கிரிக்கெட்

முதலாவது டெஸ்ட் கிரிக்கெட் தென்ஆப்பிரிக்க அணியிடம் இந்தியா தோல்வி + "||" + ndia lost to South Africa

முதலாவது டெஸ்ட் கிரிக்கெட் தென்ஆப்பிரிக்க அணியிடம் இந்தியா தோல்வி

முதலாவது டெஸ்ட் கிரிக்கெட் தென்ஆப்பிரிக்க அணியிடம் இந்தியா தோல்வி
தென்ஆப்பிரிக்காவுக்கு எதிரான முதலாவது டெஸ்ட் போட்டியில் இந்திய அணி 72 ரன்கள் வித்தியாசத்தில் தோல்வி கண்டது.
கேப்டவுன்,

தென்ஆப்பிரிக்காவுக்கு சென்றுள்ள இந்திய கிரிக்கெட் அணி 3 போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரில் ஆடுகிறது. முதலாவது டெஸ்ட் போட்டி கேப்டவுன் மைதானத்தில் கடந்த 5-ந்தேதி தொடங்கியது. இதில் முதல் இன்னிங்சில் முறையே தென்ஆப்பிரிக்க அணி 286 ரன்களும், இந்திய அணி 209 ரன்களும் எடுத்தன. இந்திய அணியில் அதிகபட்சமாக ஹர்திக் பாண்ட்யா 93 ரன்கள் சேர்த்தார்.


77 ரன்கள் முன்னிலையுடன் 2-வது இன்னிங்சை ஆடிய தென்ஆப்பிரிக்க அணி 2-வது நாள் முடிவில் 20 ஓவர்களில் 2 விக்கெட்டுக்கு 65 ரன்கள் எடுத்திருந்தது. காஜிசோ ரபடா 2 ரன்னுடனும், ஹசிம் அம்லா 4 ரன்னுடனும் களத்தில் இருந்தனர்.

மழை காரணமாக 3-வது நாள் ஆட்டம் ஒரு பந்து கூட வீசப்படாமல் கைவிடப்பட்டது. நேற்று 4-வது நாள் ஆட்டம் நடந்தது. ரபடா, ஹசிம் அம்லா தொடர்ந்து ஆடினார்கள். வேகப்பந்து வீச்சுக்கு சாதகமான ஆடுகளத்தை இந்திய வேகப்பந்து வீச்சாளர்கள் முகமது ஷமி, ஜஸ்பிரித் பும்ரா ஆகியோர் கச்சிதமாக பயன்படுத்தி தென்ஆப்பிரிக்க அணிக்கு கடும் நெருக்கடி அளித்ததுடன் தொடக்க விக்கெட்டுகளை விரைவில் வீழ்த்தினார்கள்.

2-வது ஓவரில் ஹசிம் அம்லா (4 ரன்) முகமது ஷமி பந்து வீச்சில் கல்லி பகுதியில் ரோகித் சர்மாவிடம் தாழ்வாக கேட்ச் கொடுத்து அவுட் ஆனார். இந்த முடிவை எதிர்த்து தென்ஆப்பிரிக்கா செய்த அப்பீல் தோல்வியில் முடிந்தது. ரபடா (5 ரன்) விக்கெட்டையும் முகமது ஷமி சாய்த்தார்.

அடுத்து வந்த கேப்டன் பாப் டுபிளிஸ்சிஸ் (0), குயின்டான் டி காக் (8 ரன்) ஆகியோர் விக்கெட்டை ஜஸ்பிரித் பும்ரா கபளகரம் செய்தார். டிவில்லியர்ஸ் மட்டும் அணியை சரிவில் இருந்து மீட்க போராடினார். ஆனால் அவருக்கு பக்கபலமாக யாரும் நிலைத்து நின்று விளையாடவில்லை. பிலாண்டர் (0) விக்கெட்டை முகமது ஷமி எல்.பி.டபிள்யூ. முறையில் வீழ்த்தினார்.இதைத்தொடர்ந்து களம் கண்ட மகராஜ் (15 ரன், 21 பந்துகளில் 2 பவுண்டரியுடன்), மோர்னே மோர்கல் (2 ரன்) ஆகியோர் புவனேஷ்வர்குமார் பந்து வீச்சில் விக்கெட் கீப்பர் விருத்திமான் சஹாவிடம் கேட்ச் கொடுத்து வெளியேறினார்கள்.

