டேவிட் வார்னர்-குயின்டான் டி காக் இடையே காரசார மோதல்


டேவிட் வார்னர்-குயின்டான் டி காக் இடையே காரசார மோதல்
x
தினத்தந்தி 5 March 2018 10:30 PM GMT (Updated: 5 March 2018 8:43 PM GMT)

முதலாவது டெஸ்ட் போட்டியின் போது டேவிட் வார்னர்-குயின்டான் டி காக் இடையே காரசார மோதல் ஏற்பட்டது.

டர்பன்,

ஆஸ்திரேலியா-தென்ஆப்பிரிக்கா அணிகள் இடையிலான முதலாவது டெஸ்ட் கிரிக்கெட் போட்டியில் 4-வது நாள் தேனீர் இடைவேளையின் போது ஆஸ்திரேலிய அணியின் துணை கேப்டன் டேவிட் வார்னர், தென்ஆப்பிரிக்க அணியின் விக்கெட் கீப்பர் குயின்டான் டி காக் இடையே கடுமையான மோதல் ஏற்பட்டது சி.சி.டி.வி. கேமரா பதிவின் மூலம் வெளிச்சத்துக்கு வந்து இருக்கிறது. வீரர்களின் ஓய்வு அறைக்கான படிக்கட்டில் ஏறி செல்கையில் டேவிட் வார்னர், குயின்டான் டி காக்கை அடிக்க பாய்ந்துள்ளார். இரு அணி வீரர்களும் தலையிட்டு இருவரையும் விலக்கி விட்டனர். இருவரும் ஒருவருக்கொருவர் வார்த்தைகளால் வசைபாடினார்கள். டிவில்லியர்ஸ் ‘ரன்-அவுட்’ ஆனதை தொடர்ந்து ஆஸ்திரேலிய வீரர் நாதன் லயன் உள்ளிட்ட வீரர்கள் பந்தை தரையில் எறிந்து கிண்டல் செய்ததன் தொடர்ச்சியாகவே இந்த சம்பவம் அரங்கேறியதாக கூறப்படுகிறது. ஆஸ்திரேலிய அணி தரப்பில் கருத்து தெரிவிக்கையில், ‘டேவிட் வார்னரின் மனைவி குறித்து தனிப்பட்ட முறையில் குயின்டான் டி காக் திட்டியதால் தான் இந்த பிரச்சினை உருவானது’ என்று புகார் தெரிவிக்கப்பட்டது. இதேபோல் தென்ஆப்பிரிக்க அணி மானேஜர் கூறுகையில் குயின்டான் டி காக்கின் குடும்பத்தை பற்றி டேவிட் வார்னர் திட்டியதால் தான் பிரச்சினை எழுந்தது என்று குறிப்பிட்டுள்ளார். இந்த விவகாரம் குறித்து சர்வதேச கிரிக்கெட் கவுன்சிலும், போட்டி நடுவர்களும் விசாரணை நடத்தி வருகிறார்கள். இதன் முடிவில் இருவர் மீதும் நடவடிக்கை எடுக்கப்படலாம் என்று தெரிகிறது.

இதற்கிடையில் டிவில்லியர்ஸ் ஆட்டம் இழந்ததும், ஆஸ்திரேலிய வீரர் நாதன் லயன் அவரை நோக்கி பந்தை வீசிய விவகாரத்தில் நாதன் லயன் விதிமுறைக்கு மீறாக செயல்பட்டது தெரிய வந்ததால் அவருக்கு போட்டி கட்டணத்தில் 15 சதவீதம் அபராதமாக விதிக்கப்பட்டுள்ளது.

Next Story