தென்ஆப்பிரிக்க மண்ணில் இதுவரை இந்தியா எப்படி?


தென்ஆப்பிரிக்க மண்ணில் இதுவரை இந்தியா எப்படி?
x
தினத்தந்தி 3 Jan 2018 9:00 PM GMT (Updated: 3 Jan 2018 7:53 PM GMT)

தென்ஆப்பிரிக்காவில் சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ள இந்திய கிரிக்கெட் அணி 3 போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரில் விளையாடுகிறது.

தென்ஆப்பிரிக்காவில் சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ள இந்திய கிரிக்கெட் அணி 3 போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரில் விளையாடுகிறது. முதலாவது டெஸ்ட் கேப்டவுனில் நாளை தொடங்குகிறது.

இங்குள்ள ஆடுகளங்கள் வேகத்துடன் கூடிய பவுன்சுக்கு சாதகமான ஆடுகளங்கள் என்பதால் இந்திய பேட்ஸ்மேன்கள் தாக்குப்பிடிப்பார்களா? என்ற விவாதம் ஒரு பக்கம் நீண்டு கொண்ட போகிறது. விராட் கோலியின் தலைமையில் தொடர்ச்சியாக 9 டெஸ்ட் தொடர்களை வென்று ‘நம்பர் ஒன்’ அணியாக வீறுநடை போடும் இந்தியா இந்த முறை ‘வானவில்’ தேசத்தில் தாக்கத்தை ஏற்படுத்த வாய்ப்புள்ளதாக மற்றொரு தரப்பினர் சொல்கிறார்கள்.

இந்திய அணி இதுவரை ஆஸ்திரேலியா, தென்ஆப்பிரிக்கா ஆகிய நாடுகளில் மட்டும் டெஸ்ட் தொடரை வென்றது கிடையாது. தென்ஆப்பிரிக்காவுக்கு இந்திய அணி பயணித்து இருப்பது இது 7–வது முறையாகும். அங்கு இந்திய அணியின் செயல்பாடு இதுவரை எப்படி இருந்தது என்பதை பற்றிய ஒரு விரிவான பார்வை வருமாறு:–

1992–93–ம் ஆண்டு, டெஸ்ட்–4, முடிவு (தென்ஆப்பிரிக்கா வெற்றி 1–0)

இனவெறி கொள்கை காரணமாக 1970–ம் ஆண்டில் இருந்து 1991–ம் ஆண்டு வரை தென்ஆப்பிரிக்காவுக்கு தடை விதிக்கப்பட்டிருந்தது. அந்த தடை நீக்கப்பட்ட பிறகு தென்ஆப்பிரிக்காவுக்கு சென்ற முதல் அணி இந்தியா தான். இது தான் இந்தியாவின் முதல் தென்ஆப்பிரிக்க பயணமாகவும் இது அமைந்தது.

முகமது அசாருதீன் தலைமையிலான இந்திய அணி 4 டெஸ்ட் போட்டிகளில் விளையாடியது. மூன்று டெஸ்டுகளில் டிரா கண்ட இந்திய அணி போர்ட் எலிசபெத்தில் நடந்த போட்டியில் மட்டும் தோல்வியை தழுவியது. இந்த டெஸ்டில் முதல் இன்னிங்சில் இந்தியா 212 ரன்களும், கெப்ளர் வெஸ்சல்ஸ் தலைமையிலான தென்ஆப்பிரிக்கா 275 ரன்களும் எடுத்தன. 63 ரன்கள் பின்தங்கிய இந்தியா 2–வது இன்னிங்சில் 215 ரன்களில் ஆட்டம் இழந்தது. கபில்தேவ் 129 ரன்கள் எடுத்திருக்காவிட்டால் நிலைமை இன்னும் மோசமாகி இருக்கும். இதன் மூலம் நிர்ணயிக்கப்பட்ட 153 ரன்கள் இலக்கை தென்ஆப்பிரிக்க அணி எளிதில் எட்டி 9 விக்கெட் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது. இரண்டு இன்னிங்சையும் சேர்த்து தென்ஆப்பிரிக்க வேகப்பந்து வீச்சாளர் ஆலன் டொனால்டு 12 விக்கெட்டுகளை அள்ளினார்.

இந்த தொடரில் தான் 3–வது நடுவர் முறை அறிமுகம் ஆனது. மூன்றாவது நடுவர் மூலம் அவுட் ஆன முதல் வீரர் தெண்டுல்கர் ஆவார். அதாவது ரன்–அவுட்டுக்காக 3–வது நடுவரின் உதவி கோரப்பட்டிருந்தது. இதே போல் ஒமர் ஹென்றி, தென்ஆப்பிரிக்க அணிக்காக விளையாடிய முதல் கருப்பின வீரர் என்ற சிறப்பை பெற்றார். அதிக வயதில் (40) தென்ஆப்பிரிக்க அணியில் அடியெடுத்து வைத்தவரும் இவரே. பிரவின் ஆம்ரே, அஜய் ஜடேஜா ஆகிய இந்திய வீரர்கள் இந்த பயணத்தில் அறிமுகம் ஆனார்கள்.

