தென்ஆப்பிரிக்க அணி அறிவிப்பு ஸ்டெயினுக்கு வாய்ப்பு


தென்ஆப்பிரிக்க அணி அறிவிப்பு ஸ்டெயினுக்கு வாய்ப்பு
x
தினத்தந்தி 29 Dec 2017 11:30 PM GMT (Updated: 29 Dec 2017 10:23 PM GMT)

இந்தியாவுக்கு எதிரான முதலாவது டெஸ்டில் விளையாடும் தென்ஆப்பிரிக்க அணிக்கு, காயம் மற்றும் உடல்நலக்குறைவால் பாதிக்கப்பட்டிருந்த கேப்டன் பிளிஸ்சிஸ், வேகப்பந்து வீச்சாளர் ஸ்டெயின் ஆகியோர் தேர்வாகியுள்ளனர்.

கேப்டவுன்,

தென்ஆப்பிரிக்காவுக்கு சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ள விராட் கோலி தலைமையிலான இந்திய கிரிக்கெட் அணி 3 போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரில் பங்கேற்கிறது. இவ்விரு அணிகள் இடையிலான முதலாவது டெஸ்ட் போட்டி கேப்டவுனில் உள்ள நியூலாண்ட்ஸ் ஸ்டேடியத்தில் வருகிற 5-ந்தேதி தொடங்குகிறது. இந்திய அணியின் தொடக்க ஆட்டக்காரர் ஷிகர் தவான் கணுக்கால் காயத்தால் அவதிப்படுவதால் முதலாவது டெஸ்டில் ஆடுவது சந்தேகம் தான்.

இந்த நிலையில் முதலாவது டெஸ்டுக்கான 15 பேர் கொண்ட தென்ஆப்பிரிக்க அணி நேற்று அறிவிக்கப்பட்டது. வைரஸ் தொற்று காரணமாக ஜிம்பாப்வேக்கு எதிரான 4 நாள் டெஸ்ட் போட்டியில் ஆடாத வேகப்பந்து வீச்சாளர் டேல் ஸ்டெயின், கேப்டன் பாப் டு பிளிஸ்சிஸ் ஆகியோர் அணிக்கு திரும்பியிருக்கிறார்கள். இதே போல் உள்ளூர் போட்டியில் ஆடிய போது இடுப்பு பகுதியில் காயம் அடைந்த ஆல்-ரவுண்டர் கிறிஸ் மோரிஸ் உடல்தகுதியை பெற்று விட்டதால், அவரும் அணிக்கு அழைக்கப்பட்டு இருக்கிறார். இரு ஆண்டுகளுக்கு பிறகு அனைத்து முன்னணி வீரர்களையும் உள்ளடக்கிய மிக வலுவான அணி தேர்வு செய்யப்பட்டிருக்கிறது.

தென்ஆப்பிரிக்க அணியில் யார்-யாரை களம் இறக்குவது என்பதில் தான் சிக்கல் எழுந்துள்ளது. பேட்டிங் வரிசையில் முதல் 6 இடத்திற்கு 7 பேட்ஸ்மேன்களும், 4 வேகப்பந்து வீச்சாளர் இடத்திற்கு 5 வீரர்களும் கோதாவில் நிற்கிறார்கள். ஆடும் லெவன் அணியில் இடம் பெறப்போவது யார் என்பது போட்டிக்குரிய நாள் அன்றே தெரிய வரும்.

முதலாவது டெஸ்டுக்கான தென்ஆப்பிரிக்க அணி வருமாறு:- பாப் டு பிளிஸ்சிஸ் (கேப்டன்), ஹஷிம் அம்லா, டெம்பா பவுமா, குயின்டான் டி காக், தேவ்னிஸ் டி புருன், டிவில்லியர்ஸ், டீன் எல்கர், கேஷவ் மகராஜ், எய்டன் மார்க்ராம், மோர்னே மோர்கல், கிறிஸ் மோரிஸ், பெலக்வாயோ, வெரோன் பிலாண்டர், ரபடா, ஸ்டெயின்.

Next Story