கிரிக்கெட்

4-வது நாள் ஆட்டம் மழையால் பாதிப்பு‘டிரா’வில் முடிய வாய்ப்பு + "||" + On the 4th day of rain affected by rain The opportunity to be in the draw

4-வது நாள் ஆட்டம் மழையால் பாதிப்பு‘டிரா’வில் முடிய வாய்ப்பு

4-வது நாள் ஆட்டம் மழையால் பாதிப்பு‘டிரா’வில் முடிய வாய்ப்பு
இங்கிலாந்து- ஆஸ்திரேலியா இடையிலான ஆஷஸ் 4-வது டெஸ்ட் கிரிக்கெட்டில், 4-வது நாள் ஆட்டத்தின் பெரும்பகுதி மழையால் பாதிக்கப்பட்டதால் போட்டி ‘டிரா’வை நோக்கி நகர்கிறது.
மெல்போர்ன்,

ஆஸ்திரேலியா - இங்கிலாந்து அணிகள் இடையிலான ஆஷஸ் தொடரின் 4-வது டெஸ்ட் கிரிக்கெட் போட்டி மெல்போர்னில் நடந்து வருகிறது. முதலில் பேட் செய்த ஆஸ்திரேலியா 327 ரன்களில் ஆட்டம் இழந்தது. பின்னர் தனது முதல் இன்னிங்சை தொடங்கிய இங்கிலாந்து அணி 3-வது நாள் முடிவில் 9 விக்கெட்டுக்கு 491 ரன்கள் எடுத்திருந்தது. அலஸ்டயர் குக் 244 ரன்களுடனும், ஜேம்ஸ் ஆண்டர்சன் 15 பந்துகளை சந்தித்து ரன் ஏதுமின்றியும் களத்தில் இருந்தனர்.


இந்த நிலையில் 4-வது நாள் ஆட்டம் நேற்று நடந்தது. முதல் பந்திலேயே ஆண்டர்சன் (0) கம்மின்சின் பந்து வீச்சில் பான்கிராப்டிடம் கேட்ச் ஆனார். அதனால் இங்கிலாந்தின் முதல் இன்னிங்ஸ் 491 ரன்களிலேயே முடிவுக்கு வந்தது. தொடக்க ஆட்டக்காரராக களம் இறங்கி கடைசி வரை பேட்டிங் செய்து அதிக ரன்கள் குவித்த வீரர் என்ற புதிய சாதனையை அலஸ்டயர் குக் (244 ரன், நாட்-அவுட்) படைத்தார்.

அடுத்து 164 ரன்கள் பின்தங்கிய நிலையில் 2-வது இன்னிங்சை ஆடிய ஆஸ்திரேலியாவுக்கு தொடக்க ஜோடி முதல் விக்கெட்டுக்கு 51 ரன்கள் சேர்த்தது. கேமரூன் பான்கிராப்ட் 27 ரன்களிலும், அடுத்து வந்த உஸ்மான் கவாஜா 11 ரன்களிலும் வெளியேறினர்.

இதன் பின்னர் துணை கேப்டன் டேவிட் வார்னரும், கேப்டன் ஸ்டீவன் சுமித்தும் ஜோடி போட்டு பொறுமையாக விளையாடி அணியை சரிவில் இருந்து காப்பாற்றினர். தேனீர் இடைவேளைக்கு முன்பாக 43.2 ஓவர்களில் 2 விக்கெட்டுக்கு 103 ரன்கள் எடுத்திருந்த போது மழை குறுக்கிட்டது. தொடர்ந்து மழை பெய்ததால் அத்துடன் 4-வது நாள் ஆட்டம் முடித்துக் கொள்ளப்பட்டது. அப்போது சுமித் 25 ரன்களுடனும் (67 பந்து, 2 பவுண்டரி), டேவிட் வார்னர் 40 ரன்களுடனும் (140 பந்து, 3 பவுண்டரி) களத்தில் இருந்தனர்.

ஆஸ்திரேலியா இன்னும் 61 ரன்கள் பின்தங்கி இருக்கிறது. 5-வது மற்றும் கடைசி நாள் ஆட்டம் அரைமணி நேரத்திற்கு முன்பாக இந்திய நேரப்படி இன்று அதிகாலை 4.30 மணிக்கு தொடங்கும் என்று அறிவிக்கப்பட்டு இருக்கிறது. வானிலையை பொறுத்தவரை வானம் ஓரளவு மேகமூட்டத்துடன் காணப்படும். பிற்பகலில் மழை பெய்வதற்கு 40 சதவீதம் வாய்ப்பு இருப்பதாக அங்குள்ள வானிலை ஆய்வு மையத் தகவல்கள் தெரிவிக்கின்றன. இதனால் இந்த டெஸ்ட் ‘டிரா’வில் முடியவே அதிக வாய்ப்புள்ளது.

இங்கிலாந்து பயிற்சியாளர் டிரெவர் பெய்லிஸ் கூறுகையில், ‘ஆட்டத்தில் நமது கை ஓங்கி இருக்கும் போது மழை பெய்தால் கொஞ்சம் ஏமாற்றமாகத் தான் இருக்கும். கடைசி நாள் ஆட்டம் முழுமையாக நடந்தால் எங்களுக்கு வெற்றி வாய்ப்பு உண்டு. அந்த எண்ணத்துடன் தான் விளையாடுவோம். சுமித்- வார்னர் ஜோடியை சீக்கிரம் வீழ்த்தி விட்டால், அதன் பிறகு பின்வரிசை வீரர்களுக்கு பலத்த நெருக்கடி கொடுக்க முடியும். அதன் பிறகு எதுவும் நடக்கலாம்’ என்றார்.

இங்கிலாந்து வேகப்பந்து வீச்சாளர் ஜேம்ஸ் ஆண்டர்சன் பந்தை பெருவிரல் நகத்தால் சேதப்படுத்தியதாக வெளியான தகவலை மறுத்த பயிற்சியாளர் பெய்லிஸ், பந்து மீது இருந்த பிசுறு மற்றும் அழுக்கை தான் அவர் அகற்றினார், அதில் எந்த தவறும் இல்லை என்றும் விளக்கம் அளித்தார்.

ஆஸ்திரேலிய பயிற்சியாளர் டேரன் லீமான் கூறுகையில், ‘எங்களது பந்து வீச்சு சரியாக அமையவில்லை. ஆடுகளத்தன்மை மெதுவாக இருக்கிறது. ஆனால் இத்தகைய ஆடுகளத்தில் எப்படி பேட் செய்து ரன்கள் எடுப்பது என்பதை அலஸ்டயர் குக் காட்டியிருக்கிறார். எங்களது வீரர்கள் உண்மையிலேயே கடினமாக போராடுகிறார்கள்’ என்றார்.