நியூசிலாந்துக்கு எதிரான 20 ஓவர் கிரிக்கெட்: 244 ரன் இலக்கை ‘சேசிங்’ செய்து ஆஸ்திரேலிய அணி உலக சாதனை


நியூசிலாந்துக்கு எதிரான 20 ஓவர் கிரிக்கெட்: 244 ரன் இலக்கை ‘சேசிங்’ செய்து ஆஸ்திரேலிய அணி உலக சாதனை
x
தினத்தந்தி 16 Feb 2018 10:00 PM GMT (Updated: 16 Feb 2018 8:51 PM GMT)

நியூசிலாந்துக்கு எதிரான 20 ஓவர் கிரிக்கெட் போட்டியில் 244 ரன் இலக்கை வெற்றிகரமாக ‘சேசிங்’ செய்து ஆஸ்திரேலியா உலக சாதனை படைத்தது.

ஆக்லாந்து,

நியூசிலாந்துக்கு எதிரான 20 ஓவர் கிரிக்கெட் போட்டியில் 244 ரன் இலக்கை வெற்றிகரமாக ‘சேசிங்’ செய்து ஆஸ்திரேலியா உலக சாதனை படைத்தது.

கப்தில் சதம்

இங்கிலாந்து, நியூசிலாந்து, ஆஸ்திரேலியா ஆகிய 3 நாடுகள் இடையிலான 20 ஓவர் கிரிக்கெட் தொடர் நியூசிலாந்தில் நடந்து வருகிறது. இதில் ஆக்லாந்தில் நேற்று நடந்த 5-வது லீக் ஆட்டத்தில் ஆஸ்திரேலியா - நியூசிலாந்து அணிகள் சந்தித்தன.

‘டாஸ்’ ஜெயித்து முதலில் பேட் செய்த நியூசிலாந்து அணியில், தொடக்க ஆட்டக்காரர்கள் மார்ட்டின் கப்திலும், காலின் முன்ரோவும், ஆஸ்திரேலியாவின் பந்து வீச்சை நொறுக்கித்தள்ளினர். பேட்டிங்குக்கு சொர்க்கப்புரியான ஆடுகளம், சிறிய மைதானம் என்பதால் பேட்டில் பட்ட பந்துகள் எல்லாம் தெறித்து ஓடின. சிக்சர் மழை பொழிந்து உள்ளூர் ரசிகர்களுக்கு விருந்து படைத்த இவர்கள் தொடக்க விக்கெட்டுக்கு 132 ரன்கள் (10.4 ஓவர்) திரட்டினர். காலின் முன்ரோ 6 பவுண்டரி, 6 சிக்சருடன் 76 ரன்களும் (33 பந்து), தனது 2-வது சதத்தை நிறைவு செய்த மார்ட்டின் கப்தில் 105 ரன்களும் (54 பந்து, 6 பவுண்டரி, 9 சிக்சர்) எடுத்து ஆட்டம் இழந்தனர். நிர்ணயிக்கப்பட்ட 20 ஓவர்களில் நியூசிலாந்து அணி 6 விக்கெட் இழப்புக்கு 243 ரன்கள் குவித்தது.

டார்சி ஷார்ட் 76 ரன்

பின்னர் இமாலய இலக்கை நோக்கி விளையாடிய ஆஸ்திரேலிய அணி, சுடச்சுட பதிலடி கொடுத்தது. அந்த அணியின் தொடக்க ஆட்டக்காரர்கள் டேவிட் வார்னரும், டார்சி ஷார்ட்டும் 7.1 ஓவருக்குள் 100 ரன்களை கொண்டு வந்தனர். இந்த கூட்டணி முதல் விக்கெட்டுக்கு 121 ரன்கள் சேர்த்து வலுவான அஸ்திவாரம் அமைத்து தந்தது. வார்னர் 59 ரன்களும் (24 பந்து, 4 பவுண்டரி, 5 சிக்சர்), டார்சி ஷார்ட் 76 ரன்களும் (44 பந்து, 8 பவுண்டரி, 3 சிக்சர்) எடுத்து அவுட் ஆனார்கள்.

அடுத்து வந்த கிறிஸ் லின் (18 ரன்), மேக்ஸ்வெல் (31 ரன், 3 பவுண்டரி, 2 சிக்சர்), ஆரோன் பிஞ்ச் (36 ரன், 3 பவுண்டரி, 3 சிக்சர்) ஆகியோரும் கணிசமான பங்களிப்பை அளித்து வெற்றிப்பாதைக்கு வழிவகுத்தனர்.

ஆஸ்திரேலியா சாதனை வெற்றி


ஆஸ்திரேலிய அணி 18.5 ஓவர்களில் 5 விக்கெட் இழப்புக்கு 245 ரன்கள் குவித்து 5 விக்கெட் வித்தியாசத்தில் சாதனை வெற்றியை பெற்றது. 20 ஓவர் கிரிக்கெட் வரலாற்றில் ஒரு அணி வெற்றிகரமாக துரத்திப்பிடித்த (சேசிங்) அதிகபட்ச இலக்கு இது தான். இதற்கு முன்பு வெஸ்ட் இண்டீஸ் அணி 2015-ம் ஆண்டில் தென்ஆப்பிரிக்காவுக்கு எதிராக 232 ரன் இலக்கை சேசிங் செய்ததே சிறப்பானதாக இருந்தது. அச்சாதனையை இப்போது ஆஸ்திரேலியா தகர்த்து இருக்கிறது. டார்சி ஷார்ட் ஆட்டநாயகன் விருதை பெற்றார். இவர் ஐ.பி.எல். கிரிக்கெட்டில் ராஜஸ்தான் ராயல்ஸ் அணிக்காக ரூ.4 கோடிக்கு ஒப்பந்தம் ஆகியிருப்பது குறிப்பிடத்தக்கது.

இந்த தொடரில் தொடர்ச்சியாக 4-வது வெற்றியை பதிவு செய்த ஆஸ்திரேலிய அணி ஏற்கனவே இறுதிப்போட்டிக்கு தகுதி பெற்று விட்டது. ஹாமில்டனில் நாளை நடைபெறும் 6-வது மற்றும் கடைசி லீக் ஆட்டத்தில் நியூசிலாந்து-இங்கிலாந்து அணிகள் மோதுகின்றன.

Next Story