“மில்லரின் கேட்ச்சை நழுவ விட்டதால் தோல்வி” இந்திய வீரர் தவான் பேட்டி


“மில்லரின் கேட்ச்சை நழுவ விட்டதால் தோல்வி” இந்திய வீரர் தவான் பேட்டி
x
தினத்தந்தி 12 Feb 2018 12:00 AM GMT (Updated: 11 Feb 2018 8:03 PM GMT)

தென்ஆப்பிரிக்காவுக்கு எதிரான 4-வது ஒரு நாள் கிரிக்கெட்டில் மழை குறுக்கீடு மற்றும் மில்லரின் கேட்ச்சை நழுவ விட்டதால் தோல்வி ஏற்பட்டதாக இந்திய வீரர் தவான் கூறியுள்ளார்.

ஜோகன்னஸ்பர்க்,

ஜோகன்னஸ்பர்க்கில் நேற்று முன்தினம் நடந்த 4-வது ஒரு நாள் கிரிக்கெட் போட்டியில் தென்ஆப்பிரிக்க அணி 5 விக்கெட் வித்தியாசத்தில் இந்தியாவை தோற்கடித்தது. இதில் முதலில் பேட் செய்த இந்தியா 7 விக்கெட் இழப்புக்கு 289 ரன்கள் சேர்த்தது. ஷிகர் தவான் 109 ரன்களும், கேப்டன் விராட் கோலி 75 ரன்களும், விக்கெட் கீப்பர் டோனி 42 ரன்களும் எடுத்தனர். இடையில், இடி-மின்னல் மற்றும் லேசான மழை காரணமாக ஆட்டம் 53 நிமிடங்கள் நிறுத்தப்பட்ட போதிலும் ஓவர்கள் குறைக்கப்படவில்லை.

பின்னர் தென்ஆப்பிரிக்க அணி ஆடியது. 7.2 ஓவர்களில் ஒரு விக்கெட்டுக்கு 43 ரன்கள் எடுத்திருந்த போது, மறுபடியும் மழை பெய்தது. இதனால் ஏறக்குறைய 2 மணிநேரம் ஆட்டம் பாதிக்கப்பட்டது. இதையடுத்து ‘டக்வொர்த் லீவிஸ்’ விதிமுறைப்படி தென்ஆப்பிரிக்க அணி 28 ஓவர்களில் 202 ரன்கள் எடுக்க வேண்டும் என்று இலக்கு திருத்தி அமைக்கப்பட்டது.

இதை நோக்கி ஆடிய தென்ஆப்பிரிக்காவுக்கு சீரான இடைவெளியில் விக்கெட்டுகள் விழுந்தன. யுஸ்வேந்திர சாஹலின் ஓவரில் இரு சிக்சர்களை தூக்கிய டிவில்லியர்ஸ் (26 ரன், 18 பந்து, ஒரு பவுண்டரி, 2 சிக்சர்), பாண்ட்யா வீசிய ஷாட்பிட்ச் பந்தையும் சிக்சராக்க முயற்சித்த போது எல்லைக்கோடு அருகே கேட்ச் ஆனார். அப்போது தென்ஆப்பிரிக்க அணி 4 விக்கெட்டுக்கு 102 ரன்களுடன் (16.5 ஓவர்) சிக்கலில் தவித்தது. தொடர்ந்து இன்னொரு அபாயகரமான வீரர் டேவிட் மில்லர் 6 ரன்னில் இருந்த போது வெளியேறி இருக்க வேண்டியது. யுஸ்வேந்திர சாஹலின் பந்து வீச்சில் அவர் கொடுத்த எளிதான கேட்ச் வாய்ப்பை ஸ்ரேயாஸ் அய்யர் கோட்டை விட்டார். அடுத்த 3-வது பந்தில் முட்டிப்போட்டு விளாச முயன்ற போது கிளன் போல்டு ஆனார். ஆனால் ‘ரீப்ளே’யில் யுஸ்வேந்திர சாஹல் கிரீசுக்கு வெளியே காலை வைத்து நோ-பாலாக வீசியது தெரியவந்தது.

அடுத்தடுத்து இரு முறை கண்டம் தப்பிய டேவிட் மில்லர், அந்த பொன்னான வாய்ப்பை கச்சிதமாக பயன்படுத்திக் கொண்டு, பாண்ட்யாவின் ஓவரில் ‘ஹாட்ரிக்’ பவுண்டரி விரட்டினார். அவருக்கு விக்கெட் கீப்பர் ஹென்ரிச் கிளாசெனும் ஒத்துழைப்பு கொடுக்க, அந்த அணி சரிவில் இருந்து மீண்டது.

அணியின் ஸ்கோர் 174 ரன்களை எட்டிய போது, மில்லர் (39 ரன், 28 பந்து, 4 பவுண்டரி, 2 சிக்சர்) யுஸ்வேந்திர சாஹலின் பந்து வீச்சில் எல்.பி. டபிள்யூ. ஆனார். தொடர்ந்து இறங்கிய ஆல்-ரவுண்டர் பெலக்வாயோ, வாணவேடிக்கை காட்டினார். தான் சந்தித்த கடைசி 3 பந்துகளையும் சிக்சருக்கு அனுப்பி ஆட்டத்தை முடிவுக்கு கொண்டு வந்தார்.