கடைசி விக்கெட்டாக டிவில்லியர்சை (35 ரன்கள், 50 பந்துகளில் 2 பவுண்டரி, 2 சிக்சருடன்) ஜஸ்பிரித் பும்ரா ஆட்டம் இழக்க செய்தார். மதிய உணவு இடைவேளைக்கு முன்பு தென்ஆப்பிரிக்க அணி 2-வது இன்னிங்சில் 41.2 ஓவர்களில் 130 ரன்னில் சுருண்டது. ஸ்டெயின் ரன் எதுவும் எடுக்காமல் களத்தில் இருந்தார். கடைசி 65 ரன்களுக்குள் தென்ஆப்பிரிக்கா 8 விக்கெட்டுகளை இழந்தது. இந்திய அணி தரப்பில் முகமது ஷமி, ஜஸ்பிரித் பும்ரா தலா 3 விக்கெட்டும், ஹர்திக் பாண்ட்யா, புவனேஷ்வர்குமார் தலா 2 விக்கெட்டும் வீழ்த்தினார்கள்.

பின்னர் 208 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் ஆடிய இந்திய அணியின் தொடக்க ஆட்டக்காரர்களாக எம்.விஜய், ஷிகர் தவான் ஆகியோர் களம் இறங்கினார்கள். காயம் காரணமாக ஸ்டெயின் பந்து வீசாவிட்டாலும், பிலாண்டர், மோர்னே மோர்கல், ரபடா ஆகியோர் தங்களது வேகப்பந்து வீச்சு தாக்குதலை துல்லியமாக தொடுத்தனர். முதலில் நல்ல தொடக்கம் கண்டாலும் பின்னர் இந்திய அணியின் விக்கெட்டுகள் சீரான இடைவெளியில் சரிந்தன.

அணியின் ஸ்கோர் 30 ரன்னை எட்டிய போது தொடக்க ஆட்டக்காரர் ஷிகர் தவான் (16 ரன்) மோர்னே மோர்கல் பந்து வீச்சில் மாற்று ஆட்டக்காரர் கிறிஸ் மோரிஸ்சிடம் கேட்ச் கொடுத்து வெளியேறினார். அடுத்த ஓவரில் விஜய் (13 ரன்) பிலாண்டர் பந்து வீச்சில் டிவில்லியர்சிடம் கேட்ச் ஆனார்.

இதைத்தொடர்ந்து புஜாரா 4 ரன்னிலும், விராட்கோலி 28 ரன்னிலும், ரோகித் சர்மா 10 ரன்னிலும், ஹர்திக் பாண்ட்யா 1 ரன்னிலும், விருத்திமான் சஹா 8 ரன்னிலும் அடுத்தடுத்து ஆட்டம் இழந்து ஏமாற்றம் அளித்தனர். தேனீர் இடைவேளையின் போது இந்திய அணி 7 விக்கெட் இழப்புக்கு 82 ரன்கள் எடுத்து தோல்வியின் விளிம்பில் தத்தளித்தது.

8-வது விக்கெட்டுக்கு புவனேஷ்வர்குமார், அஸ்வினுடன் இணைந்தார். இந்த இணை சிறிது நேரம் தாக்குப்பிடித்து போராடியது. அணியின் ஸ்கோர் 131 ரன்னாக உயர்ந்த போது அஸ்வின் (37 ரன், 53 பந்துகளில் 5 பவுண்டரியுடன்) பிலாண்டர் பந்து வீச்சில் விக்கெட் கீப்பர் குயின்டான் டி காக்கிடம் கேட்ச் கொடுத்து அவுட் ஆனார். 8-வது விக்கெட்டுக்கு அஸ்வின், புவனேஷ்வர்குமார் ஜோடி 49 ரன்கள் சேர்த்தது.

அடுத்து வந்த முகமது ஷமி 4 ரன்னிலும், பும்ரா ரன் எதுவும் எடுக்காமலும் பிலாண்டர் பந்து வீச்சில் விக்கெட் கீப்பர் குயின்டான் டி காக்கிடம் கேட்ச் கொடுத்து நடையை கட்டினார்கள். இந்திய அணி 2-வது இன்னிங்சில் 42.4 ஓவர்களில் 135 ரன்னில் ஆல்-அவுட் ஆனது. இதனால் தென்ஆப்பிரிக்க அணி 72 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது. புவனேஷ்வர்குமார் 41 பந்துகளில் ஒரு பவுண்டரியுடன் 13 ரன்கள் எடுத்து ஆட்டம் இழக்காமல் இருந்தார். தென்ஆப்பிரிக்க அணி தரப்பில் பிலாண்டர் 6 விக்கெட்டும், மோர்னே மோர்கல், ரபடா தலா 2 விக்கெட்டும் கைப்பற்றினார்கள். பிலாண்டர் ஆட்டநாயகன் விருது பெற்றார். நேற்று ஒரே நாளில் 18 விக்கெட்டுகள் வீழ்ந்தது குறிப்பிடத்தக்கது.

இந்த வெற்றியின் மூலம் தென்ஆப்பிரிக்க அணி 1-0 என்ற கணக்கில் முன்னிலை பெற்றுள்ளது. இரு அணிகள் இடையிலான 2-வது டெஸ்ட் கிரிக்கெட் போட்டி செஞ்சூரியனில் வருகிற 13-ந் தேதி தொடங்குகிறது.