ஐ.பி.எல். போட்டி: 578 கிரிக்கெட் வீரர்கள் ஏலம் இன்றும், நாளையும் நடக்கிறது


ஐ.பி.எல். போட்டி: 578 கிரிக்கெட் வீரர்கள் ஏலம் இன்றும், நாளையும் நடக்கிறது
x
தினத்தந்தி 26 Jan 2018 10:30 PM GMT (Updated: 26 Jan 2018 8:54 PM GMT)

ஐ.பி.எல். கிரிக்கெட் போட்டிக்கான இரண்டு நாட்கள் ஏலம் இன்று தொடங்குகிறது. #cricket #IPL

பெங்களூரு,

11-வது ஐ.பி.எல். 20 ஓவர் கிரிக்கெட் போட்டி ஏப்ரல் 7-ந்தேதி முதல் மே 27-ந்தேதி வரை இந்தியாவின் பல்வேறு நகரங்களில் நடக்கிறது. இதையொட்டி 8 அணிகளின் சார்பில் 18 வீரர்கள் மட்டுமே தக்கவைக்கப்பட்டனர். எஞ்சிய வீரர்கள் அனைவரும் ஏலத்திற்கு வருகிறார்கள்.

ஐ.பி.எல். மெகா ஏலம் பெங்களூருவில் உள்ள நட்சத்திர ஓட்டலில் இன்றும் (சனிக்கிழமை), நாளையும் நடக்கிறது. 360 இந்தியர்கள் உள்பட மொத்தம் 578 வீரர்கள் ஏலப்பட்டியலில் இடம் பெற்றுள்ளனர். ஒவ்வொரு அணியிலும் குறைந்தபட்சம் 18 வீரர்களும், அதிகபட்சமாக 25 வீரர்களும் இருக்க வேண்டும்.

ஏலத்தில் வீரர்களை வாங்குவதற்கு ஒவ்வொரு அணி நிர்வாகமும் ரூ.80 கோடி வரை செலவு செய்யலாம். ஆனால் ஏற்கனவே தக்க வைத்துள்ள வீரர்களின் ஊதியம் இந்த ஒட்டுமொத்த தொகையில் இருந்து கழிக்கப்படும். உதாரணமாக சென்னை சூப்பர் கிங்ஸ் அணியில் நீடிக்கும் டோனி (ரூ.15 கோடி), சுரேஷ் ரெய்னா (11 கோடி), ரவீந்திர ஜடேஜா (ரூ.7 கோடி) ஆகியோரின் மொத்த சம்பளம் ரூ.33 கோடி ஆகும். இது போக எஞ்சியுள்ள ரூ.47 கோடியை மட்டுமே சென்னை அணியால் ஏலத்தில் பயன்படுத்த முடியும். இந்த வகையில் ராஜஸ்தான், பஞ்சாப் அணிகள் ரூ.67½ கோடியை இருப்புத்தொகையாக வைத்துள்ளன.

முத்திரை வீரர்கள்

சர்வதேச போட்டிகளில் விளையாடிய வீரர்களுக்கு ரூ.2 கோடி, ரூ.1½ கோடி, ரூ.1 கோடி, ரூ.75 லட்சம், ரூ.50 லட்சம் வீதமும், சர்வதேச போட்டிகளில் ஆடாத வீரர்களுக்கு ரூ.40 லட்சம், ரூ.30 லட்சம், ரூ.20 லட்சம் என்ற வீதமும் அடிப்படை தொகையாக நிர்ணயிக்கப்பட்டுள்ளது.

மொத்தம் 36 வீரர்களின் தொடக்க விலை ரூ.2 கோடியாகும். இதில் யுவராஜ்சிங், அஸ்வின், ரஹானே, ஷிகர் தவான், கவுதம் கம்பீர், ஹர்பஜன்சிங் (6 பேரும் இந்திய வீரர்கள்), பென் ஸ்டோக்ஸ், ஜோ ரூட் (இங்கிலாந்து), மிட்செல் ஸ்டார்க், மேக்ஸ்வெல் (ஆஸ்திரேலியா), கிறிஸ் கெய்ல், கீரன் பொல்லார்ட், வெய்ன் பிராவோ (வெஸ்ட் இண்டீஸ்), கனே வில்லியம்சன் (நியூசிலாந்து), ஷகிப் அல்-ஹசன் (வங்காளதேசம்), பாப் டு பிளிஸ்சிஸ் (தென்ஆப்பிரிக்கா) ஆகிய 16 வீரர்கள் முத்திரை வீரர்கள் என்ற அந்தஸ்துடன் இரண்டு பிரிவாக பிரிக்கப்பட்டு இருக்கிறார்கள். இவர்கள் தான் முதலில் ஏலம் விடப்படுவார்கள். வழக்கம் போல் இங்கிலாந்தை சேர்ந்த ரிச்சர்ட் மேட்லி ஏலத்தை நடத்துகிறார்.

