முதலாவது ஒரு நாள் போட்டியில் இந்தியா வெற்றி: ரஹானே, சுழற்பந்து வீச்சாளர்களுக்கு கோலி பாராட்டு


முதலாவது ஒரு நாள் போட்டியில் இந்தியா வெற்றி: ரஹானே, சுழற்பந்து வீச்சாளர்களுக்கு கோலி பாராட்டு
x
தினத்தந்தி 2 Feb 2018 9:45 PM GMT (Updated: 2 Feb 2018 8:44 PM GMT)

தென்ஆப்பிரிக்காவுக்கு எதிரான முதலாவது ஒரு நாள் போட்டியில் இந்தியா வெற்றி பெற்றதற்கு ரஹானே மற்றும் சுழற்பந்து வீச்சாளர்களுக்கு கோலி புகழாரம் சூட்டியுள்ளார்.

டர்பன்,

தென்ஆப்பிரிக்காவுக்கு எதிரான முதலாவது ஒரு நாள் போட்டியில் இந்தியா வெற்றி பெற்றதற்கு ரஹானே மற்றும் சுழற்பந்து வீச்சாளர்களுக்கு கோலி புகழாரம் சூட்டியுள்ளார்.

இந்தியா வெற்றி

டர்பனில் நேற்று முன்தினம் நடந்த தென்ஆப்பிரிக்காவுக்கு எதிரான முதலாவது ஒரு நாள் கிரிக்கெட் போட்டியில் இந்திய அணி 6 விக்கெட் வித்தியாசத்தில் தென்ஆப்பிரிக்காவை வீழ்த்தியது.

இதில் முதலில் பேட் செய்த தென்ஆப்பிரிக்கா 8 விக்கெட்டுக்கு 269 ரன்கள் எடுத்தது. கேப்டன் பாப் டு பிளிஸ்சிஸ் சதம் (120 ரன்) அடித்தார். இந்திய சுழற்பந்து வீச்சாளர்கள் குல்தீப் யாதவ் 3 விக்கெட்டுகளும், யுஸ்வேந்திர சாஹல் 2 விக்கெட்டுகளும் கைப்பற்றினர்.

அடுத்து களம் இறங்கிய இந்திய அணி இந்த இலக்கை 45.3 ஓவர்களில் எட்டிப்பிடித்தது. 33-வது சதத்தை எட்டிய கேப்டன் விராட் கோலி 112 ரன்களும், ரஹானே 79 ரன்களும் சேர்த்து வெற்றிக்கு வித்திட்டனர்.

கோலி பேட்டி

ஆட்டநாயகனாக தேர்வு செய்யப்பட்ட இந்திய கேப்டன் கோலி பின்னர் கூறியதாவது:-

ஒரு நாள் போட்டியில் தென்ஆப்பிரிக்க மண்ணில் நான் இதற்கு முன்பு சதம் அடித்தது இல்லை. உண்மையிலேயே இது எனக்கு சிறப்பு வாய்ந்த ஒன்று தான். ஒரு தொடரில் முதல் ஆட்டம் எப்போதும் முக்கியமானது. வெற்றியுடன் தொடங்கும் போது ஒவ்வொரு வீரர்களுக்கும் அது ஊக்கமளிக்கும். இது மறக்க முடியாத ஒரு வெற்றியாக நீடிக்கும்.

ஜோகன்னன்ஸ்பர்க் டெஸ்டில் கிடைத்த வெற்றியின் மூலம் அதே உத்வேகத்தை இங்கும் தொடர வேண்டும் என்று விரும்பினோம். அவ்வாறே செயல்பட்டு இருக்கிறோம். இந்த ஆடுகளத்தில் தென்ஆப்பிரிக்காவை 270 ரன்னுக்குள் கட்டுப்படுத்தியது சிறப்பான விஷயம். ரஹானே விளையாடிய விதம் மகிழ்ச்சி அளிக்கிறது. அவர் தரம் வாய்ந்த ஒரு வீரர். இந்த பயணத்தில் வேகப்பந்து வீச்சு தாக்கத்தை ஏற்படுத்தப்போகிறது என்பதை உணர்ந்து இருந்தோம். அவர் வேகப்பந்து வீச்சை எதிர்கொண்ட விதம் அருமை. 4-வது பேட்டிங் வரிசையை சரியாக பயன்படுத்திக் கொண்டார்.

