‘வருத்தமின்றி கிரிக்கெட்டில் இருந்து விடைபெற விரும்புகிறேன்’ யுவராஜ்சிங் சொல்கிறார்


‘வருத்தமின்றி கிரிக்கெட்டில் இருந்து விடைபெற விரும்புகிறேன்’ யுவராஜ்சிங் சொல்கிறார்
x
தினத்தந்தி 13 Feb 2018 9:45 PM GMT (Updated: 13 Feb 2018 8:53 PM GMT)

எந்தவித வருத்தமும் இன்றி சர்வதேச கிரிக்கெட்டில் இருந்து விடைபெற விரும்புவதாக இந்திய வீரர் யுவராஜ்சிங் கூறியுள்ளார்.

புதுடெல்லி,

எந்தவித வருத்தமும் இன்றி சர்வதேச கிரிக்கெட்டில் இருந்து விடைபெற விரும்புவதாக இந்திய வீரர் யுவராஜ்சிங் கூறியுள்ளார்.

யுவராஜ்சிங் பேட்டி

இந்திய கிரிக்கெட் அணியில் மீண்டும் இடம் பிடிக்க போராடி வரும் 36 வயதான யுவராஜ்சிங் எதிர்கால திட்டம் குறித்து அளித்த ஒரு பேட்டியில் கூறியதாவது:-

வர்ணனையாளர் பணிக்குரிய தனித்திறன் எனக்கு கிடையாது. எதிர்காலத்தில் எனது அறக்கட்டளையின் மூலம் புற்றுநோய் விழிப்புணர்வு பிரசாரம் மற்றும் பாதிக்கப்பட்டவர்களுக்கு உதவுவதில் கவனம் செலுத்துவேன். பயிற்சியாளராக செயல்படும் எண்ணமும் உள்ளது.

இளம் சந்ததியினருடன் கலந்துரையாடி அவர்களை ஊக்கப்படுத்துவது மிகவும் பிடிக்கும். சமூகத்தில் பின்தங்கிய குழந்தைகள் படிப்பிலும், விளையாட்டிலும் கவனம் செலுத்த உதவுவேன். விளையாட்டை போன்று கல்வி ஒவ்வொருவருக்கும் முக்கியமானது. இரண்டிலும் கவனம் செலுத்துவது அவசியமாகும். விளையாட்டால் எந்த வகையிலும் கல்வி பாதிக்கப்படக்கூடாது.

ஓய்வு குறித்து...

எந்தவித வருத்தமும் இன்றி கிரிக்கெட்டில் இருந்து விடைபெற வேண்டும் என்பதே எனது விருப்பமாகும். ஓய்வுக்கு பிறகு இன்னும் சில ஆண்டுகள் விளையாடி இருக்கலாமே... என்ற எண்ணம் வரக்கூடாது. ‘எனது மிகச்சிறந்த ஆட்டத்தை வெளிப்படுத்தி முடித்துவிட்டேன். இனி சாதிப்பதற்கு ஒன்றும் இல்லை’ என்று உணரும் போது, ஓய்வு முடிவை அறிவிப்பேன்.

நான் கிரிக்கெட்டை ரசித்து அனுபவித்து ஆடுகிறேன். அதனால் தான் இன்னும் விளையாடிக்கொண்டிருக்கிறேனே தவிர, இந்திய அணிக்காக விளையாட வேண்டும் அல்லது ஐ.பி.எல்.-க்காக ஆட வேண்டும் என்பதால் மட்டும் அல்ல. இந்திய அணிக்காக மீண்டும் பங்கேற்க வேண்டும் என்ற உத்வேகம் குறையவில்லை. இதே போல் இன்னும் 2 அல்லது மூன்று ஆண்டுகள் ஐ.பி.எல். கிரிக்கெட்டில் விளையாட முடியும் என்று உறுதியாக நம்புகிறேன்.

மனவலிமையின் தூண்

கடினமான சூழலில் தைரியத்தை இழக்காமல் போராடக்கூடியவன் நான். அதனால் தான் புற்றுநோய் பாதிப்பில் இருந்து மீண்டு வந்து இருக்கிறேன். இது போன்ற கஷ்டமான சூழலை சந்திக்கும் மக்களின் மனதில், மனவலிமையை ஏற்படுத்தும் ஒரு தூணாக நான் இருக்க விரும்புகிறேன். வாழ்க்கையில் எந்த ஒரு தருணத்திலும் நம்பிக்கையை இழக்கக்கூடாது. அப்படிப்பட்ட ஒருவராக இருக்க வேண்டும். இந்திய அணிக்காக விளையாடுகிறேனோ இல்லையோ, களத்தில் எப்போதும் எனது 100 சதவீத திறமையை வெளிப்படுத்துவேன்.

இவ்வாறு யுவராஜ்சிங் கூறினார்.

யுவராஜ்சிங், கடைசியாக கடந்த ஆண்டு ஜூன் மாதம் வெஸ்ட் இண்டீசுக்கு எதிரான ஒரு நாள் போட்டியில் விளையாடி இருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.

Next Story