தென்ஆப்பிரிக்காவுக்கு எதிரான முதலாவது டெஸ்ட்: ஆஸ்திரேலிய அணி 402 ரன்கள் முன்னிலை


தென்ஆப்பிரிக்காவுக்கு எதிரான முதலாவது டெஸ்ட்: ஆஸ்திரேலிய அணி 402 ரன்கள் முன்னிலை
x
தினத்தந்தி 3 March 2018 9:45 PM GMT (Updated: 3 March 2018 8:46 PM GMT)

தென்ஆப்பிரிக்காவுக்கு எதிரான முதலாவது டெஸ்டில் ஆஸ்திரேலிய அணி 402 ரன்கள் முன்னிலை பெற்று வலுவான நிலையை எட்டியுள்ளது.

டர்பன்,

தென்ஆப்பிரிக்காவுக்கு எதிரான முதலாவது டெஸ்டில் ஆஸ்திரேலிய அணி 402 ரன்கள் முன்னிலை பெற்று வலுவான நிலையை எட்டியுள்ளது.

டெஸ்ட் கிரிக்கெட்


ஆஸ்திரேலியா - தென்ஆப்பிரிக்கா அணிகள் இடையிலான முதலாவது டெஸ்ட் கிரிக்கெட் போட்டி டர்பனில் நடந்து வருகிறது. இதில் முதலில் பேட் செய்த ஆஸ்திரேலியா 351 ரன்கள் குவித்தது. பின்னர் தனது முதல் இன்னிங்சை ஆடிய தென்ஆப்பிரிக்கா 162 ரன்களில் சுருண்டது. டிவில்லியர்ஸ் (71 ரன்) தவிர மற்ற வீரர்கள் சொதப்பினர்.

இந்த நிலையில் 189 ரன்கள் முன்னிலையுடன் ஆஸ்திரேலிய அணி 2-வது இன்னிங்சை 3-வது நாளான நேற்று ஆடியது. தொடக்க ஆட்டக்காரர்களாக களம் புகுந்த துணை கேப்டன் டேவிட் வார்னரும், கேமரூன் பான்கிராப்ட்டும் முதல் விக்கெட்டுக்கு 56 ரன்கள் (13.1 ஓவர்) சேர்த்து சிறப்பான தொடக்கம் தந்தனர். வார்னர் 28 ரன்களில், ரபடாவின் பந்து வீச்சில் ஆட்டம் இழந்தார்.

சுமித் 38 ரன்

இதன் பிறகு ஆஸ்திரேலியாவின் விக்கெட்டுகள் துரிதமாக சரிந்தன. பான்கிராப்ட் (53 ரன்), கேஷவ் மகராஜின் சுழற்பந்து வீச்சில் இறங்கி வந்து அடிக்க முயற்சித்த போது ஸ்டம்பிங் செய்யப்பட்டார். ‘ரன் குவிக்கும் எந்திரம்’ என்று வர்ணிக்கப்படும் கேப்டன் ஸ்டீவன் சுமித் (38 ரன், 81 பந்து, 3 பவுண்டரி) டீன் எல்கரின் பந்து வீச்சில் எல்.பி.டபிள்யூ. ஆனார். டி.ஆர்.எஸ். முறைப்படி அப்பீல் செய்தும் பலன் இல்லை.

மிடில் வரிசையில் ஷான் மார்சை (33 ரன், 99 பந்து, 5 பவுண்டரி) தவிர மற்றவர்கள் தாக்குப்பிடிக்கவில்லை. முதல் இன்னிங்சில் 96 ரன்கள் விளாசிய மிட்செல் மார்ஷ் இந்த முறை ஒற்றை இலக்கை (6 ரன்) தாண்டவில்லை.

402 ரன்கள் முன்னிலை


ஆஸ்திரேலிய அணி 71.4 ஓவர்களில் 9 விக்கெட் இழப்புக்கு 213 ரன்கள் எடுத்திருந்த போது போதிய வெளிச்சம் இன்மையால் ஆட்டம் நிறுத்தப் பட்டது. அத்துடன் 3-வது நாள் ஆட்டம் முடிவுக்கு வந்தது. கம்மின்ஸ் (17 ரன்), ஹேசில்வுட் (4 ரன்) களத்தில் உள்ளனர். தென்ஆப்பிரிக்க தரப்பில் கேஷவ் மகராஜ், மோர்னே மோர்கல் தலா 3 விக்கெட்டும், ரபடா 2 விக்கெட்டும் வீழ்த்தினர்.

ஆஸ்திரேலிய அணி இதுவரை 402 ரன்கள் முன்னிலையுடன் மிக வலுவான நிலையில் இருக்கிறது. இந்த மைதானத்தில் 2002-ம் ஆண்டு ஆஸ்திரேலியாவுக்கு எதிராக தென்ஆப்பிரிக்க அணி 335 ரன்கள் இலக்கை வெற்றிகரமாக துரத்திப்பிடித்ததே ஒரு அணியின் அதிகபட்ச சேசிங்காகும்.

இந்த டெஸ்டில் ஆஸ்திரேலிய அணிக்கே வெற்றி வாய்ப்பு பிரகாசமாக தெரிகிறது.

Next Story