1996–97–ம் ஆண்டு, டெஸ்ட்–3 முடிவு (தென்ஆப்பிரிக்கா வெற்றி 2–0)

இந்த முறை இந்திய அணியை சச்சின் தெண்டுல்கர் வழிநடத்தினார். கேப்டவுனில் நடந்த முதலாவது டெஸ்டில் இந்தியா 100 மற்றும் 66 ரன்களில் முடங்கி படுதோல்வி அடைந்தது. இந்தியாவின் பேட்டிங் முதுகெலும்பை உடைத்த தென்ஆப்பிரிக்க ‘சூறாவளிகள்’ ஷான் பொல்லாக்கும், டொனால்டும் கூட்டாக 14 விக்கெட்டுகளை கபளீகரம் செய்தனர். கேப்டவுனில் நடந்த 2–வது டெஸ்டிலும் இந்தியாவின் தோல்வியை தவிர்க்க முடியவில்லை. ஆனால் ஜோகனஸ்பர்க்கில் நடந்த 3–வது டெஸ்டில் ராகுல் டிராவிட்டின் ‘கன்னி’ சதம் (148 ரன்) இந்திய அணி எழுச்சி பெற வித்திட்டது. இதில் இந்தியா நிர்ணயித்த 356 ரன்கள் இலக்கை நோக்கி 2–வது இன்னிங்சை ஆடிய தென்ஆப்பிரிக்கா 8 விக்கெட்டுக்கு 228 ரன்கள் எடுத்திருந்த போது டிரா ஆனது. கடைசி நாளில் மழையின் குறுக்கீடு இருந்தது. இல்லாவிட்டால் இந்தியாவிடம் வெற்றி வசமாகியிருக்கும்.

2001–ம் ஆண்டு, டெஸ்ட்–2, முடிவு (தென்ஆப்பிரிக்கா வெற்றி 1–0)

சவுரவ் கங்குலி தலைமையிலான இந்திய அணியின் பயணமும் ஏமாற்றத்திலேயே முடிந்தது. புளோம் பாண்டீனில் நடந்த முதலாவது டெஸ்டில் சச்சின் தெண்டுல்கர் (155 ரன்), ஷேவாக் (105 ரன்) ஆகியோரின் சதங்களால் இந்தியா முதல் இன்னிங்சில் 379 ரன்கள் எடுத்தது. பதிலடி கொடுத்த தென்ஆப்பிரிக்க அணி, கிப்ஸ்(107 ரன்), குளுஸ்னரின் (108 ரன்) செஞ்சுரிகளால் 563 ரன்கள் குவித்தது. 2–வது இன்னிங்சில் இந்தியா 237 ரன்னில் அடங்கியது. இதையடுத்து 54 ரன்கள் வெற்றி இலக்கை தென்ஆப்பிரிக்கா சுலபமாக எட்டிப்பிடித்தது. போர்ட் எலிசபெத்தில் நடந்த 2–வது டெஸ்ட் டிரா ஆனது.

ஆனால் 2–வது டெஸ்டின் போது பந்தின் மீதுள்ள நூலை நகத்தால் சுரண்டி சேதப்படுத்தியதாக சச்சின் தெண்டுல்கருக்கு போட்டி கட்டணத்தில் இருந்து 75 சதவீதம் அபராதமும், ஒரு டெஸ்டில் விளையாட தடையும் போட்டி நடுவர் மைக் டென்னஸ் (இங்கிலாந்து நாட்டவர்) விதித்து சர்ச்சையை கிளப்பினார். அடிக்கடி அப்பீல் செய்ததாக ஷேவாக் மீதும் இதே நடவடிக்கை பாய்ந்தது. ஒழுங்கீனமாக நடந்து கொண்டதாக ஹர்பஜன்சிங், ஷிவ்சுந்தர் தாஸ், தீப் தாஸ் குப்தா ஆகியோருக்கு ஒரு போட்டியில் ஆட தடை விதிக்கப்பட்டது. வீரர்களை கட்டுப்படுத்திய தவறியதாக கேப்டன் சவுரவ் கங்குலிக்கு ஒரு டெஸ்ட் மற்றும் 2 ஒரு நாள் போட்டிகளில் விளையாட தடை விதிக்கப்பட்டது. நடுவருக்கு எதிராக இந்திய ரசிகர்கள் போராட்டத்தில் குதித்தனர். மைக் டென்னசை கடைசி டெஸ்ட் போட்டியில் இருந்து நீக்க வேண்டும், இல்லாவிட்டால் பயணத்தை பாதியில் ரத்து செய்வோம் என்று இந்திய கிரிக்கெட் வாரியம் மிரட்டியது. இந்த விவகாரம் பாராளுமன்றத்திலும் எதிரொலித்தது.