தைரியமான சுழற்பந்து வீச்சாளர்கள்

முழங்கையை அதிகமாக பயன்படுத்தி சுழற்பந்து வீசக்கூடிய யுஸ்வேந்திர சாஹல், குல்தீப் யாதவ் இருவரும் அசத்தி விட்டனர். தென்ஆப்பிரிக்க மண்ணில் அவர்கள் தற்போது தான் முதல் முறையாக விளையாடுகிறார்கள். ஆனால் தைரியமாக செயல்பட்டனர். அதனால் தான் அவர்களால் விக்கெட்டுகள் வீழ்த்த முடிந்தது. அச்சமின்றி பந்து வீசக்கூடிய இத்தகைய இரு இளம் சுழற்பந்து வீச்சாளர்கள் அணியில் இருப்பது சாதகமான அம்சமாகும். இருவரும் தாங்கள் என்ன செய்ய வேண்டும் என்பதை அறிந்து செயல்படுவது ஒரு கேப்டனாக எனக்கு தனிச்சிறப்பு வாய்ந்ததாக தெரிகிறது.

‘சேசிங்’ செய்வது எனக்கு எளிதாக இருக்கிறது. எத்தனை ரன்கள் தேவை? எந்த பந்து வீச்சாளர்களுக்கு எதிராக எப்படி செயல்பட வேண்டும் என்பதை திட்டமிட்டு ஆடுவது எனக்கு கச்சிதமாக பொருந்துகிறது.

இவ்வாறு கோலி கூறினார்.

பேட்ஸ்மேன்கள் மீது பிளிஸ்சிஸ் சாடல்

தென்ஆப்பிரிக்க கேப்டன் பிளிஸ்சிஸ் கூறுகையில், ‘நாங்கள் சிறப்பாக பேட்டிங் செய்யவில்லை. எனக்கு பிறகு அதிகபட்சமாக எந்த ஒரு பேட்ஸ்மேனும் 40 ரன்களை தாண்டவில்லை என்பது, வலுவான பார்ட்னர்ஷிப் அமையவில்லை என்பதையே காட்டுகிறது. ஒரு நாள் கிரிக்கெட்டில் நல்ல பார்ட்னர்ஷிப் அவசியமாகும்.

இந்திய சுழற்பந்து வீச்சாளர்கள் அபாரமாக பந்து வீசினர். ஆனாலும் அவர்களை இன்னும் திறம்பட சமாளித்து ரன்கள் எடுத்திருக்க வேண்டும். 269 ரன்கள் என்பது இந்த ஆடுகளத்தில் போதுமானது அல்ல. 300 ரன்களுக்கு மேல் எடுத்திருக்க வேண்டியது தேவையானதாக இருந்தது. இந்த மைதானத்தில் கடைசி இரு ஆட்டங்களில் நாங்கள் அதிகமான ரன்கள் குவித்து வெற்றி பெற்றோம். ஆஸ்திரேலியாவுக்கு எதிராக 370 ரன்களுக்கு மேலான இலக்கை ‘சேசிங்’ செய்தோம். அதாவது பந்து வீச்சாளர்கள் சோடைபோய் விட்டனர் என்று சொல்வது நியாயமற்றது. போதுமான ரன்களை நாங்கள் எடுக்கவில்லை என்பதே உண்மை. மேற்கொண்டு 60-70 ரன்கள் எடுத்திருந்தால் எளிதில் வெற்றி பெற்று இருந்திருப்போம். மொத்தத்தில் எங்களுக்கு இது மோசமான நாளாக அமைந்துவிட்டது. தவறுகளில் இருந்து பாடம் கற்றுக்கொண்டு, அடுத்த ஆட்டத்தில் கவனம் செலுத்த வேண்டும்’என்றார்.

இவ்விரு அணிகள் இடையிலான 2-வது ஒரு நாள் போட்டி செஞ்சூரியனில் நாளை (இந்திய நேரப்படி பிற்பகல் 1.30 மணிக்கு தொடக்கம்) நடக்கிறது.

Next Story