தென்ஆப்பிரிக்க அணி 25.3 ஓவர்களில் 5 விக்கெட் இழப்புக்கு 207 ரன்கள் விளாசி அபார வெற்றி பெற்றது. ஹென்ரிச் கிளாசென் 43 ரன்களுடனும் (27 பந்து, 5 பவுண்டரி, ஒரு சிக்சர்), பெலக்வாயோ 23 ரன்களுடனும் (5 பந்து, ஒரு பவுண்டரி, 3 சிக்சர்) களத்தில் இருந்தனர்.

இந்த ஆட்டத்தில் தென்ஆப்பிரிக்காவின் சில ஷாட்டுகள் வியப்பூட்டும் வகையில் புதுமையாக இருந்தன. முந்தைய ஆட்டத்தில் சுழலில் மிரட்டிய யுஸ்வேந்திர சாஹல்- குல்தீப் யாதவின் பந்து வீச்சை இந்த முறை தென்ஆப்பிரிக்க வீரர்கள் பதம் பார்த்து விட்டனர். இவர்கள் கூட்டாக 69 பந்துகளில் 119 ரன்களை வாரி வழங்கி, 3 விக்கெட்டுகளை மட்டுமே வீழ்த்தினர். தென்ஆப்பிரிக்க பேட்ஸ்மேன்கள் மொத்தம் 8 சிக்சர்களை பறக்க விட்டனர். இவை அனைத்தும் சுழற்பந்து வீச்சிலேயே ஓடின. மார்பக புற்றுநோய் விழிப்புணர்வுக்காக தென்ஆப்பிரிக்க அணியினர் இந்த ஆட்டத்தில் இளஞ்சிவப்பு நிற (பிங்க்) உடையுடன் விளையாடினர். இளஞ்சிவப்பு நிற உடையில் ஒரு போதும் தோற்றதில்லை (6 ஆட்டத்திலும் வெற்றி) என்ற பெருமையை தென்ஆப்பிரிக்க வீரர்கள் தக்க வைத்துக் கொண்டனர்.

வெற்றி பெற்றாலும் தென்ஆப்பிரிக்க அணி 6 போட்டிகள் கொண்ட இந்த தொடரில் 1-3 என்ற கணக்கில் இன்னும் பின்தங்கியே இருக்கிறது. 5-வது ஒரு நாள் போட்டி போர்ட் எலிசபெத்தில் நாளை (செவ்வாய்க்கிழமை) நடக்கிறது.

தோல்விக்கு பிறகு இந்திய கேப்டன் விராட் கோலி கூறுகையில், ‘எங்களுக்கு கிடைத்த வாய்ப்புகளை நாங்கள் பயன்படுத்திக்கொள்ள தவறி விட்டோம். எப்போதுமே நோ-பால் வீசப்படுவது அணிக்கு பாதிப்பை ஏற்படுத்தத்தான் செய்யும். இந்த ஆட்டத்தில் எல்லா பெருமையும் தென்ஆப்பிரிக்காவையே சாரும். அவர்கள் வெற்றிக்கு தகுதியான அணி.

2-வது இன்னிங்சில் பந்துக்கும் (168 பந்தில் 202 ரன்கள் தேவை) ரன்களுக்கும் உள்ள இடைவெளி 34 தான். கிட்டத்தட்ட 20 ஓவர் போட்டியாக மாறி விட்டது. பந்தும் கொஞ்சம் ஈரப்பதம் ஆனது. சுழற்பந்துவீச்சில் பந்து ஓரளவு திரும்பின. ஆனாலும் தென்ஆப்பிரிக்க பேட்ஸ்மேன்கள் வாய்ப்பை நேர்த்தியாக பயன்படுத்தி வெற்றி பெற்று விட்டனர். குறைந்த ஓவர்களை கொண்ட ஆட்டம் என்பது அவர்களுக்கு கைகொடுத்தது. போட்டி முழுமையாக நடந்திருந்தால் முடிவு வேறு மாதிரி இருந்திருக்கலாம்’ என்றார்.

தென்ஆப்பிரிக்க கேப்டன் மார்க்ராம் கூறுகையில், ‘தோல்விப்பாதையில் இருந்து மீண்டு வெற்றிக்கு திரும்பியதால் நிம்மதி அடைந்துள்ளோம். இந்திய வீரர்களுக்கு நெருக்கடி கொடுத்தது மகிழ்ச்சியான உணர்வை தருகிறது. இந்திய வீரர்கள் வேகமாக ரன்கள் குவித்த நிலையில், மோசமான வானிலையால் ஆட்டம் நிறுத்தப்பட்டது, எங்களுக்கு கிடைத்த அதிர்ஷ்டவசமாகும். இதனால் இந்திய வீரர்களின் உத்வேகத்துக்கு முட்டுக்கட்டை விழுந்தது. அவர்களை 290 ரன்களுக்கு கட்டுப்படுத்தியது சிறப்பான விஷயம்.