கடந்த சீசனில் ரூ.14½ கோடிக்கு விலை போன பென் ஸ்டோக்சுக்கு கடும் கிராக்கி இருக்கும் என்று எதிர்பார்ப்பு நிலவுகிறது. பொல்லார்ட், அஸ்வின், ஷிகர் தவான், கம்பீர், வாஷிங்டன் சுந்தர், யுஸ்வேந்திர சாஹல் மற்றும் குணால் பாண்ட்யா, பாசில் தம்பி, அவேஷ் கான், தீபக் ஹூடா, ஜோப்ரா ஆர்ச்சர், ஜூனியர் உலக கோப்பை கிரிக்கெட்டில் கலக்கும் பிரித்வி ஷா, நாகர்கோட்டி, சுப்மான் கில் உள்ளிட்டோரும் நல்ல விலைக்கு ஏலம் போக வாய்ப்புள்ளது.

‘மேட்ச் கார்டு’ சலுகை

ஒவ்வொரு அணிக்கும் 5 வீரர்களை தக்க வைத்துக்கொள்ள அனுமதி வழங்கப்பட்டிருந்தது. இதில் அதிகபட்சமாக 3 வீரர்களை நேரடியாகவும், பிறகு ஏலத்தின் போது ‘மேட்ச் கார்டு’ என்ற சிறப்பு சலுகையை பயன்படுத்தியும் தக்கவைத்துக் கொள்ள முடியும்.

‘மேட்ச் கார்டு’ என்பது கடைசி சீசனில் தங்கள் அணிக்காக விளையாடிய வீரர்களை ஏலத்தின் போது இழுக்க வழிவகை செய்வதாகும். உதாரணமாக கடந்த ஆண்டு மும்பை இந்தியன்ஸ் அணிக்காக விளையாடிய ஆல்-ரவுண்டர் கீரன் பொல்லார்ட்டை வேறு ஒரு அணி ரூ.7 கோடிக்கு ஏலம் கேட்கிறது என்றால், அந்த சமயத்தில் அவரை மும்பை அணி நிர்வாகம் விரும்பினால், அந்த தொகைக்கு மேட்ச் கார்டு சலுகையை காட்டி தங்கள் அணிக்கு சொந்தமாக்க முடியும்.

சென்னை அணிக்கு அஸ்வின் கிடைப்பாரா?

தமிழக சுழற்பந்து வீச்சாளர் அஸ்வின், முன்பு சென்னை சூப்பர் கிங்சுக்காக ஆடினார். அவரை எப்படியும் ஏலத்தில் எடுக்க முயற்சிப்போம் என்று அந்த அணியின் கேப்டன் டோனி கூறியிருக்கிறார். ஆனால் அவரை ‘மேட்ச் கார்டு’ சலுகையை பயன்படுத்தி எடுக்க முடியாது. ஏனெனில் ஒரு அணி சர்வதேச போட்டியில் ஆடிய 3 இந்தியர்களை மட்டுமே தக்கவைக்க முடியும். சென்னை அணி டோனி, ரெய்னா, ரவீந்திர ஜடேஜா ஆகிய இந்தியர்களை ஏற்கனவே தக்கவைத்து விட்டது. அதனால் மேட்ச் கார்டு சலுகையில் சென்னை அணி 2 வெளிநாட்டு வீரர்கள் அல்லது சர்வதேச போட்டியில் ஆடாத இரண்டு உள்ளூர் வீரர்களை வாங்கலாம். வெய்ன் பிராவோ, பிரன்டன் மெக்கல்லம், பாப் டு பிளிஸ்சிஸ் ஆகியோரில் இருவரை வசப்படுத்த சென்னை அணி நிர்வாகம் முடிவு செய்திருப்பதாக தெரிகிறது.

மொத்தம் 182 வீரர்களை ஏலத்தில் எடுப்பதற்கு ரூ.400 கோடிக்கு மேல் முதலீடு செய்ய 8 அணி நிர்வாகங்களும் பல்வேறு திட்டங்களுடன் ஆயத்தமாக உள்ளன. காலை 9 மணிக்கு தொடங்கும் ஏலம் நிகழ்ச்சியை ஸ்டார் ஸ்போர்ட்ஸ் சேனல் நேரடி ஒளிபரப்பு செய்கிறது.

Next Story