ஆஸ்திரேலிய அணிக்கு அதிர்ச்சி அளித்தது இங்கிலாந்து


ஆஸ்திரேலிய அணிக்கு அதிர்ச்சி அளித்தது இங்கிலாந்து
x
தினத்தந்தி 15 Jan 2018 10:30 PM GMT (Updated: 15 Jan 2018 8:07 PM GMT)

முதலாவது ஒருநாள் கிரிக்கெட் ஆஸ்திரேலிய அணிக்கு அதிர்ச்சி அளித்தது இங்கிலாந்து ஜாசன்ராய் 180 ரன்கள் குவித்து சாதனை.

மெல்போர்ன்,

ஆஸ்திரேலியா-இங்கிலாந்து அணிகள் இடையிலான 5 ஆட்டங்கள் கொண்ட ஒருநாள் போட்டி தொடரில் முதலாவது ஒருநாள் கிரிக்கெட் போட்டி மெல்போர்னில் நடந்தது. முதலில் ஆடிய ஆஸ்திரேலிய அணி நிர்ணயிக்கப்பட்ட 50 ஓவர்களில் 8 விக்கெட் இழப்புக்கு 304 ரன்கள் குவித்தது. ஆரோன் பிஞ்ச் 107 ரன்னும், மார்கஸ் ஸ்டோனிஸ் 60 ரன்னும், மிட்செல் மார்ஷ் 50 ரன்னும் எடுத்தனர். பின்னர் ஆடிய இங்கிலாந்து அணி 48.5 ஓவர்களில் 5 விக்கெட் இழப்புக்கு 308 ரன்கள் எடுத்து 5 விக்கெட் வித்தியாசத்தில் அசத்தல் வெற்றி பெற்றது. தொடக்க ஆட்டக்காரர் ஜாசன் ராய் 151 பந்துகளில் 16 பவுண்டரி, 5 சிக்சருடன் 180 ரன்கள் எடுத்து ஆட்டம் இழந்து அணியின் வெற்றியில் முக்கிய பங்கு வகித்ததுடன் ஆட்டநாயகன் விருதும் பெற்றார். ஜோரூட் 110 பந்துகளில் 5 பவுண்டரியுடன் 91 ரன்கள் எடுத்து ஆட்டம் இழக்காமல் இருந்தார். இரு அணிகள் இடையிலான 2-வது ஒருநாள் கிரிக்கெட் போட்டி பிரிஸ்பேனில் வருகிற 19-ந் தேதி நடக்கிறது.

180 ரன்கள் எடுத்ததன் மூலம் ஜாசன் ராய் ஒருநாள் போட்டியில் ஒரு இன்னிங்சில் அதிக ரன்கள் எடுத்த இங்கிலாந்து வீரர் என்ற பெருமையை பெற்றார். இதற்கு முன்பு 2006-ம் ஆண்டில் பாகிஸ்தானுக்கு எதிரான ஆட்டத்தில் இங்கிலாந்து வீரர் அலெக்ஸ் ஹாலெஸ் 171 ரன்கள் எடுத்ததே அதிகபட்சமாக இருந்தது. மெல்போர்னில் ஒரு அணி செய்த (305 ரன்கள் இலக்கு) அதிகபட்ச சேசிங் இதுவாகும். இதற்கு முன்னதாக 2016-ம் ஆண்டில் இந்தியாவுக்கு எதிரான ஆட்டத்தில் ஆஸ்திரேலிய அணி 296 ரன்களை சேசிங் செய்ததே இந்த மைதானத்தில் அதிகபட்சமாக இருந்தது.


Next Story