கிரிக்கெட்

‘வீரர்களின் கூட்டு முயற்சியால் வெற்றி பெற்றோம்’ விராட்கோலி கருத்து + "||" + The joint effort of the players We won viratkholi comment

‘வீரர்களின் கூட்டு முயற்சியால் வெற்றி பெற்றோம்’ விராட்கோலி கருத்து

‘வீரர்களின் கூட்டு முயற்சியால் வெற்றி பெற்றோம்’ விராட்கோலி கருத்து
‘தென்ஆப்பிரிக்காவுக்கு எதிரான முதலாவது 20 ஓவர் கிரிக்கெட் போட்டியில் வீரர்களின் கூட்டு முயற்சியால் வெற்றி பெற்றோம்’ என்று இந்திய அணியின் கேப்டன் விராட்கோலி தெரிவித்தார்.
ஜோகன்னஸ்பர்க்,

விராட்கோலி தலைமையிலான இந்திய கிரிக்கெட் அணி, தென்ஆப்பிரிக்காவில் சுற்றுப்பயணம் செய்து விளையாடி வருகிறது. டெஸ்ட் தொடரை 1-2 என்ற கணக்கில் இழந்த இந்திய அணி, ஒருநாள் போட்டி தொடரை 5-1 என்ற கணக்கில் கைப்பற்றி சரித்திரம் படைத்தது.


இந்த நிலையில் இந்தியா- தென்ஆப்பிரிக்கா அணிகள் இடையிலான 3 ஆட்டங்கள் கொண்ட 20 ஓவர் போட்டி தொடரில் ஜோகன்னஸ்பர்க்கில் உள்ள வான்டரர்ஸ் மைதானத்தில் நேற்று முன்தினம் நடந்த முதலாவது 20 ஓவர் கிரிக்கெட் போட்டியில் இந்திய அணி 28 ரன்கள் வித்தியாசத்தில் தென்ஆப்பிரிக்காவை வீழ்த்தியது.

முதலில் பேட்டிங் செய்த இந்திய அணி 20 ஓவர்களில் 5 விக்கெட் இழப்புக்கு 203 ரன்கள் குவித்தது. அதிகபட்சமாக தொடக்க ஆட்டக்காரர் ஷிகர் தவான் 72 ரன்கள் சேர்த்தார். பின்னர் ஆடிய தென்ஆப்பிரிக்க அணி 20 ஓவர்களில் 9 விக்கெட் இழப்புக்கு 175 ரன்கள் எடுத்து தோல்வியை தழுவியது. அதிகபட்சமாக தொடக்க ஆட்டக்காரர் ஹென்ரிக்ஸ் 70 ரன்கள் எடுத்தார். இந்திய அணி தரப்பில் வேகப்பந்து வீச்சாளர் புவனேஷ்வர்குமார் 24 ரன்கள் விட்டுக்கொடுத்து 5 விக்கெட்டுகள் வீழ்த்தி ஆட்டநாயகன் விருது பெற்றார். உனட்கட், ஹர்திக் பாண்ட்யா, யுஸ்வேந்திர சாஹல் தலா ஒரு விக்கெட் கைப்பற்றினார்கள்.

இந்த வெற்றியின் மூலம் இந்திய அணி தொடரில் 1-0 என்ற கணக்கில் முன்னிலை பெற்றுள்ளது. இரு அணிகள் இடையிலான 2-வது 20 ஓவர் கிரிக்கெட் போட்டி செஞ்சூரியனில் நாளை (புதன்கிழமை) நடக்கிறது.
வெற்றிக்கு பிறகு இந்திய அணி கேப்டன் விராட்கோலி அளித்த பேட்டியில் கூறியதாவது:-

ஆடுகளம் பேட்டிங்குக்கு நன்றாக ஒத்துழைத்தது. தொடக்க ஆட்டக்காரர்கள் ரோகித் சர்மா, ஷிகர் தவான் ஆகியோரின் ஆட்டம் அருமையாக இருந்தது. ஒட்டுமொத்த அணியின் பேட்டிங்கும் நன்றாக இருந்தது. பந்து வீச்சில் புவனேஷ்வர்குமார் சிறப்பாக செயல்பட்டார். அவரது அனுபவம் அணிக்கு உதவிகரமாக இருந்தது. அணியினரின் சிறப்பான கூட்டு முயற்சியால் வெற்றி பெற்றோம். 20 ஓவர் போட்டியில் இதுபோன்று செயல்பட வேண்டும் என்று நாங்கள் நீண்ட நாட்கள் எதிர்பார்த்தோம். பேட்ஸ்மேன்களும், பந்து வீச்சாளர்களும் ஒருங்கிணைந்த சமபலத்தை வெளிக்காட்டிய ஆட்டங்களில் இதுவும் ஒன்றாகும்.

