கிரிக்கெட்

விஜய் ஹசாரே கோப்பை கிரிக்கெட்:சவுராஷ்டிராவை வீழ்த்தி கர்நாடக அணி ‘சாம்பியன்’ + "||" + Vijay Hazare Cup Cricket: Defeat the saurashtra Karnataka team 'champion'

விஜய் ஹசாரே கோப்பை கிரிக்கெட்:சவுராஷ்டிராவை வீழ்த்தி கர்நாடக அணி ‘சாம்பியன்’

விஜய் ஹசாரே கோப்பை கிரிக்கெட்:சவுராஷ்டிராவை வீழ்த்தி கர்நாடக அணி ‘சாம்பியன்’
விஜய் ஹசாரே கோப்பை கிரிக்கெட் இறுதி ஆட்டத்தில் கர்நாடக அணி சவுராஷ்டிராவை வீழ்த்தி சாம்பியன் மகுடம் சூடியது.
புதுடெல்லி,

விஜய் ஹசாரே கோப்பை கிரிக்கெட் இறுதி ஆட்டத்தில் கர்நாடக அணி சவுராஷ்டிராவை வீழ்த்தி சாம்பியன் மகுடம் சூடியது.

உள்ளூர் ஒரு நாள் கிரிக்கெட்

விஜய் ஹசாரே கோப்பைக்கான உள்ளூர் ஒரு நாள் கிரிக்கெட் தொடரின் இறுதி ஆட்டத்தில் கர்நாடகா-சவுராஷ்டிரா அணிகள் நேற்று மோதின. டெல்லி பெரோஸ்லா கோட்லா மைதானத்தில் நடந்த இந்த ஆட்டத்தில் முதலில் பேட் செய்த கர்நாடக அணியில் கேப்டன் கருண் நாயர் (0), லோகேஷ் ராகுல் (0) ஆகிய நட்சத்திர வீரர்கள் அடுத்தடுத்து வெளியேறினர். இந்த அதிர்ச்சியில் இருந்து அணியை காப்பாற்றிய மற்றொரு தொடக்க ஆட்டக்காரர் மயங்க் அகர்வால் 90 ரன்கள் (79 பந்து, 11 பவுண்டரி, 3 சிக்சர்) விளாசினார். ரவிகுமார் சமர்த் (48 ரன்), பவன் தேஷ்பாண்டே (49 ரன்), ஸ்ரேயாஸ் கோபால் (31 ரன்) ஆகியோரும் ஓரளவு பங்களிப்பை அளித்ததன் பலனாக கர்நாடக அணி சவாலான ஸ்கோரை அடைய முடிந்தது. 45.5 ஓவர்களில் கர்நாடக அணி 253 ரன்கள் சேர்த்து ஆல்-அவுட் ஆனது. சவுராஷ்டிரா தரப்பில் கம்லேஷ் மக்வனா 4 விக்கெட்டுகளை கைப்பற்றினார். ஐ.பி.எல். கிரிக்கெட்டில் ரூ.11½ கோடிக்கு ஏலம் போன ஜெய்தேவ் உனட்கட் 8 ஓவர்களில் 40 ரன்கள் விட்டுக்கொடுத்த போதிலும் ஒரு விக்கெட்டும் எடுக்கவில்லை.

புஜாரா போராட்டம் வீண்

அடுத்து களம் இறங்கிய சவுராஷ்ரா அணியில் கேப்டன் புஜாரா தவிர மற்றவர்கள் தாக்குப்பிடிக்க முடியாமல் விக்கெட்டுகளை வேகமாக பறிகொடுத்தனர். அணியை கரைசேர்க்க போராடிய புஜாரா (94 ரன், 127 பந்து, 10 பவுண்டரி, ஒரு சிக்சர்) 8-வது விக்கெட்டாக ரன்-அவுட் ஆனார். அத்துடன் அவர்களின் நம்பிக்கையும் சிதறி போனது. மற்றொரு முன்னணி வீரர் ரவீந்திர ஜடேஜா 15 ரன்னில் வீழ்ந்தார்.

முடிவில் சவுராஷ்டிரா அணி 46.3 ஓவர்களில் 212 ரன்களுக்கு அடங்கியது. இதன் மூலம் கர்நாடக அணி 41 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்று 3-வது முறையாக இந்த கோப்பையை வசப்படுத்தியது. பிரசித் கிருஷ்ணா, கிருஷ்ணப்பா கவுதம் தலா 3 விக்கெட்டுகளை சாய்த்தனர். மயங்க் அகர்வால் ஆட்டநாயகனாக தேர்வு செய்யப்பட்டார்.

கேப்டன்கள் கருத்து

வெற்றிக்கு பிறகு கர்நாடக கேப்டன் கருண் நாயர் கூறுகையில், ‘ எனது கேப்டன்ஷிப்பில் முதல் பட்டம் வென்றது திரிலிங்காக இருக்கிறது. ஒரு அணியாக போராடினோம், வெற்றி பெற்றிருக்கிறோம். இந்த சீசன் முழுவதும் உண்மையிலேயே அருமையாக விளையாடி உள்ளோம். இதற்காக அணி வீரர்கள் மற்றும் நிர்வாகத்திற்கு நன்றி தெரிவித்துக்கொள்கிறேன். மயங்க் அகர்வாலின் பேட்டிங், வியப்புக்குரிய வகையில் இருந்தது. அவர் ஒவ்வொரு முறை இறங்கும் போதும், அதிக ரன்களை குவிக்கப்போகிறார் என்பதை அறிவோம். அவருக்கு பாராட்டுகள்’ என்றார்.

சவுராஷ்டிரா கேப்டன் புஜாரா கூறுகையில், ‘இது எளிதில் விரட்டிப்பிடிக்கக்கூடிய இலக்கு தான். மிடில் வரிசையில் விக்கெட்டுகளை இழந்ததே தோல்விக்கு காரணம். ரவீந்திர ஜடேஜா, இந்த ஆடுகளத்தில் பந்து வீசியிருந்தால் உதவிகரமாக இருந்திருக்கும். ஆனால் விலாப்பகுதியில் ஏற்பட்ட காயத்தால் அவரால் பந்து வீச முடியவில்லை. இதுவும் எங்களுக்கு பின்னடைவாக அமைந்தது. அடுத்து யார்க்ஷைர் கவுண்டி அணிக்காக விளையாடுவதற்காக ஏப்ரல் முதல் வாரத்தில் இங்கிலாந்துக்கு புறப்பட இருக்கிறேன்’ என்றார்.