என்றாலும் சர்வதேச கிரிக்கெட் கவுன்சில் (ஐ.சி.சி.) மைக் டென்னசை நீக்க மறுத்தது. ஆனால் இந்தியாவுக்கு தென்ஆப்பிரிக்க கிரிக்கெட் வாரியம் ஆதரவு கரம் நீட்டியதால், வேறு வழியின்றி போட்டி மைக் டென்னஸ் மாற்றப்பட்டார். இதனால் அதிருப்தி அடைந்த ஐ.சி.சி, செஞ்சுரியனில் நடந்த 3–வது டெஸ்டுக்கு அதிகாரபூர்வ அந்தஸ்தை பறித்தது. இந்த டெஸ்டில் தென்ஆப்பிரிக்கா இன்னிங்ஸ் வெற்றி பெற்ற போதிலும் பிரயோஜனம் இல்லாமல் போய் விட்டது. பிறகு நடந்த விசாரணையில் தெண்டுல்கர் மீதான தடை விலக்கப்பட்டது.

2006–07–ம் ஆண்டு, டெஸ்ட்–3, முடிவு (தென்ஆப்பிரிக்கா வெற்றி 2–1)

முந்தைய தொடர் கசப்பமான அனுபவமாக அமைந்த நிலையில், 6 ஆண்டுகள் கழித்து இந்திய அணி ராகுல் டிராவிட் தலைமையில் படையெடுத்தது. ஜோகன்னஸ்பர்க்கில் நடந்த முதலாவது டெஸ்டில் இந்திய அணி 123 ரன்கள் வித்தியாசத்தில் தென்ஆப்பிரிக்காவை தோற்கடித்து அந்த நாட்டில் முதல் வெற்றியை பதிவு செய்தது. வேகப்பந்து வீச்சாளர் ஸ்ரீசாந்த் இரு இன்னிங்சிலும் சேர்த்து 8 விக்கெட்டுகளை வீழ்த்திய ஹீரோவாக ஜொலித்தார். கேப்டன், டர்பனில் நடந்த இரு டெஸ்டுகளில் இந்திய அணி தோற்று தொடரை கோட்டை விட்டது.

பயிற்சியாளர் கிரேக் சேப்பலுடன் ஏற்பட்ட மோதலால் அணியில் இருந்து நீக்கப்பட்டு, இந்த தொடரின் மூலம் சவுரவ் கங்குலி மறுபிரவேசம் செய்திருந்தார். இதனால் வீரர்களின் அறையில் தித்திப்பான சூழலை பார்க்க முடியவில்லை.

2010–11–ம் ஆண்டு, டெஸ்ட்–3, முடிவு (சமன் 1–1)

இந்த தடவை டோனியின் தலைமையில் இந்திய அணி அங்கு சென்றது. ஜோகன்னஸ்பர்க்கில் நடந்த முதலாவது டெஸ்டில் அம்லா (140 ரன்), காலிஸ் (201 ரன்), டிவில்லியர்ஸ் (129 ரன்) ஆகிய தென்ஆப்பிரிக்க வீரர்களின் மலைப்பான பேட்டிங்கில் இந்திய அணி இன்னிங்ஸ் தோல்வியை சந்தித்தது. 2–வது இன்னிங்சில் தெண்டுல்கர் சதம் (111 ரன்) அடித்தும் அணியை காப்பாற்ற முடியவில்லை.

டர்பனில் நடந்த 2–வது டெஸ்டில் இந்திய 87 ரன்கள் வித்தியாசத்தில் வாகை சூடிய தென்ஆப்பிரிக்காவை வஞ்சம் தீர்த்தது. இதில் இந்தியா நிர்ணயித்த 303 ரன்கள் இலக்கை நோக்கி ஆடிய தென்ஆப்பிரிக்கா 215 ரன்களில் வீழ்ந்தது. கேப்டனில் நடந்த கடைசி டெஸ்டில் டிராவில் முடிந்தது. தென்ஆப்பிரிக்க மண்ணில் இந்தியா சமன் செய்த முதல் தொடர் இது தான்.

2013–ம் ஆண்டு, டெஸ்ட்–2, முடிவு (தென்ஆப்பிரிக்கா வெற்றி 1–0)

இந்த முறையும் டோனியே இந்திய அணியின் கேப்டனாக செயல்பட்டார். ஜோனஸ்பர்க்கில் நடந்த முதலாவது டெஸ்ட் டிரா ஆனது. முதல் இன்னிங்சில் விராட் கோலியும், 2–வது இன்னிங்சில் புஜாராவும் சதம் அடித்தது குறிப்பிடத்தக்க அம்சமாகும். டர்பனில் நடந்த 2–வது டெஸ்டில் தென்ஆப்பிரிக்கா 10 விக்கெட் வித்தியாசத்தில் வெற்றி கண்டது. இதில் மொத்தம் 9 விக்கெட்டுகளை கைப்பற்றிய தென்ஆப்பிரிக்க வேகப்பந்து வீச்சாளர் ஸ்டெயின் ஆட்டநாயகன் விருதை பெற்றார்.


Next Story