ஜூனியர் அணிக்கு வாழ்த்துகள் குவிகிறது பெருமைப்பட வைத்து விட்டதாக பிரதமர் பாராட்டு


ஜூனியர் அணிக்கு வாழ்த்துகள் குவிகிறது பெருமைப்பட வைத்து விட்டதாக பிரதமர் பாராட்டு
x
தினத்தந்தி 3 Feb 2018 9:30 PM GMT (Updated: 3 Feb 2018 8:18 PM GMT)

உலக சாம்பியன் பட்டத்தை சொந்தமாக்கியுள்ள இந்திய ஜூனியர் கிரிக்கெட் அணிக்கு வாழ்த்துகள் குவிந்து வருகிறது.

புதுடெல்லி,

உலக சாம்பியன் பட்டத்தை சொந்தமாக்கியுள்ள இந்திய ஜூனியர் கிரிக்கெட் அணிக்கு வாழ்த்துகள் குவிந்து வருகிறது.

பிரமிக்கத்தக்க வெற்றி

ஜூனியர் உலக கோப்பை கிரிக்கெட்டில் இந்திய அணி தோல்வி பக்கமே செல்லவில்லை. ஒவ்வொரு வெற்றிகளும் மூக்கு மீது விரலை வைக்கும் அளவுக்கு மகத்தானவை என்பதில் சந்தேகம் இல்லை. லீக் சுற்றில் ஆஸ்திரேலியாவை 100 ரன்கள் வித்தியாசத்திலும், பப்புவா நியூ கினியாவை 10 விக்கெட் வித்தியாசத்திலும் (252 பந்து மீதம்), ஜிம்பாப்வேயை 10 விக்கெட் வித்தியாசத்திலும் (170 பந்து மீதம்) ஊதித்தள்ளியது.

அதன் தொடர்ச்சியாக கால்இறுதியில் வங்காளதேசத்தை 131 ரன்கள் வித்தியாசத்திலும், அரைஇறுதியில் பரம எதிரியான பாகிஸ்தானை 203 ரன்கள் வித்தியாசத்திலும் இந்திய அணி துவம்சம் செய்தது. கடைசியாக நடந்த இறுதிப்போட்டியில் மறுபடியும் ஆஸ்திரேலியாவை சந்தித்து 67 பந்துகள் எஞ்சியிருந்த நிலையில் 8 விக்கெட் வித்தியாசத்தில் புரட்டியெடுத்து சாம்பியன் ஆனது.

பிரதமர் வாழ்த்து

பிரமிக்க வைத்துள்ள இந்திய இளம் படைக்கு வாழ்த்துகள் குவிந்து வருகின்றன. ஜனாதிபதி ராம்நாத் கோவிந்த், துணை ஜனாதிபதி வெங்கையா நாயுடு, பிரதமர் நரேந்திரமோடி, காங்கிரஸ் தலைவர்கள் சோனியா காந்தி, ராகுல் காந்தி மற்றும் மத்திய மந்திரிகள், மாநில முதல்-மந்திரிகள், அரசியல் தலைவர்கள் வாழ்த்து தெரிவித்துள்ளனர். இதே போல் சமத்துவ மக்கள் கட்சி தலைவரும், நடிகருமான சரத்குமார், சமத்துவ மக்கள் கழக தலைவர் எர்ணாவூர் நாராயணன் ஆகியோரும் வாழ்த்து தெரிவித்து உள்ளனர்.

பிரதமர் மோடி தனது டுவிட்டர் பதிவில், ‘இளம் கிரிக்கெட் வீரர்களின் உன்னதமான சாதனை மெய்சிலிர்க்க வைத்தது. அவர்களுக்கு எனது வாழ்த்துகள். அவர்களது வெற்றி ஒவ்வொரு இந்தியரையும் பெருமைப்பட வைக்கிறது’ என்று குறிப்பிட்டுள்ளார்.

இந்நாள் மற்றும் முன்னாள் கிரிக்கெட் வீரர்களும் புகழாரம் சூட்டியுள்ளனர். ஜாம்பவான் சச்சின் தெண்டுல்கர் தனது பதிவில், ‘சிறந்த கூட்டு முயற்சியால் கனவு நனவாகி இருக்கிறது. நமது உலக சாம்பியன்களுக்கு வாழ்த்துகள். வழிநடத்திய பயிற்சியாளர் டிராவிட்டுக்கும் பெரிய பாராட்டுகள். உங்களது (இளம் வீரர்கள்) அழகான பயணம் இப்போது தான் தொடங்கியுள்ளது. தொடர்ந்து இதே போன்று சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்த வாழ்த்துகள். எல்லாவற்றுக்கும் மேலாக கிரிக்கெட்டை அனுபவித்து விளையாடுங்கள்’ என்று கூறியுள்ளார்.

கோலி-ஷேவாக்

இந்திய சீனியர் அணியின் கேப்டன் விராட் கோலி, ‘19 வயதுக்குட்பட்டோருக்கான அணிக்கு என்ன ஒரு அற்புதமான வெற்றி. நீண்ட தூர பயணத்துக்கு இது ஒரு படிக்கட்டு. மகிழ்ச்சியான தருணத்தை அனுபவியுங்கள்’ என்று குறிப்பிட்டார்.

முன்னாள் வீரர் ஷேவாக், ‘வெற்றியால் ஒவ்வொரு இந்தியனும் மகிழ்ச்சி அடைந்துள்ளனர். இளம் வீரர்களுக்காக தன்னை அர்ப்பணித்துக் கொண்ட டிராவிட்டையே எல்லா பெருமையும் சேரும்.’ என்றார். யுவராஜ்சிங் தனது பதிவில், ‘அபாரமான கூட்டு முயற்சியால் இந்தியா சாம்பியன் ஆகி இருக்கிறது. டிராவிட் போன்ற ஒருவர் இருக்கும் போது இந்த வெற்றி ஆச்சரியமில்லை’ என்று கூறியுள்ளார்.

Next Story