கிரிக்கெட்

தென்ஆப்பிரிக்காவுக்கு எதிரானகடைசி ஒரு நாள் போட்டியிலும் இந்தியா அசத்தல் வெற்றி + "||" + Against South Africa The last one day match India Winning

தென்ஆப்பிரிக்காவுக்கு எதிரானகடைசி ஒரு நாள் போட்டியிலும் இந்தியா அசத்தல் வெற்றி

தென்ஆப்பிரிக்காவுக்கு எதிரானகடைசி ஒரு நாள் போட்டியிலும் இந்தியா அசத்தல் வெற்றி
தென்ஆப்பிரிக்காவுக்கு எதிரான கடைசி ஒரு நாள் கிரிக்கெட் போட்டியிலும் வெற்றிக்கனியை பறித்த இந்திய அணி தொடரை 5-1 என்ற கணக்கில் கைப்பற்றியது.
செஞ்சூரியன்,

தென்ஆப்பிரிக்காவுக்கு எதிரான கடைசி ஒரு நாள் கிரிக்கெட் போட்டியிலும் வெற்றிக்கனியை பறித்த இந்திய அணி தொடரை 5-1 என்ற கணக்கில் கைப்பற்றியது.

டுமினி, ரபடா நீக்கம்


இந்தியா - தென்ஆப்பிரிக்கா அணிகள் இடையிலான 6-வது மற்றும் கடைசி ஒரு நாள் கிரிக்கெட் போட்டி செஞ்சூரியனில் உள்ள சூப்பர் ஸ்போர்ட் பார்க் ஸ்டேடியத்தில் நேற்று நடந்தது. தொடரை ஏற்கனவே வசப்படுத்தி விட்டதால் இந்திய அணியில் வேகப்பந்து வீச்சாளர் புவனேஷ்வர்குமாருக்கு ஓய்வு அளிக்கப்பட்டு, ஷர்துல் தாகூர் சேர்க்கப்பட்டார். மராட்டியத்தை சேர்ந்த தாகூருக்கு இது 3-வது சர்வதேச போட்டியாகும். தென்ஆப்பிரிக்க அணியில் அதிரடி மாற்றமாக டுமினி, டேவிட் மில்லர், ரபடா, ஷம்சி கழற்றி விடப்பட்டு அவர்களுக்கு பதிலாக கிறிஸ் மோரிஸ், இம்ரான் தாஹிர், கயா ஜோன்டோ, பெஹர்டைன் இடம் பிடித்தனர்.


‘டாஸ்’ ஜெயித்த இந்திய கேப்டன் விராட் கோலி, பந்து வீச்சை தேர்வு செய்தார். இதன்படி முதலில் பேட்டிங்கை தொடங்கிய தென்ஆப்பிரிக்க அணியில் ஹசிம் அம்லாவும், கேப்டன் மார்க்ராமும் தொடக்க ஆட்டக்காரர்களாக அடியெடுத்து வைத்தனர். ஷர்துர் தாகூர் வீசிய முதல் ஓவரிலேயே மார்க்ராம் 2 பவுண்டரிகளை ஓடவிட்டார்.

தாகூர் அசத்தல்

அதன் பிறகு இந்திய பவுலர்கள், தென்ஆப்பிரிக்க பேட்ஸ்மேன்களுக்கு கடுமையான நெருக்கடி கொடுத்தனர். அதற்கு ஏற்றார் போல் நமது பீல்டிங்கும் சூப்பராக அமைந்ததால், ரன் சேர்ப்பதில் தடுமாறினர். வேகப்பந்து வீச்சில் பந்து ஓரளவு ஸ்விங்கும் ஆனது. அம்லா (10 ரன், 19 பந்து, 2 பவுண்டரி), தாகூரின் ஓவரில் லெக்சைடு சற்று எழும்பி வந்த பந்தில் விக்கெட் கீப்பர் டோனியிடம் கேட்ச் ஆனார். 2-வது விக்கெட்டுக்கு டிவில்லியர்ஸ் ஆட வந்தார்.

சிறிது நேரத்தில் மார்க்ராம் (24 ரன், 30 பந்து, 3 பவுண்டரி, ஒரு சிக்சர்) வெளியேற்றப்பட்டார். மார்க்ராம், தாகூர் வீசிய பந்தை விரட்டியடித்த போது, ‘கவர்’ திசையில் நின்ற ஸ்ரேயாஸ் அய்யர் தாவிகுதித்து பிரமாதமாக கேட்ச் செய்தார். முந்தைய இரு ஆட்டங்களில் எளிதான கேட்ச்சுகளை கோட்டை விட்ட அய்யர், இந்த முறை கஷ்டமான கேட்ச்சை பிடித்து வியக்க வைத்தார்.

டிவில்லியர்ஸ் 30 ரன்

இதைத் தொடர்ந்து டிவில்லியர்சும், கயா ஜோன்டோவும் ஜோடி போட்டு, அணியை சரிவில் இருந்து மீட்கும் போராட்டத்தில் ஈடுபட்டனர். குல்தீப் யாதவின் ஓவரில், டிவில்லியர்ஸ் ‘ஹாட்ரிக்’ பவுண்டரிகள் விளாசினார். ஜோன்டோ 24 ரன்னில் இருந்த போது, சாஹலின் சுழலில் எல்.பி.டபிள்யூ. ஆனார். பிறகு டி.ஆர்.எஸ். தொழில்நுட்பத்தின்படி அப்பீல் செய்து தப்பிபிழைத்த ஜோன்டோ அதே ஓவரில் இரு சிக்சர்களை தூக்கினார். 19 ஓவர்களில் அந்த அணி 100 ரன்களை தொட்டது. இவர்கள் ஆடிய விதத்தை பார்த்த போது அந்த அணி 300 ரன்களை நெருங்குவதற்கு வாய்ப்பு இருப்பது போலவே தெரிந்தது.

