ரஞ்சி கிரிக்கெட் விதர்பா அணி திரில் வெற்றி கர்நாடகாவை வீழ்த்தி இறுதிப்போட்டிக்கு முன்னேறியது


ரஞ்சி கிரிக்கெட் விதர்பா அணி திரில் வெற்றி கர்நாடகாவை வீழ்த்தி இறுதிப்போட்டிக்கு முன்னேறியது
x
தினத்தந்தி 21 Dec 2017 10:00 PM GMT (Updated: 21 Dec 2017 8:26 PM GMT)

ரஞ்சி கோப்பை கிரிக்கெட் அரைஇறுதிப்போட்டியில் விதர்பா அணி 5 ரன் வித்தியாசத்தில் 8 முறை சாம்பியனான கர்நாடகாவை வீழ்த்தி முதல்முறையாக இறுதிப்போட்டிக்கு முன்னேறியது.

கொல்கத்தா,

ரஞ்சி கோப்பை கிரிக்கெட் அரைஇறுதிப்போட்டியில் விதர்பா அணி 5 ரன் வித்தியாசத்தில் 8 முறை சாம்பியனான கர்நாடகாவை வீழ்த்தி முதல்முறையாக இறுதிப்போட்டிக்கு முன்னேறியது.

அரைஇறுதி ஆட்டம்

ரஞ்சி கோப்பை கிரிக்கெட் போட்டியில் கர்நாடகம்–விதர்பா அணிகள் இடையிலான அரைஇறுதி ஆட்டம் கொல்கத்தாவில் நடந்தது. இதில் முதல் இன்னிங்சில் முறையே விதர்பா அணி 185 ரன்களும், கர்நாடகா அணி 301 ரன்களும் எடுத்தன. 116 ரன்கள் பின்தங்கிய நிலையில் 2–வது இன்னிங்சை ஆடிய விதர்பா அணி 313 ரன்களுக்கு ஆல்–அவுட் ஆனது.

இதனை அடுத்து 198 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் 2–வது இன்னிங்சை ஆடிய கர்நாடக அணி 4–வது நாள் ஆட்டம் முடிவில் 43 ஓவர்களில் 7 விக்கெட் இழப்புக்கு 111 ரன்கள் எடுத்து இருந்தது. கேப்டன் வினய்குமார் 19 ரன்னுடனும், ஸ்ரேயாஸ் கோபால் 1 ரன்னுடனும் களத்தில் இருந்தனர்.

வினய்குமார் 36 ரன்னில் அவுட்

நேற்று 5–வது மற்றும் கடைசி நாள் ஆட்டம் நடந்தது. மேலும் 87 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற நிலையுடன் வினய்குமார், ஸ்ரேயாஸ் கோபால் ஆகியோர் ஆடினார்கள். வேகப்பந்து வீச்சாளர் குர்பானி தொடர்ந்து தனது அசத்தலான பந்து வீச்சால் மிரட்டினார். கேப்டன் வினய்குமார் 36 ரன் (48 பந்துகளில் 5 பவுண்டரி, ஒரு சிக்சருடன்) எடுத்த நிலையில் குர்பானி பந்து வீச்சில் விக்கெட் கீப்பர் வாத்கரிடம் கேட்ச் கொடுத்து அவுட் ஆனார்.

இதனை அடுத்து அபிமன்யு மிதுன், ஸ்ரேயாஸ் கோபாலுடன் இணைந்தார். ஸ்ரேயாஸ் கோபால் நிதானமான ஆட்டத்தை கடைப்பிடிக்க அபிமன்யு மிதுன் அதிரடி காட்டினார். இந்த கூட்டணியின் சிறப்பான ஆட்டத்தால் கர்நாடக அணி வெற்றியை நெருங்குவது போல் தெரிந்தது. இதனால் ஆட்டத்தில் பரபரப்பு நிலவியது. அணியின் ஸ்கோர் 189 ரன்னாக உயர்ந்த போது அபிமன்யு மிதுன் (33 ரன்கள், 26 பந்துகளில் 5 பவுண்டரியுடன்) குர்பானியின் பந்து வீச்சில் சத்வாதேவிடம் கேட்ச் கொடுத்து நடையை கட்டினார். அத்துடன் ஆட்டம் விதர்பா அணிக்கு சாதகமானது.

விதர்பா அணி வெற்றி

அடுத்து களம் கண்ட அரவிந்த் (2 ரன்) விக்கெட்டையும் குர்பானி வீழ்த்தினார். கர்நாடக அணி 2–வது இன்னிங்சில் 59.1 ஓவர்களில் 192 ரன்னில் ‘ஆல்–அவுட்’ ஆனது. எனவே மராட்டிய மாநிலத்தை சேர்ந்த விதர்பா அணி 5 ரன் வித்தியாசத்தில் 8 முறை சாம்பியனான கர்நாடகாவை வீழ்த்தி திரில் வெற்றியை ருசித்து முதல்முறையாக இறுதிப்போட்டிக்கு முன்னேறியது. ஸ்ரேயாஸ் கோபால் 24 ரன்னுடன் (56 பந்துகளில் 4 பவுண்டரியுடன்) ஆட்டம் இழக்காமல் இருந்தார். விதர்பா அணி தரப்பில் குர்பானி 7 விக்கெட்டும், சித்தேஷ் நீரல் 2 விக்கெட்டும், உமேஷ் யாதவ் ஒரு விக்கெட்டும் கைப்பற்றினார்கள். குர்பானி முதல் இன்னிங்சில் 5 விக்கெட் வீழ்த்தி இருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.

இறுதிப்போட்டியில் டெல்லி–விதர்பா

இந்தூரில் வருகிற 29–ந் தேதி தொடங்கும் இறுதிப்போட்டியில் டெல்லி–விதர்பா அணிகள் பலப்பரீட்சை நடத்துகின்றன.


Next Story