ஜூனியர் உலக கோப்பையில் இன்று இறுதிப்போட்டி: வேகப்பந்து வீச்சில் வலுவாக இருக்கிறோம் இந்திய கேப்டன் பிரித்வி ஷா சொல்கிறார்


ஜூனியர் உலக கோப்பையில் இன்று இறுதிப்போட்டி: வேகப்பந்து வீச்சில் வலுவாக இருக்கிறோம் இந்திய கேப்டன் பிரித்வி ஷா சொல்கிறார்
x
தினத்தந்தி 2 Feb 2018 9:30 PM GMT (Updated: 2 Feb 2018 8:20 PM GMT)

நியூசிலாந்தில் நடந்து வரும் 12–வது ஜூனியர் உலக கோப்பை கிரிக்கெட் போட்டியில் (19 வயதுக்குட்பட்டோர்) இறுதி ஆட்டம் இன்று (சனிக்கிழமை) நடக்கிறது.

மவுன்ட் மாங்கானு,

நியூசிலாந்தில் நடந்து வரும் 12–வது ஜூனியர் உலக கோப்பை கிரிக்கெட் போட்டியில் (19 வயதுக்குட்பட்டோர்) இறுதி ஆட்டம் இன்று (சனிக்கிழமை) நடக்கிறது. சாம்பியன் மகுடத்துக்கு முன்னாள் சாம்பியன்களான இந்தியாவும், ஆஸ்திரேலியாவும் மோதுகின்றன. இந்திய நேரப்படி இன்று காலை 6.30 மணிக்கு தொடங்கும் இந்த ஆட்டத்தை ஸ்டார் ஸ்போர்ட்ஸ் சேனல் நேரடி ஒளிபரப்பு செய்கிறது. இதில் வாகை சூடும் அணி 4–வது முறையாக ஜூனியர் உலக கோப்பையை வென்ற அணி என்ற சாதனையை படைக்கும். இதையொட்டி இந்திய ஜூனியர் கேப்டன் பிரித்வி ஷா நேற்று நிருபர்களிடம் கூறியதாவது:–

எங்களது வேகப்பந்து வீச்சாளர்கள் முதல் ஆட்டத்தில் இருந்தே சிறப்பாக பந்து வீசி வருகிறார்கள். தேவையான நேரத்தில் எல்லாம் பார்ட்னர்ஷிப்பை உடைத்து விக்கெட்டுகளை வீழ்த்தி நம்பிக்கை அளித்துள்ளனர். அதே போல் நான் எப்போது கேட்டாலும் பந்து வீசுவதற்கு தயாராக இருக்கிறார்கள். கம்லேஷ் நாகர்கோட்டி, இஷான் போரெல், ஷிவம் மாவி ஆகிய வேகப்பந்து வீச்சாளர்கள் சாதிக்கும் வேகத்திலும், முழு உடல்தகுதியுடன் இருக்கிறார்கள். வேகப்பந்து வீச்சாளர்கள் நன்றாக செயல்படும் போது உண்மையிலேயே நாங்கள் உற்சாகம் அடைகிறோம்.

பேட்டிங்கை பொறுத்தவரை ஒரு நல்ல பார்ட்னர்ஷிப் அமைந்தால் கூட போதும். அதன் மூலம் 250 முதல் 300 ரன்கள் வரை எடுத்து விட முடியும். லீக் சுற்றில் ஆஸ்திரேலியாவை நாங்கள் 100 ரன்கள் வித்தியாசத்தில் தோற்கடித்து இருந்தாலும் அவர்கள் சவாலான அணியாகவே இருப்பார்கள். இப்போது நல்ல நிலையில் உள்ளனர். அதனால் நாங்கள் அடிப்படையாக சரியாக செய்து, வியூகத்தை களத்தில் செயல்படுத்த முயற்சிப்போம்.

இவ்வாறு பிரித்வி ஷா கூறினார்.

ஆஸ்திரேலிய கேப்டன் ஜாசன் சங்ஹா கூறுகையில், ‘லீக்கில் இந்தியாவிடம் அடைந்த தோல்விக்கு குறித்து கவலைப்படவில்லை. மிகப்பெரிய இறுதிப்போட்டி என்பது வேறு. வித்தியாசமான ஆடுகளம், வித்தியாசமான சூழலில் ஆட இருக்கிறோம். கோப்பையை வெல்ல இந்தியாவுக்கே வாய்ப்பு அதிகம் என்று சொல்லமாட்டேன். எங்களது திறமைக்கு ஏற்ப விளையாடினால் எந்த அணியையும் எங்களால் வீழ்த்த முடியும்’ என்றார்.


Next Story