கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணியின் கேப்டனாக தினேஷ் கார்த்திக் நியமனம்


கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணியின் கேப்டனாக தினேஷ் கார்த்திக் நியமனம்
x
தினத்தந்தி 4 March 2018 10:00 PM GMT (Updated: 4 March 2018 9:27 PM GMT)

கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணியின் கேப்டனாக தமிழ்நாட்டை சேர்ந்த தினேஷ் கார்த்திக் நியமிக்கப்பட்டு இருக்கிறார்.

கொல்கத்தா,

கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணியின் கேப்டனாக தமிழ்நாட்டை சேர்ந்த தினேஷ் கார்த்திக் நியமிக்கப்பட்டு இருக்கிறார்.

கொல்கத்தா அணியின் கேப்டன்

11-வது ஐ.பி.எல். 20 ஓவர் கிரிக்கெட் போட்டி ஏப்ரல் 7-ந்தேதி முதல் மே 27-ந்தேதி வரை இந்தியாவின் பல்வேறு நகரங்களில் நடக்கிறது.

இந்த போட்டியில் பங்கேற்கும் அணிகளில் ஒன்றான கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணியின் கேப்டனாக கவுதம் கம்பீர் கடந்த 7 ஆண்டுகளாக இருந்தார். அவரது தலைமையில் அந்த அணி 2012 மற்றும் 2014-ம் ஆண்டுகளில் மகுடம் சூடியது. இந்த முறை அவரை கொல்கத்தா அணி நிர்வாகம் கழற்றிவிட்டது. அவரை டெல்லி அணி ஏலத்தில் எடுத்தது.

இந்த நிலையில் இந்த சீசனுக்கான கொல்கத்தா அணியின் புதிய கேப்டன் யார்? என்ற கேள்விக்கு நேற்று விடை கிடைத்தது. கொல்கத்தா அணியின் கேப்டனாக விக்கெட் கீப்பர் தினேஷ் கார்த்திக்கை நியமித்து அந்த அணி நிர்வாகம் அறிவிப்பு வெளியிட்டுள்ளது. துணை கேப்டனாக ராபின் உத்தப்பா நியமிக்கப்பட்டார்.

கேடிச் கருத்து

தமிழகத்தை சேர்ந்த 32 வயதான தினேஷ் கார்த்திக் ரூ.7.4 கோடிக்கு கொல்கத்தா அணியால் வாங்கப்பட்டார். இதற்கு முன்பு டெல்லி, பஞ்சாப், மும்பை, பெங்களூரு, குஜராத் லயன்ஸ் ஆகிய அணிகளுக்காக அவர் விளையாடி இருக்கிறார். ஒரு சில ஆட்டங்களில் பொறுப்பு கேப்டனாக செயல்பட்டுள்ளார். ஆனால் ஒரு ஐ.பி.எல். அணிக்கு அவர் முழு நேர கேப்டனாக நியமிக்கப்பட்டது இதுவே முதல் முறையாகும். ஐ.பி.எல். கிரிக்கெட்டில் இதுவரை 152 ஆட்டங்களில் ஆடி 2,903 ரன்கள் குவித்துள்ளார்.

கொல்கத்தா அணியின் உதவி பயிற்சியாளர் சைமன் கேடிச் கூறுகையில், ‘தினேஷ் கார்த்திக் தனது கிரிக்கெட் வாழ்க்கையில் பெற்றுள்ள சிறந்த காலக்கட்டம் இதுதான். ஐ.பி.எல். கிரிக்கெட்டில் 10 ஆண்டுகள் விளையாடிய அனுபவம் வாய்ந்தவர். உள்ளூர் போட்டியில் அவரது கேப்டன்ஷிப்பின் செயல்பாடு சிறப்பாக இருக்கிறது. 20 ஓவர் கிரிக்கெட்டில் தமிழக அணியின் கேப்டனாக 72 சதவீதம் வெற்றியை தேடித்தந்திருப்பதே அதற்கு சான்று’ என்றார்.

தினேஷ் கார்த்திக் பேட்டி

தினேஷ் கார்த்திக் கூறுகையில், ‘ஐ.பி.எல். கிரிக்கெட்டின் வெற்றிகரமான அணிகளில் ஒன்றான கொல்கத்தா அணிக்கு கேப்டனாக நியமிக்கப்பட்டிருப்பது மிகவும் மகிழ்ச்சி அளிக்கிறது. இது எனக்கு கிடைத்த மிகப்பெரிய கவுரவமாகும். அணியில் இளம் வீரர்களும், அனுபவ வீரர்களும் சரியான அளவில் இடம் பெற்றிருப்பதை நினைத்து பரவசமடைகிறேன். பயிற்சியாளர் காலிசின் கீழ் பணியாற்ற ஆவலாக இருக்கிறேன். அணியில் இடம்பிடித்துள்ள அனைத்து வெளிநாட்டு வீரர்களும் திறமை மிக்கவர்களே. கவுதம் கம்பீர் விட்டுச்சென்ற இடத்தில் இருந்து அணியை முன்னெடுத்து செல்ல முயற்சிப்பேன். புதிய சவாலை எதிர்கொள்ள தயாராக இருக்கிறேன்’ என்றார்.

மேலும் அவர் கூறுகையில், ‘வாய்ஜாலத்தை காட்டிலும் செயல்பாட்டில் மற்றவர்களுக்கு முன்உதாரணமாக இருக்க வேண்டும். அந்த வகையில் விராட் கோலியின் பாணியை பின்பற்ற விரும்புகிறேன். ஆக்ரோஷமான கேப்டனாக செயல்படுவதை பொறுத்தவரை, இயற்கையிலேயே அந்த சுபாவம் என்னிடம் கிடையாது. அதற்காக எனக்குள் ஆக்ரோஷ குணம் இல்லை என்று நினைத்துவிட வேண்டாம்’ என்றார்.

2-வது தமிழர்

இந்த சீசனில் ஐ.பி.எல். அணியை வழிநடத்தும் 2-வது தமிழர் தினேஷ் கார்த்திக் ஆவார். ஏற்கனவே கிங்ஸ் லெவன் பஞ்சாப் அணியின் கேப்டனாக தமிழகத்தை சேர்ந்த ஆர்.அஸ்வின் நியமிக்கப்பட்டு இருக்கிறார். 8 அணிகளில் இன்னும் டெல்லி டேர்டெவில்ஸ் அணியின் கேப்டன் மட்டும் முடிவு செய்யப்படவில்லை.

Next Story