கிரிக்கெட்

முதலாவது 20 ஓவர் கிரிக்கெட்: இந்திய அணி அபார வெற்றி இலங்கையை 87 ரன்னில் சுருட்டியது + "||" + The first 20 over cricket: The Indian team is a great success

முதலாவது 20 ஓவர் கிரிக்கெட்: இந்திய அணி அபார வெற்றி இலங்கையை 87 ரன்னில் சுருட்டியது

முதலாவது 20 ஓவர் கிரிக்கெட்:
இந்திய அணி அபார வெற்றி
இலங்கையை 87 ரன்னில் சுருட்டியது
கட்டாக்கில் நடந்த முதலாவது 20 ஓவர் கிரிக்கெட் போட்டியில் இலங்கையை 87 ரன்களில் சுருட்டி இந்திய அணி அபார வெற்றி பெற்றது.
கட்டாக்,

கட்டாக்கில் நடந்த முதலாவது 20 ஓவர் கிரிக்கெட் போட்டியில் இலங்கையை 87 ரன்களில் சுருட்டி இந்திய அணி அபார வெற்றி பெற்றது.

20 ஓவர் கிரிக்கெட்

இந்தியாவுக்கு வந்துள்ள இலங்கை கிரிக்கெட் அணி ஏற்கனவே டெஸ்ட் மற்றும் ஒரு நாள் தொடர்களை இழந்து விட்டது. அடுத்ததாக 3 போட்டிகள் கொண்ட 20 ஓவர் தொடரில் பங்கேற்கிறது.

இதன்படி இந்தியா-இலங்கை அணிகள் இடையிலான முதலாவது 20 ஓவர் போட்டி ஒடிசா மாநிலம் கட்டாக்கில் நேற்றிரவு நடந்தது. இது இலங்கை அணியின் 100-வது சர்வதேச 20 ஓவர் போட்டியாகும். இந்த மைல்கல்லை எட்டும் 4-வது அணி இலங்கை ஆகும். ‘டாஸ்’ ஜெயித்த இலங்கை கேப்டன் திசரா பெரேரா முதலில் பந்து வீச்சை தேர்வு செய்தார்.

இதன்படி கேப்டன் ரோகித் சர்மாவும், லோகேஷ் ராகுலும் இந்தியாவின் தொடக்க ஆட்டக்காரர்களாக களம் இறங்கினர். ரோகித் சர்மா நீண்ட நேரம் நிலைக்கவில்லை. அவர் (17 ரன், 13 பந்து 2 பவுண்டரி), மேத்யூசின் பந்து வீச்சில் தூக்கியடித்த போது கேட்ச் ஆனார். மூன்று வடிவிலான கிரிக்கெட்டையும் சேர்த்து மேத்யூசின் பந்து வீச்சுக்கு ரோகித் சர்மா இரையாவது இது 10-வது முறையாகும். வேறு எந்த பவுலருக்கு எதிராகவும் இத்தனை தடவை அவர் அவுட் ஆனதில்லை.

ராகுல் 61 ரன்

அடுத்து லோகேஷ் ராகுலுடன், ஸ்ரேயாஸ் அய்யர் இணைந்தார். இருவரும் சீரான பவுண்டரிகளுடன் அணியின் ஸ்கோரை கணிசமாக உயர்த்தினர். மேத்யூசின் பந்து வீச்சில் ராகுல் ஒரு சிக்சரும் பறக்கவிட்டு ரசிகர்களை உற்சாகப்படுத்தினார்.

அணியின் ஸ்கோர் 101 ரன்களாக (12.4 ஓவர்) உயர்ந்த போது ஸ்ரேயாஸ் அய்யர் 24 ரன்களில் விக்கெட் கீப்பர் டிக்வெல்லாவிடம் கேட்ச் ஆனார். தொடர்ந்து விக்கெட் கீப்பர் டோனி நுழைந்தார். மறுமுனையில் லோகேஷ் ராகுல் தனது பங்குக்கு 61 ரன்கள் (48 பந்து, 7 பவுண்டரி, ஒரு சிக்சர்) எடுத்த நிலையில் கிளன் போல்டு ஆனார்.

இதன் பின்னர் டோனியுடன், மனிஷ் பாண்டே கைகோர்த்தார். மிடில் ஓவர்களில் இந்தியாவின் ரன்வேகத்தை இலங்கை பவுலர்கள் ஓரளவு கட்டுப்படுத்தினர். அதாவது 11 முதல் 16 ஓவர்கள் இடைவெளியில் இந்திய வீரர்கள் வெறும் 29 ரன்கள் மட்டுமே எடுத்திருந்தனர்.

இந்தியா 180 ரன்

ஆனால் இறுதிகட்டத்தில் இலங்கை பந்து வீச்சை துவம்சம் செய்தனர். கடினமான ஆடுகளத்தில் டோனியும், மனிஷ் பாண்டேவும் முடிந்தவரை வேகமாக மட்டையை சுழட்டினர். இன்னிங்சின் கடைசி பந்தை டோனி, தனக்கே உரிய பாணியில் சிக்சருடன் முடித்து வைத்தார்.

நிர்ணயிக்கப்பட்ட 20 ஓவர்களில் இந்தியா 3 விக்கெட் இழப்புக்கு 180 ரன்கள் குவித்தது. டோனி 39 ரன்களுடனும் (22 பந்து, 4 பவுண்டரி, ஒரு சிக்சர்), மனிஷ் பாண்டே 32 ரன்களுடனும் (18 பந்து, 2 பவுண்டரி, 2 சிக்சர்) களத்தில் இருந்தனர். கடைசி 4 ஓவர்களில் மட்டும் இந்திய அணி 61 ரன்களை திரட்டியது.

இலங்கை படுதோல்வி

பின்னர் 181 ரன்கள் சேர்த்தால் வெற்றி என்ற இலக்கை நோக்கி இலங்கை அணி விளையாடியது. நெருக்கடிக்கு மத்தியில் களம் கண்ட இலங்கை பேட்ஸ்மேன்கள் மிகவும் திணறினர். தொடக்க ஆட்டக்காரர்கள் டிக்வெல்லா 13 ரன்னிலும், தரங்கா 23 ரன்னிலும் கேட்ச் ஆனார்கள்.

இதன் பிறகு சுழற்பந்து வீச்சாளர்கள் யுஸ்வேந்திர சாஹல், குல்தீப் யாதவ் கொடுத்த குடைச்சலில் இலங்கை வீரர்கள் ஒட்டுமொத்தமாக பணிந்து விட்டனர். 16 ஓவர்கள் மட்டுமே தாக்குப்பிடித்த இலங்கை அணி 87 ரன்னில் சுருண்டது. இதன் மூலம் இந்தியா 93 ரன்கள் வித்தியாசத்தில் ‘மெகா’ வெற்றியை பெற்றது. 20 ஓவர் கிரிக்கெட்டில் இலங்கையின் 2-வது மோசமான ஸ்கோர் இதுவாகும். யுஸ்வேந்திர சாஹல் 4 விக்கெட்டுகளும், ஹர்திக் பாண்ட்யா 3 விக்கெட்டுகளும், குல்தீப் 2 விக்கெட்டுகளும் வீழ்த்தினர். யுஸ்வேந்திர சாஹல் ஆட்டநாயகனாக தேர்வு செய்யப்பட்டார்.

வெற்றியின் மூலம் தொடரில் இந்தியா 1-0 என்ற கணக்கில் முன்னிலை வகிக்கிறது. 2-வது 20 ஓவர் போட்டி நாளை (வெள்ளிக்கிழமை) இந்தூரில் நடக்கிறது.