றிருந்தார்) சமன் செய்துள்ளார். இதே போன்று அவரது ரன்வேட்டை தொடரும் பட்சத்தில், விரைவில் பிராட்மேனின் தரவரிசை புள்ளி சாதனையை ஸ்டீவன் சுமித் நொறுக்கி விடுவார் என்பதில் சந்தேகம் இல்லை.

புஜாரா முன்னேற்றம்

தற்போதைய டெஸ்ட் வீரர்களின் தரவரிசை நிலவரப்படி ஸ்டீவன் சுமித் 945 புள்ளிகளுடன் முதலிடத்தில் இருக்கிறார். ஏறக்குறைய 2 ஆண்டுகளாக அதாவது 114 டெஸ்ட் போட்டிகளில் அவர் ‘நம்பர் ஒன்’ அரியணையில் தொடருவது கவனிக்கத்தக்கது. இந்திய கேப்டன் விராட் கோலி 893 புள்ளிகளுடன் 2–வது இடத்தில் நீடிக்கிறார்.

ஆ‌ஷஸ் 3–வது டெஸ்டில் 20, 14 ரன் வீதம் எடுத்து சொதப்பிய இங்கிலாந்து கேப்டன் ஜோ ரூட் 2 இடங்கள் சரிந்து 5–வது இடத்துக்கு (852 புள்ளி) தள்ளப்பட்டார். இதனால் இந்திய வீரர் புஜாரா, நியூசிலாந்து கேப்டன் கனே வில்லியம்சன் தலா ஒரு இடம் முன்னேறியுள்ளனர். புஜாரா 3–வது இடத்தையும் (873 புள்ளி), வில்லியம்சன் 4–வது இடத்தையும் (855 புள்ளி) பிடித்துள்ளனர். 6 முதல் 10–வது இடங்களில் முறையே டேவிட் வார்னர் (ஆஸ்திரேலியா), அம்லா (தென்ஆப்பிரிக்கா), அசார் அலி (பாகிஸ்தான்), சன்டிமால் (இலங்கை), ராஸ் டெய்லர் (நியூசிலாந்து) தொடருகிறார்கள்.

பவுலர்களின் வரிசை எப்படி?

டெஸ்ட் கிரிக்கெட் பந்து வீச்சாளர்களின் தரவரிசையில் டாப்–4 இடத்தில் மாற்றம் இல்லை. இங்கிலாந்தின் ஜேம்ஸ் ஆண்டர்சன் முதலிடமும் (892 புள்ளி), தென்ஆப்பிரிக்காவின் ரபடா 2–வது இடமும் (876 புள்ளி), இந்தியாவின் ரவீந்திர ஜடேஜா 3–வது இடமும் (870 புள்ளி), அஸ்வின் 4–வது இடமும் (829 புள்ளி) வகிக்கிறார்கள். ஆ‌ஷஸ் டெஸ்டில் இரண்டு இன்னிங்சையும் சேர்த்து 8 விக்கெட்டுகள் வீழ்த்திய ஆஸ்திரேலிய வேகப்பந்து வீச்சாளர் ஹேசில்வுட் ஒரு இடம் ஏற்றம் கண்டு, 5–வது இடத்தை (824 புள்ளி) பெற்றிருக்கிறார்.

அணிகளின் தரவரிசையில் இந்தியா 124 புள்ளிகளுடன் கம்பீரமாக முதலிடத்தில் பயணிக்கிறது. தென்ஆப்பிரிக்கா 111 புள்ளிகளுடன் 2–வது இடத்தில் இருக்கிறது.


Next Story