உலக கோப்பையை வென்ற இந்திய ஜூனியர் கிரிக்கெட் அணி நிர்வாகத்தினருக்கு சமமான பரிசுத் தொகை


உலக கோப்பையை வென்ற இந்திய ஜூனியர் கிரிக்கெட் அணி நிர்வாகத்தினருக்கு சமமான பரிசுத் தொகை
x
தினத்தந்தி 26 Feb 2018 11:30 PM GMT (Updated: 26 Feb 2018 10:38 PM GMT)

ஜூனியர் உலக கோப்பையை வென்ற இந்திய கிரிக்கெட் அணியின் நிர்வாகத்தினருக்கு சமமான அளவில் பரிசுத்தொகை வழங்க இந்திய கிரிக்கெட் வாரியம் ஒப்புக்கொண்டுள்ளது.

மும்பை,

நியூசிலாந்தில் கடந்த 3-ந் தேதி நடந்த 19 வயதுக்கு உட்பட்டவர்களுக்கான (ஜூனியர்) 12-வது உலக கோப்பை கிரிக்கெட் போட்டியின் இறுதி ஆட்டத்தில் இந்திய அணி 8 விக்கெட் வித்தியாசத்தில் முன்னாள் சாம்பியனான ஆஸ்திரேலியாவை வீழ்த்தி 4-வது முறையாக சாம்பியன் பட்டத்தை கைப்பற்றியது.

கோப்பையை வென்று அசத்திய பிரித்வி ஷா தலைமையிலான இந்திய கிரிக்கெட் அணியின் வீரர்கள் அனைவருக்கும் தலா ரூ.30 லட்சமும், இந்திய அணியின் தலைமை பயிற்சியாளரும், முன்னாள் கேப்டனுமான டிராவிட்டுக்கு ரூ.50 லட்சமும், உதவி பயிற்சியாளர்கள் உள்ளிட்ட அணியின் நிர்வாகத்தினருக்கு தலா ரூ.20 லட்சமும் பரிசுத் தொகையாக வழங்கப்படும் என்று இந்திய கிரிக்கெட் வாரிய நிர்வாக கமிட்டி அறிவித்து இருந்தது.

சமமான பரிசுத்தொகை வழங்க சம்மதம்

இந்திய கிரிக்கெட் வாரியம் தனக்கு மட்டும் அதிக பரிசுத்தொகை அறிவித்து விட்டு சக உதவி பயிற்சியாளர்களுக்கு பரிசுத் தொகை குறைவாக அறிவித்து இருப்பதற்கு டிராவிட் உடனடியாக அதிருப்தி தெரிவித்தார். அத்துடன் உலக கோப்பையை வென்ற இந்திய அணிக்கு எல்லா உறுப்பினர்களும் தங்களது சிறப்பான பங்களிப்பை சம அளவில் அளித்தனர். எனவே அணியின் அனைத்து நிர்வாகிகளுக்கு ஒரே மாதிரியான பரிசுத்தொகையை வழங்க வேண்டும் என்று இந்திய கிரிக்கெட் வாரியத்துக்கு டிராவிட் வேண்டுகோள் விடுத்தார்.

டிராவிட்டின் கோரிக்கையை இந்திய கிரிக்கெட் வாரியம் ஏற்றுக்கொண்டுள்ளது. இதன்படி தலைமை பயிற்சியாளர் டிராவிட் மற்றும் உதவி பயிற்சியாளர் உள்ளிட்ட அணி நிர்வாகத்தினர் அனைவருக்கும் ஒரே மாதிரியான பரிசுத் தொகை வழங்கப்படுகிறது. அதாவது அணியின் நிர்வாகத்தினர் அனைவருக்கும் தலா ரூ.25 லட்சம் பரிசுத் தொகையாக வழங்கப்பட இருக்கிறது. எல்லோருக்கும் ஒரே மாதிரியான பரிசுத் தொகை வழங்கப்பட வேண்டும் என்பதில் உறுதியாக இருந்த டிராவிட்டின் சுயநலமற்ற செயல்பாடு அவர் மீதான மரியாதையை மேலும் அதிகரித்துள்ளது. 

Next Story