‘2019–ம் ஆண்டு உலக கோப்பை போட்டியில் விளையாடுவேன்’ ரெய்னா நம்பிக்கை


‘2019–ம் ஆண்டு உலக கோப்பை போட்டியில் விளையாடுவேன்’ ரெய்னா நம்பிக்கை
x
தினத்தந்தி 16 Feb 2018 9:30 PM GMT (Updated: 16 Feb 2018 8:45 PM GMT)

இந்திய கிரிக்கெட் அணியின் மிடில் வரிசை பேட்ஸ்மேன் சுரேஷ் ரெய்னா, ஓராண்டு இடைவெளிக்கு பிறகு சர்வதேச 20 ஓவர் போட்டிக்கு அழைக்கப்பட்டுள்ளார்.

ஜோகன்னஸ்பர்க்,

இந்திய கிரிக்கெட் அணியின் மிடில் வரிசை பேட்ஸ்மேன் சுரேஷ் ரெய்னா, ஓராண்டு இடைவெளிக்கு பிறகு சர்வதேச 20 ஓவர் போட்டிக்கு அழைக்கப்பட்டுள்ளார். தென்ஆப்பிரிக்காவுக்கு எதிரான 20 ஓவர் தொடரில் அவர் விளையாட உள்ளார். ஒரு நாள் கிரிக்கெட்டை பொறுத்தவரை, 2015–ம் ஆண்டு அக்டோபர் மாதத்திற்கு பிறகு இந்திய அணியில் அவருக்கு இடம் கிடைக்கவில்லை.

இந்த நிலையில் 31 வயதான ரெய்னா அளித்த ஒரு பேட்டியில், ‘சிறப்பாக ஆடிய போதும் கூட அணியில் இருந்து நீக்கப்பட்டது வேதனை அளித்தது. இப்போது ‘யோ–யோ’ உடல்தகுதி தேர்வில் வெற்றி பெற்று விட்டதால், மனதளவில் வலிமையானவராக உணருகிறேன். தென்ஆப்பிரிக்காவுக்கு எதிரான 3 ஆட்டங்கள் கொண்ட 20 ஓவர் தொடர் எனக்கு வாழ்வா–சாவா? போட்டி என்பதில் சந்தேகமில்லை. முதல்முறையாக இந்திய அணிக்கு தேர்வானது போன்று உணர்கிறேன். கடந்த இரு ஆண்டுகளாக கடினமாக உழைத்து வருகிறேன். இந்திய அணிக்குரிய எனது சீருடையை பார்க்கும் போது, அதை அணிய முடியவில்லையே என்று நினைத்து உணர்ச்சி வசப்படுவது உண்டு. ஏற்கனவே நான் சொன்னது போல் இந்த தொடர் எனக்கு மிகவும் முக்கியமானது. இதில் சிறப்பாக செயல்பட்டால், ஒரு நாள் போட்டி அணிக்கு என்னால் உறுதியாக திரும்ப முடியும். இந்திய அணிக்காக முடிந்த வரை நீண்ட காலம் விளையாட வேண்டும். குறிப்பாக 2019–ம் ஆண்டு உலக கோப்பையில் நான் விளையாடியாக வேண்டும். ஏனெனில் இங்கிலாந்தில் நான் நன்றாக ஆடியிருப்பதை அறிவேன். நிச்சயம் தென்ஆப்பிரிக்க தொடரில் அசத்துவேன் என்ற நம்பிக்கை இருக்கிறது’ என்றார்.


Next Story