விஜய் ஹசாரே கோப்பை கிரிக்கெட்: அரைஇறுதியில் ஆந்திர அணி


விஜய் ஹசாரே கோப்பை கிரிக்கெட்: அரைஇறுதியில் ஆந்திர அணி
x
தினத்தந்தி 22 Feb 2018 10:30 PM GMT (Updated: 22 Feb 2018 7:21 PM GMT)

விஜய் ஹசாரே கோப்பை கிரிக்கெட் போட்டியின் கால்இறுதி ஆட்டத்தில் டெல்லியை வீழ்த்தி அரைஇறுதிக்கு முன்னேறியது.

புதுடெல்லி,

விஜய் ஹசாரே கோப்பை கிரிக்கெட் போட்டியின் கால்இறுதி ஆட்டத்தில் ஆந்திர அணி 6 விக்கெட் வித்தியாசத்தில் டெல்லியை வீழ்த்தி அரைஇறுதிக்கு முன்னேறியது.

விஜய் ஹசாரே கோப்பை கிரிக்கெட் போட்டியில் டெல்லி பாலம் ‘ஏ’ மைதானத்தில் நேற்று நடந்த கால்இறுதி ஆட்டம் ஒன்றில் டெல்லி -ஆந்திரா அணிகள் மோதின. இதில் முதலில் பேட் செய்த டெல்லி அணி, ஆந்திர வீரர்களின் அபார பந்து வீச்சை தாக்குப்பிடிக்க முடியாமல் 32.1 ஓவர்களில் 111 ரன்னில் சுருண்டது. அதிகபட்சமாக ரிஷாப் பான்ட் 38 ரன்னும், துருவ் ஷோரேய் 21 ரன்னும் எடுத்தனர். கம்பீர் (8 ரன்) உள்பட மற்ற வீரர்கள் சொற்ப ரன்களில் ஆட்டம் இழந்தனர். ஆந்திர அணி தரப்பில் சிவகுமார் 4 விக்கெட்டும், பார்கவ் பாத் 3 விக்கெட்டும், பான்டாரு அய்யப்பா 2 விக்கெட்டும் வீழ்த்தினார்கள்.

அடுத்து களம் இறங்கிய ஆந்திர அணி 28.4 ஓவர்களில் 4 விக்கெட் இழப்புக்கு 112 ரன்கள் எடுத்து 6 விக்கெட் வித்தியாசத்தில் எளிதில் வெற்றி கண்டு அரைஇறுதிக்கு முன்னேறியது. ஸ்ரீகர் பாரத் ரன் எதுவும் எடுக்காமலும், கேப்டன் ஹனுமா விஹாரி 6 ரன்னிலும், ரிக்கி புய் 36 ரன்னிலும், அஸ்வின் ஹெப்பர் 38 ரன்னிலும் அடுத்தடுத்து ஆட்டம் இழந்தனர். சுமந்த் 25 ரன்னுடனும், ரவிதேஜா 3 ரன்னுடனும் களத்தில் நின்றனர். டெல்லி அணி தரப்பில் இஷாந்த் ஷர்மா, நவ்தீப் சைனி, பவான் நெகி, நிதிஷ் ராணா தலா ஒரு விக்கெட் வீழ்த்தினார்கள்.

டெல்லி பெரோஸ்ஷா கோட்லா மைதானத்தில் நடந்த மற்றொரு கால்இறுதியில் பரோடா-சவுராஷ்டிரா அணிகள் சந்தித்தன. முதலில் பேட்டிங் செய்த பரோடா அணி நிர்ணயிக்கப்பட்ட 50 ஓவர்களில் 8 விக்கெட் இழப்புக்கு 247 ரன்கள் எடுத்தது. அதிகபட்சமாக சோயிப் தாய் ஆட்டம் இழக்காமல் 72 ரன்னும், குணால் பாண்ட்யா 61 ரன்னும் எடுத்தனர்.

பின்னர் ஆடிய சவுராஷ்டிரா அணி 48.4 ஓவர்களில் 7 விக்கெட் இழப்புக்கு 251 ரன்கள் சேர்த்து 3 விக்கெட் வித்தியாசத்தில் வெற்றி பெற்று அரைஇறுதிக்குள் நுழைந்தது. விக்கெட் கீப்பர் அவி பரோட் 82 ரன்னும், அர்பிட் வசவதா ஆட்டம் இழக்காமல் 45 ரன்னும், கேப்டன் புஜாரா 40 ரன்னும் எடுத்து வெற்றிக்கு வழிவகுத்தனர்.

டெல்லியில் நாளை நடைபெறும் முதலாவது அரைஇறுதியில் மராட்டியம்-கர்நாடகா அணிகள் மோதுகின்றன. நாளை மறுநாள் நடக்கும் 2-வது அரைஇறுதியில் ஆந்திரா-சவுராஷ்டிரா அணிகள் சந்திக்கின்றன.

Next Story