தென்ஆப்பிரிக்க அணியின் கடைசி கட்ட பந்து வீச்சு பாராட்டுக்குரிய வகையில் இருந்தது. 16 ஓவரின் போது நாங்கள் 220 ரன்னை எடுக்க முடியும் என்று நினைத்தோம். ஆனால் டோனியின் விக்கெட்டை வீழ்த்தியதுடன், ரன் வேகத்தையும் கடைசி நேரத்தில் தென்ஆப்பிரிக்க அணியினர் கட்டுப்படுத்தினார்கள். நான் பேட்டிங்கின் போது ஒரு ரன் எடுக்க ஓடுகையில் காயம் ஏற்பட்டது. அதிர்ஷ்டவசமாக காயம் பெரிதாக இல்லை. காயத்தின் தன்மை அதிகரித்து விடக்கூடாது என்பதற்காகவே சிறிது நேரம் ஓய்வு எடுத்தேன். இவ்வாறு அவர் கூறினார்.

தோல்வி குறித்து தென்ஆப்பிரிக்க அணியின் கேப்டன் டுமினி கருத்து தெரிவிக்கையில், ‘இந்த தோல்வி ஏமாற்றம் அளிக்கிறது. உண்மையை சொல்லப்போனால் இந்திய அணி சிறப்பாக விளையாடியது என்று நான் நினைக்கவில்லை. எங்கள் திறமையை நாங்கள் சரியாக வெளிப்படுத்தாததே தோல்விக்கு காரணமாகும். எங்களது திட்டத்தை களத்தில் நன்றாக செயல்படுத்தி இருந்தால் முடிவு வேறுமாதிரி இருந்து இருக்கும். எதிர்பாராதவிதமாக நாங்கள் விரும்பியபடி திட்டத்தை செயல்படுத்த முடியவில்லை. எங்களது திட்டங்கள் சிறப்பானவை. குறுகிய வடிவிலான ஆட்டங்களில் வியூகத்தை சரியாக செயல்படுத்த வேண்டியது மிகவும் முக்கியமானதாகும். நாங்கள் கேட்ச் வாய்ப்புகளையும் நழுவ விட்டோம். நான் உள்பட அனுபவம் வாய்ந்த பேட்ஸ்மேன்கள் தங்கள் பொறுப்பை உணர்ந்து செயல்படவில்லை. நல்ல பார்ட்னர்ஷிப் ஆட்டமும் அமையவில்லை. பேட்ஸ்மேன்கள் தங்கள் ஆட்டத்தை ஆராய்ந்து மேம்படுத்தி கொள்ள வேண்டும். நிச்சயமாக நாங்கள் சரிவில் இருந்து மீண்டு வலுவாக வருவோம் என்பதை நான் உறுதியாக நம்புகிறேன்’ என்றார்.

ஆட்டநாயகன் விருது பெற்ற இந்திய வேகப்பந்து வீச்சாளர் புவனேஷ்வர்குமார் அளித்த பேட்டியில், ‘20 ஓவர் போட்டியில் 5 விக்கெட்டுகள் வீழ்த்தியது அற்புதமானது. சரியான பகுதியில் பந்து வீச வேண்டும் என்று நினைத்து செயல்பட்டேன். அதற்கு நல்ல பலன் கிடைத்தது. தென்ஆப்பிரிக்க வீரர்கள் எந்த மாதிரியாக பந்து வீசுகிறார்கள். ஆடுகளம் எப்படி செயல்படுகிறது என்பதை பார்த்து அதற்கு தகுந்தபடி திட்டமிட்டு பந்து வீசினோம். கடினமான சூழ்நிலையில் பந்து வீசுவதை அனுபவிக்கிறேன். தற்போது விக்கெட்டுகளை வீழ்த்த பந்து வீச்சு முறையில் புதிய வழிமுறைகளை கையாள வேண்டியது அவசியமானதாகும்’ என்று கூறினார்.