கிரிக்கெட்

விஜய் ஹசாரே கோப்பை கிரிக்கெட்: தமிழக அணியில் இருந்து எம்.விஜய் நீக்கம் + "||" + Vijay Hazare Cup Cricket: From Tamilnadu M. Vijay Removal

விஜய் ஹசாரே கோப்பை கிரிக்கெட்: தமிழக அணியில் இருந்து எம்.விஜய் நீக்கம்

விஜய் ஹசாரே கோப்பை கிரிக்கெட்:
தமிழக அணியில் இருந்து எம்.விஜய் நீக்கம்
விஜய் ஹசாரே கோப்பை கிரிக்கெட் போட்டியில் மும்பைக்கு எதிரான லீக் ஆட்டத்தில் கடைசி நேரத்தில் விலகிய எம்.விஜய்யை தமிழக அணியில் இருந்து நீக்கம் செய்து தமிழ்நாடு கிரிக்கெட் சங்கம் நடவடிக்கை எடுத்துள்ளது.
சென்னை,

விஜய் ஹசாரே கோப்பை கிரிக்கெட் போட்டியில் மும்பைக்கு எதிரான லீக் ஆட்டத்தில் கடைசி நேரத்தில் விலகிய எம்.விஜய்யை தமிழக அணியில் இருந்து நீக்கம் செய்து தமிழ்நாடு கிரிக்கெட் சங்கம் நடவடிக்கை எடுத்துள்ளது.

கடைசி நேரத்தில் விலகல்

விஜய் ஹசாரே கோப்பை கிரிக்கெட் போட்டி பல்வேறு இடங்களில் நடந்து வருகிறது. இதில் ‘சி’ பிரிவு லீக் ஆட்டங்கள் சென்னையில் நடத்தப்பட்டு வருகிறது. இதில் நேற்று முன்தினம் சென்னை எஸ்.எஸ்.என். கல்லூரி மைதானத்தில் நடந்த லீக் ஆட்டத்தில் தமிழக அணி 2 விக்கெட் வித்தியாசத்தில் மும்பையிடம் தோல்வி கண்டது. இந்த ஆட்டத்தில் தமிழக அணியின் தொடக்க ஆட்டக்காரர் எம்.விஜய் விளையாடவில்லை. அவர் விளையாடாதது ஏன்? என்பது குறித்த தகவல் தற்போது வெளியாகி இருக்கிறது.

போட்டி தொடங்குவதற்கு 1½ மணி நேரத்துக்கு முன்பு எம்.விஜய், தமிழக அணியின் பயிற்சியாளர் ரிஷிகேஷ் கனித்கரை டெலிபோனில் தொடர்பு கொண்டு தோள்பட்டை வலி காரணமாக தன்னால் இந்த ஆட்டத்தில் விளையாட முடியாது என்று தகவல் தெரிவித்துள்ளார். ஏற்கனவே தொடக்க ஆட்டக்காரர் அபினவ் முகுந்த் காயம் காரணமாக அணியில் இடம் பெறாததால் கங்கா ஸ்ரீதர் ராஜூ, கவுசிக் காந்தியுடன் இணைந்து தொடக்க ஆட்டக்காரராக களம் இறங்கினார். எம்.விஜய் தனது காயம் குறித்து அணியின் தேர்வாளர்கள் மற்றும் பிசியோதெரபிஸ்ட்க்கு தகவல் எதுவும் தெரிவிக்கவில்லை.

விஜய் நீக்கம்


முறையாக தகவல் தெரிவிக்காமல் கடைசி நேரத்தில் அணியில் இருந்து விலகிய விஜய்யின் மெத்தனப்போக்கு தமிழ்நாடு கிரிக்கெட் சங்கத்துக்கு எரிச்சலை ஏற்படுத்தி இருக்கிறது. இதனால் எஞ்சிய போட்டிகளுக்கான தமிழக அணியில் இருந்து எம்.விஜய்யை, தேர்வாளர்கள் நீக்கம் செய்து நடவடிக்கை மேற்கொண்டுள்ளனர். அவருக்கு பதிலாக பிரதோஷ் ரஞ்சன் பால் அணியில் சேர்க்கப்பட்டுள்ளார். விஜய் மீது ஒழுங்கு நடவடிக்கை எடுக்கப்படுமா? என்பது தெரியவில்லை. இந்த விவகாரம் குறித்து தமிழ்நாடு கிரிக்கெட் சங்க செயற்குழுவில் விவாதித்து முடிவு செய்யப்படும் என்று தமிழ்நாடு கிரிக்கெட் சங்க நிர்வாகி ஒருவர் தெரிவித்தார்.

இந்த நிலையில் பச்சையப்பன் கல்லூரி மைதானத்தில் நேற்று நடந்த லீக் ஆட்டத்தில் தமிழக அணி, மத்தியபிரதேசத்தை எதிர்கொண்டது. ‘டாஸ்’ ஜெயித்த மத்தியபிரதேச அணி பீல்டிங்கை தேர்வு செய்தது. இதன்படி முதலில் பேட்டிங் செய்த தமிழக அணி 50 ஓவர்களில் 9 விக்கெட் இழப்புக்கு 302 ரன்கள் குவித்தது. அதிகபட்சமாக ஜெகதீசன் 99 ரன்னும், கேப்டன் விஜய் சங்கர் 84 ரன்னும், பாபா அபராஜித் 43 ரன்னும், அனிருத் 39 ரன்னும் எடுத்தனர். மற்ற வீரர்கள் ஒற்றை இலக்க ரன்னில் ஆட்டம் இழந்தனர். மத்தியபிரதேச அணி தரப்பில் அங்கித் குஷ்வாஹ் 3 விக்கெட்டும், ஈஸ்வர் பாண்டே, புனீத் தாதேய், அங்கித் ஷர்மா தலா 2 விக்கெட்டும் வீழ்த்தினார்கள்.

தமிழக அணி தோல்வி

பின்னர் ஆடிய மத்தியபிரதேச அணி 46 ஓவர்களில் 2 விக்கெட் இழப்புக்கு 303 ரன்கள் எடுத்து 8 விக்கெட் வித்தியாசத்தில் அபார வெற்றி பெற்றது. தொடக்க ஆட்டக்காரர்கள் நமன் ஓஜா 39 ரன்னும் (35 பந்துகளில் 5 பவுண்டரி, ஒரு சிக்சருடன்), ரஜத் பதிதர் 158 ரன்னும் (111 பந்துகளில் 20 பவுண்டரி, 4 சிக்சருடன்) எடுத்து ஆட்டம் இழந்தனர். ரமீஸ்கான் 78 ரன்னுடனும், ஹர்பிரீத்சிங் 12 ரன்னுடனும் ஆட்டம் இழக்காமல் களத்தில் நின்றனர். முதல் ஆட்டத்தில் வெற்றி பெற்ற தமிழக அணி அடுத்த 3 லீக் ஆட்டங்களில் தொடர்ச்சியாக தோல்வியை சந்தித்துள்ளது.