கிரிக்கெட்

தென்ஆப்பிரிக்க அணியின் விக்கெட் கீப்பர் குயின்டான் டி காக் விலகல் + "||" + Quinton de Gag dissociation

தென்ஆப்பிரிக்க அணியின் விக்கெட் கீப்பர் குயின்டான் டி காக் விலகல்

தென்ஆப்பிரிக்க அணியின் விக்கெட் கீப்பர் குயின்டான் டி காக் விலகல்
தென்ஆப்பிரிக்க கிரிக்கெட் அணியின் விக்கெட் கீப்பர் குயின்டான் டி காக் இந்தியாவுக்கு எதிரான எஞ்சிய போட்டி தொடரில் இருந்து காயம் காரணமாக விலகி இருக்கிறார்.
கேப்டவுன்,

தென்ஆப்பிரிக்க கிரிக்கெட் அணியின் விக்கெட் கீப்பர் குயின்டான் டி காக் இந்தியாவுக்கு எதிரான எஞ்சிய போட்டி தொடரில் இருந்து காயம் காரணமாக விலகி இருக்கிறார்.

இந்திய கிரிக்கெட் அணி தென்ஆப்பிரிக்காவில் சுற்றுப்பயணம் செய்து விளையாடி வருகிறது. இரு அணிகள் இடையிலான 6 ஆட்டங்கள் கொண்ட ஒருநாள் போட்டி தொடரில் டர்பனில் நடந்த முதலாவது ஒருநாள் போட்டியில் 6 விக்கெட் வித்தியாசத்திலும், செஞ்சூரியனில் நடந்த 2-வது போட்டியில் 9 விக்கெட் வித்தியாசத்திலும் இந்திய அணி வெற்றி பெற்று தொடரில் 2-0 என்ற கணக்கில் முன்னிலை வகிக்கிறது.


இந்தியா-தென்ஆப்பிரிக்கா அணிகள் இடையிலான 3-வது ஒருநாள் கிரிக்கெட் போட்டி கேப்டவுனில் நாளை (புதன்கிழமை) நடக்கிறது. இந்த நிலையில் தென்ஆப்பிரிக்க அணி மீண்டும் காயம் பிரச்சினையில் சிக்கி இருக்கிறது. 2-வது ஒருநாள் போட்டியில் விக்கெட் கீப்பர் குயின்டான் டி காக் பேட்டிங் செய்கையில் இடது கை மணிக்கட்டில் காயம் அடைந்துள்ளார்.

குயின்டான் டி காக்கின் காயம் குணமடைய 2 வாரம் முதல் 4 வாரம் வரை பிடிக்கும் என்று தென்ஆப்பிரிக்க அணியின் மானேஜர் தெரிவித்துள்ளார். இதனால் அவர் இந்தியாவுக்கு எதிரான எஞ்சிய ஒருநாள் போட்டி தொடர் மற்றும் 18-ந் தேதி தொடங்கும் 3 ஆட்டங்கள் கொண்ட 20 ஓவர் போட்டி தொடர் ஆகியவற்றில் இருந்து விலகி இருக்கிறார். கடைசி 10 நாட்களில் காயம் அடைந்த 3-வது தென் ஆப்பிரிக்க கிரிக்கெட் வீரர் குயின்டான் டி காக் ஆவார்.

ஏற்கனவே இந்தியாவுக்கு எதிரான கடைசி டெஸ்ட் போட்டியின் போது கைவிரலில் காயம் அடைந்த டிவில்லியர்ஸ் முதல் 3 ஒருநாள் போட்டியில் விளையாடமாட்டார் என்று அறிவிக்கப்பட்டுள்ளது. மேலும் இந்தியாவுக்கு எதிரான முதலாவது ஒருநாள் போட்டியில் கைவிரலில் காயம் அடைந்த கேப்டன் டுபிளிஸ்சிஸ் ஒருநாள் போட்டி தொடரில் இருந்து விலகி உள்ளார். 3 முக்கிய வீரர்கள் காயம் அடைந்து இருப்பது தென்ஆப்பிரிக்க அணிக்கு பெருத்த பின்னடைவாக கருதப்படுகிறது. டிவில்லியர்ஸ் 4-வது ஒருநாள் போட்டியில் களம் திரும்புவார் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

தொடக்க ஆட்டக்காரரும், விக்கெட் கீப்பருமான குயின்டான் டி காக்கின் காயம் தென்ஆப்பிரிக்க அணிக்கு தர்மசங்கடத்தை ஏற்படுத்தி இருக்கிறது. தொடக்க ஆட்டக்காரர் மற்றும் விக்கெட் கீப்பர் நிலைக்கு புதிய வீரரை அந்த அணி தேடும் நிலைக்கு தள்ளப்பட்டுள்ளது. ஹென்ரிச் காசென் தென்ஆப்பிரிக்க அணியில் 2-வது விக்கெட் கீப்பராக உள்ளார். அவர் கேப்டவுனில் நாளை நடைபெறும் ஒருநாள் போட்டியில் அறிமுக வீரராக ஆடும் அணியில் இடம் பெறுவார் என்று தெரிகிறது.