கிரிக்கெட்

உடல்தகுதியிலும், சுறுசுறுப்பிலும் இளம் வீரர்களை மிஞ்சியவர் டோனி ரவிசாஸ்திரி புகழாரம் + "||" + Tony Raviasthary of the young players

உடல்தகுதியிலும், சுறுசுறுப்பிலும் இளம் வீரர்களை மிஞ்சியவர் டோனி ரவிசாஸ்திரி புகழாரம்

உடல்தகுதியிலும், சுறுசுறுப்பிலும் இளம் வீரர்களை மிஞ்சியவர் டோனி ரவிசாஸ்திரி புகழாரம்
உடல்தகுதியிலும், சுறுசுறுப்பிலும் இளம் வீரர்களை டோனி மிஞ்சி விட்டதாக இந்திய பயிற்சியாளர் ரவிசாஸ்திரி கூறியுள்ளார்.
புதுடெல்லி,

இலங்கைக்கு எதிரான கடைசி 20 ஓவர் கிரிக்கெட் போட்டியில் இந்திய அணி 5 விக்கெட் வித்தியாசத்தில் வெற்றி பெற்று தொடரை 3-0 என்ற கணக்கில் முழுமையாக வசப்படுத்தியது. சொந்த மண்ணில் கடந்த 2 ஆண்டுகளாக எந்தவித தொடரையும் இழக்காத இந்திய அணி, இந்த ஆண்டில் ஏராளமான சாதனைகளை சொந்தமாக்கியது. குறிப்பாக மூன்று வடிவிலான போட்டியையும் சேர்த்து 2017-ம் ஆண்டில் 37 வெற்றிகளை (டெஸ்ட் 7, ஒரு நாள் போட்டி 21, இருபது ஓவர் போட்டி 9) குவித்து மகத்தான சாதனை படைத்தது. ஓராண்டில் இந்தியாவின் அதிகபட்ச வெற்றி எண்ணிக்கை இது தான்.


இந்திய அணி மற்றும் வீரர்களின் செயல்பாடு குறித்து தலைமை பயிற்சியாளர் ரவிசாஸ்திரி அளித்த ஒரு பேட்டியில் கூறியதாவது:-

நாங்கள் ஒன்றும் முட்டாள்கள் அல்ல. கடந்த 30-40 ஆண்டுகளாக கிரிக்கெட் விளையாட்டை பார்த்து வருகிறேன். விராட் கோலியும் இந்திய அணிக்கு வந்து 10 ஆண்டுகள் ஆகி விட்டது. டோனியை குறித்து பேசியாக வேண்டும். அவருக்கு வயது 36. ஆனால் உடல்தகுதியிலும், சுறுசுறுப்பாகவும், துரிதமாகவும் செயல்படுவதிலும் 26 வயது வீரர்களை மிஞ்சி விடுவார் என்பதை அறிவோம். டோனியை விமர்சிப்பவர்கள், தாங்கள் எப்படி ஆடினோம் என்பதை மறந்து விடுகிறார்கள். அத்தகைய விமர்சன வாதிகள், கண்ணாடி முன் நின்று கொண்டு, 36 வயதில் எப்படி இருந்தோம் என்று முதலில் கேட்டுக் கொள்ளட்டும். அந்த வயதில் அவர்களால் 2 ரன்கள் எடுக்க வேகமாக ஓடியிருக்க முடியுமா? இவர்கள் 2 ரன்கள் எடுப்பதற்குள் டோனி 3 ரன் ஓடி முடித்து விடுவார்.

இரண்டு உலக கோப்பைகளை (50 ஓவர் மற்றும் 20 ஓவர்) வென்று தந்துள்ளார். சராசரி ரன் 51 வைத்துள்ளார். இன்று வரை கூட ஒரு நாள் போட்டி அணிக்கு அவருக்கு மாற்று விக்கெட் கீப்பர் நம்மிடம் இல்லை.

இந்திய அணியில் மட்டுமல்ல, உலகின் சிறந்த வீரர்களில் ஒருவராக டோனி இப்போதும் திகழ்கிறார். டெஸ்ட் கிரிக்கெட்டில் இருந்து அவர் ஏற்கனவே ஓய்வு பெற்று விட்டதால், 2019-ம் ஆண்டு உலக கோப்பை வரை ஒரு நாள் மற்றும் 20 ஓவர் போட்டிகளில் முடிந்த வரை அவர் அதிகமாக விளையாட வேண்டும்.

அடுத்து தொடங்க உள்ள தென்ஆப்பிரிக்க பயணம் குறித்து கேட்கிறீர்கள். எங்களை பொறுத்தவரை அனைத்து எதிரணியினரையும் சமமாகவே பார்க்கிறோம். எல்லா அணிகளும் மதிக்கப்பட வேண்டும். தென்ஆப்பிரிக்க மண்ணில் நாங்கள் இதுவரை டெஸ்ட் தொடரை வென்றது கிடையாது. அங்கு ஏதாவது ஒரு வகையில் சாதிப்பதற்கு நமது அணிக்கு இது நல்ல வாய்ப்பாகும். நம்பிக்கையோடு இருக்கிறோம்.

மற்ற அணிகளை போலவே தென்ஆப்பிரிக்காவையும் பாவித்து விளையாடுவோம். மரியாதை உண்டு. ஆனால் அங்கு வெற்றி பெறுவதற்காகவே செல்கிறோம்.

விராட் கோலியிடம் உள்ள முக்கியமான ஒரு விஷயம், அவரது கடமை உணர்வு. எந்த மாதிரியான வீரராக வர வேண்டும் என்பதை உணர்ந்து, அதற்கு ஏற்ப தன்னை உருவாக்கிக் கொண்டார். இப்போது அதுவே அவரது வாழ்க்கை முறையாகவும் மாறி விட்டது. கேப்டனாக, மற்றவர்கள் கனவாக நினைப்பதை நனவாக்கக்கூடியவர் கோலி. தனது ஆட்டத்திறனை தொடர்ந்து உயரே கொண்டு செல்வதற்கு விரும்புவாரே தவிர, சாக்கு போக்கு சொல்லி ஒதுங்குவது அவருக்கு பிடிக்காது.

தற்போதைய இந்திய அணியில் குறிப்பிட்ட வீரர் என்று இல்லாமல் ஒரு குழுவாக செயல்படுவது முக்கியமான அம்சமாகும். ‘நான்’ என்ற வார்த்தையை தூக்கி எறிந்து விட்டு, ‘நாம்’ என்பதை கட்டமைத்துள்ளோம். நாங்கள் உருவாக்கி உள்ள ‘அணி’ என்ற கலாசாரத்துக்குள் வர முடியாத தனிநபர்கள் வீட்டில் தான் இருக்க வேண்டும். அது எவ்வளவு பெரிய வீரராக இருந்தாலும் பரவாயில்லை. இது தான் இந்த அணியில் உள்ள வித்தியாசமான அணுகுமுறையாகும்.

இவ்வாறு ரவிசாஸ்திரி கூறியுள்ளார்.