தொடர்ந்து இதே போன்று போராட வேண்டியது அவசியமாகும். இன்னும் எங்களது மிகச்சிறந்த ஆட்டம் வெளியாகவில்லை. ஒவ்வொரு ஆட்டத்திலும் முன்னேற்றம் காண வேண்டும்’ என்றார்.

ஷிகர் தவான், தனது 100-வது போட்டியில் சதம் அடித்து சாதனை படைத்தும் பிரயோஜனம் இல்லாமல் போய் விட்டது. அவரது 13 சதங்களில் 3-ல் இந்திய அணி தோல்வி கண்டிருக்கிறது. தவான் நிருபர்களிடம் கூறியதாவது:-

டேவிட் மில்லருக்கு கேட்ச்சை நழுவ விட்டதும், அதன் பிறகு கிளன் போல்டு ஆன போதிலும் அது நோ-பால் ஆனதும் எங்களின் தோல்விக்கு முக்கிய காரணமாகும். அதில் இருந்து தான் ஆட்டத்தின் போக்கு மாறியது. அதற்கு முன்பு வரை நல்ல நிலையிலேயே இருந்தோம். பொதுவாக எங்களது சுழற்பந்து வீச்சாளர்கள் நோ-பால்கள் வீசுவதில்லை. கிடைத்த வாய்ப்பை டேவிட் மில்லர் இரு கைகளாலும் கெட்டியாக பிடித்துக் கொண்டார். அதிரடியாக விளையாடி, ஆட்டத்தை தங்கள் அணி பக்கம் திருப்பினார்.

அதே போல் மழை பெய்ததும் எங்களுக்கு பின்னடைவாக அமைந்தது. இதனால் முந்தைய மூன்று ஆட்டங்களில் செய்தது போல் எங்களது சுழற்பந்து வீச்சாளர்களால் பந்தை அதிகமாக சுழலச் செய்ய முடியவில்லை. பந்து ஈரப்பதம் ஆனதால், அதை சரியாக பிடித்து வீச போதிய ‘கிரிப்’பும் கிடைக்கவில்லை.

இங்குள்ள ஆடுகளத்தில், மாலையில் பந்து நன்கு நகரும். குளிர்காற்றும் தாக்கத்தை ஏற்படுத்தக்கூடும். இதனாலேயே டாஸ் ஜெயித்து முதலில் பேட்டிங்கை தேர்ந்தெடுத்தோம். முதலில் எங்களது ரன்வேகம் சிறப்பாகவே இருந்தது. மழை குறுக்கிட்டதும், ரன்வேகம் தடைபட்டது. அதற்காக இதை மோசமான ஸ்கோர் என்று சொல்ல முடியாது. ஆனால் மழையால் அவுட் பீல்டு ஈரப்பதமாகி விட்டது. இறுதி கட்ட ஓவர்களில் புவனேஷ்வர்குமார், பும்ராவுக்கு பதிலாக சுழற்பந்து வீச்சாளர்களை கேப்டன் கோலி பயன்படுத்தியது குறித்து கேட்கிறீர்கள். அந்த சமயத்தில் சுழற்பந்து வீச்சாளர்கள் விக்கெட்டை கைப்பற்றுவார்கள் என்று அவர் கருதினார். சில சமயம் நாம் எடுக்கும் கடினமான முடிவுக்கு பலன் கிடைக்கும். சில நேரம் வேறு மாதிரி நடந்து விடும். விளையாட்டில் இது சகஜம்.

எனது 100-வது ஆட்டத்தில் சதம் கண்டது மிகவும் மகிழ்ச்சி அளிக்கிறது. எனது ஆட்டத்திறனில் முன்னேற்றம் காண விரும்புகிறேன். இவ்வாறு தவான் கூறினார்.

ஆட்டநாயகனாக தேர்வு செய்யப்பட்ட தென்ஆப்பிரிக்க விக்கெட் கீப்பர் ஹென்ரிச் கிளாசென் கூறுகையில், ‘இறுதிகட்ட ஓவர்களில் வேகப்பந்து வீச்சாளர்கள் புவனேஷ்வர்குமார், பும்ரா ஆகியோரை இந்திய கேப்டன் கோலி பயன்படுத்தாதது எனக்கு முற்றிலும் ஆச்சரியம் அளித்தது.

இந்த வெற்றியின் மூலம் எங்களது நம்பிக்கை பலமடங்கு உயர்ந்து இருக்கிறது. வீரர்களின் ஓய்வறையிலும் உற்சாகமான சூழல் நிலவுகிறது. டிவில்லியர்சின் வருகை அணிக்குள் உத்வேகத்தை ஏற்படுத்தி இருப்பதை மறுக்க முடியாது. இந்த தொடரில் முதல் வெற்றியை அதுவும் ‘பிங்க்டே’யில் பெற்றிருப்பது சிறப்பு வாய்ந்த ஒன்று’ என்றார்.

Next Story