அணியின் ஸ்கோர் 105 ரன்களாக உயர்ந்த போது, டிவில்லியர்ஸ் (30 ரன், 34 பந்து, 4 பவுண்டரி) சாஹலின் பந்துவீச்சில் சற்று விலகி நின்று அடிக்க முயன்ற போது, அவருக்கு லெக்-ஸ்டம்பு தகர்ந்தது. அதன் பிறகு இந்தியர்களின் பிடி இறுகியதால், தென்ஆப்பிரிக்க வீரர்களின் ரன்வேகம் மந்தமானது. அடுத்து வந்த ஹென்ரிச் கிளாசென் 22 ரன்னிலும், பெஹர்டைன் ஒரு ரன்னிலும், கிறிஸ் மோரிஸ் 4 ரன்னிலும், தனது முதலாவது அரைசதத்தை எட்டிய ஜோன்டோ 54 ரன்னிலும் (74 பந்து, 3 பவுண்டரி, 2 சிக்சர்) பெவிலியன் திரும்பினர். அப்போது அந்த அணி 7 விக்கெட்டுக்கு 151 ரன்களுடன் (37 ஓவர்) ஊசலாடியது.

தென்ஆப்பிரிக்கா 204 ரன்

நெருக்கடிக்கு மத்தியில், கடைசி கட்டத்தில் மோர்னே மோர்கல் (2 சிக்சருடன் 20 ரன்), ஆல்-ரவுண்டர் பெலக்வாயோ (2 பவுண்டரி, 2 சிக்சருடன் 34 ரன்) ஆகியோர் ஓரளவு தாக்குப்பிடித்து ஆடியதால் அந்த அணி ஒரு வழியாக 200 ரன்களை கடந்தது.

தென்ஆப்பிரிக்க அணி 46.5 ஓவர்களில் 204 ரன்களுக்கு ஆல்-அவுட் ஆனது. இந்திய தரப்பில் ஷர்துர் தாகூர் 4 விக்கெட்டுகளும், பும்ரா, யுஸ்வேந்திர சாஹல் தலா 2 விக்கெட்டுகளும், குல்தீப் யாதவ், ஹர்திக் பாண்ட்யா தலா ஒரு விக்கெட்டும் சாய்த்தனர்.

கோலி சதம்

அடுத்து 205 ரன்கள் இலக்கை நோக்கி இந்திய அணி ஆடியது. தொடக்க ஆட்டக்காரர்கள் ரோகித் சர்மா (15 ரன்), ஷிகர் தவான் (18 ரன்) இருவரும் நிகிடியின் ‘ஷாட்பிட்ச்’ பந்துக்கு இரையானார்கள்.

இதன் பின்னர் ஜோடி சேர்ந்த கேப்டன் விராட் கோலியும், ரஹானேவும் தென்ஆப்பிரிக்காவின் பந்து வீச்சை நேர்த்தியாக சமாளித்தனர். குறிப்பாக தூண் போல் நிலைகொண்டு தென்ஆப்பிரிக்க பவுலர்களுக்கு ‘தண்ணி’ காட்டிய கேப்டன் கோலி, மைதானத்தின் நாலாபுறமும் பந்துகளை சிதறடித்தார். அவரை கடைசி வரை தென்ஆப்பிரிக்க வீரர்களால் கட்டுப்படுத்த முடியவில்லை. அமர்க்களப்படுத்திய கோலி தனது 35-வது சதத்தை அடித்தார். நடப்பு தொடரில் 3-வது சதமாகும்.

இந்தியா வெற்றி

இந்திய அணி 32.1 ஓவர்களில் 2 விக்கெட்டுக்கு 206 ரன்கள் சேர்த்து 8 விக்கெட் வித்தியாசத்தில் மலைப்பான வெற்றியை ருசித்தது. கோலி 129 ரன்களுடனும் (96 பந்து, 19 பவுண்டரி, 2 சிக்சர்), ரஹானே 34 ரன்களுடனும் (50 பந்து, 3 பவுண்டரி) களத்தில் இருந்தனர். இந்த வெற்றியின் மூலம் இந்திய அணி 6 போட்டிகள் கொண்ட ஒரு நாள் தொடரை 5-1 என்ற கணக்கில் தனதாக்கி பிரமிப்பூட்டியது. மழையால் பாதிக்கப்பட்ட 4-வது ஒரு நாள் போட்டியில் மட்டும் தென்ஆப்பிரிக்கா வெற்றி கண்டிருந்தது. தென்ஆப்பிரிக்க மண்ணில் இந்திய அணி கைப்பற்றிய முதல் தொடர் இது என்பது குறிப்பிடத்தக்கது. ஆட்டநாயகன் மற்றும் தொடர்நாயகன் விருதை கோலி பெற்றார்.

அடுத்து இவ்விரு அணிகள் இடையே 3 போட்டிகள் கொண்ட 20 ஓவர் தொடர் நடத்தப்படுகிறது. முதலாவது 20 ஓவர் போட்டி ஜோகன்னஸ்பர்க்கில் நாளை (ஞாயிற்றுக்கிழமை) நடக்கிறது.