விஜய் ஹசாரே கோப்பை கிரிக்கெட்: தொடக்க ஆட்டத்தில் தமிழக அணி வெற்றி


விஜய் ஹசாரே கோப்பை கிரிக்கெட்: தொடக்க ஆட்டத்தில் தமிழக அணி வெற்றி
x
தினத்தந்தி 5 Feb 2018 10:00 PM GMT (Updated: 5 Feb 2018 8:44 PM GMT)

விஜய் ஹசாரே கோப்பை கிரிக்கெட் போட்டியில் சென்னையில் நேற்று நடந்த தொடக்க லீக் ஆட்டத்தில் தமிழக அணி 76 ரன்கள் வித்தியாசத்தில் குஜராத்தை தோற்கடித்தது.

சென்னை,

விஜய் ஹசாரே கோப்பை கிரிக்கெட் போட்டியில் சென்னையில் நேற்று நடந்த தொடக்க லீக் ஆட்டத்தில் தமிழக அணி 76 ரன்கள் வித்தியாசத்தில் குஜராத்தை தோற்கடித்தது. தமிழக அணியில் கவுசிக் காந்தி, விஜய் சங்கர் ஆகியோர் சதம் அடித்தனர்.

விஜய் ஹசாரே கோப்பை கிரிக்கெட் போட்டி இந்தியாவின் பல்வேறு நகரங்களில் நேற்று தொடங்கியது. இந்த போட்டியில் பங்கேற்றுள்ள 25 அணிகள் 4 பிரிவாக பிரிக்கப்பட்டு லீக்கில் மோதுகின்றன. லீக் முடிவில் ஒவ்வொரு பிரிவிலும் முதல் 2 இடங்களை பிடிக்கும் அணிகள் கால்இறுதிக்கு தகுதி பெறும்.

இந்த போட்டியில் தமிழக அணி ‘சி’ பிரிவில் இடம் பிடித்துள்ளது. குஜராத், மும்பை, மத்தியபிரதேசம், ஆந்திரா, ராஜஸ்தான், கோவா ஆகிய அணிகள் இந்த பிரிவில் உள்ள மற்ற அணிகளாகும். ‘சி’ பிரிவு லீக் ஆட்டங்கள் சென்னையில் நடத்தப்படுகிறது.

பச்சையப்பா கல்லூரி மைதானத்தில் நேற்று நடந்த தனது தொடக்க லீக் ஆட்டத்தில் தமிழக அணி, குஜராத்தை எதிர்கொண்டது. ‘டாஸ்’ ஜெயித்த குஜராத் அணி பீல்டிங்கை தேர்வு செய்தது. இதன்படி முதலில் பேட்டிங் செய்த தமிழக அணி நிர்ணயிக்கப்பட்ட 50 ஓவர்களில் 8 விக்கெட் இழப்புக்கு 311 ரன்கள் குவித்தது. அதிகபட்சமாக தொடக்க ஆட்டக்காரர் கவுசிக் காந்தி 127 ரன்னும் (120 பந்துகளில் 11 பவுண்டரி, ஒரு சிக்சருடன்), கேப்டன் விஜய் சங்கர் 100 ரன்னும் (102 பந்துகளில் 8 பவுண்டரி, 2 சிக்சருடன்) எடுத்தனர். எம்.விஜய் 11 ரன்னிலும், பாபா அபராஜித் 16 ரன்னிலும், வாஷிங்டன் சுந்தர் 6 ரன்னிலும், ஆர்.அஸ்வின் 2 ரன்னிலும் ஆட்டம் இழந்து ஏமாற்றம் அளித்தனர்.

பின்னர் இலக்கை நோக்கி ஆடிய குஜராத் அணி 45.1 ஓவர்களில் 235 ரன்னில் ஆல்-அவுட் ஆனது. இதனால் தமிழக அணி 76 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது. அதிகபட்சமாக பார்கவ் மீராய் 101 ரன்கள் எடுத்து ஆட்டம் இழந்தார். தமிழக அணி தரப்பில் அஸ்வின் கிறிஸ்ட் 3 விக்கெட்டும், ஆர்.அஸ்வின், வாஷிங்டன் சுந்தர் தலா 2 விக்கெட்டும், கே.விக்னேஷ், யோமகேஷ் தலா ஒரு விக்கெட்டும் கைப்பற்றினார்கள்.

எஸ்.எஸ்.என்.கல்லூரி மைதானத்தில் நடந்த மற்றொரு லீக் ஆட்டத்தில் ஆந்திரா அணி 6 விக்கெட் வித்தியாசத்தில் ராஜஸ்தான் அணியை சாய்த்தது. முதலில் ஆடிய ராஜஸ்தான் அணி 50 ஓவர்களில் 6 விக்கெட் இழப்புக்கு 229 ரன்கள் எடுத்தது. இதனை அடுத்து பேட்டிங் செய்த ஆந்திரா அணி 45 ஓவர்களில் 4 விக்கெட் இழப்புக்கு 235 ரன்கள் எடுத்து வெற்றி இலக்கை எட்டியது.

எம்.ஏ.சிதம்பரம் ஸ்டேடியத்தில் நடந்த இன்னொரு லீக் ஆட்டத்தில் மும்பை அணி 74 ரன்கள் வித்தியாசத்தில் மத்தியபிரதேச அணியை தோற்கடித்தது. முதலில் ஆடிய மும்பை அணி 50 ஓவர்களில் 5 விக்கெட் இழப்புக்கு 332 ரன்கள் குவித்தது. அதிகபட்சமாக சூர்யகுமார் யாதவ் 134 ரன்கள் (85 பந்துகளில் 11 பவுண்டரி, 7 சிக்சருடன்) எடுத்து ஆட்டம் இழக்காமல் இருந்தார். அடுத்து ஆடிய மத்தியபிரதேச அணி 46.1 ஓவர்களில் 258 ரன்னில் ‘ஆல்-அவுட்’ ஆகி தோல்வியை சந்தித்தது.

சென்னையில் இன்று (செவ்வாய்க்கிழமை) நடைபெறும் 2-வது லீக் ஆட்டங்களில் ஆந்திரா-மத்தியபிரதேசம் (பச்சையப்பா கல்லூரி மைதானம்), தமிழ்நாடு-கோவா (எம்.ஏ. சிதம்பரம் ஸ்டேடியம்), குஜராத்- மும்பை (எஸ்.எஸ்.என். கல்லூரி மைதானம்) அணிகள் மோதுகின்றன. போட்டி காலை 9 மணிக்கு தொடங்குகிறது.

Next Story