இரானி கோப்பை கிரிக்கெட் விதர்பா அணி 702 ரன்கள் குவிப்பு


இரானி கோப்பை கிரிக்கெட் விதர்பா அணி 702 ரன்கள் குவிப்பு
x
தினத்தந்தி 16 March 2018 8:45 PM GMT (Updated: 16 March 2018 8:43 PM GMT)

ரஞ்சி கோப்பை கிரிக்கெட் சாம்பியன் விதர்பா–ரெஸ்ட் ஆப் இந்தியா அணிகள் இடையிலான இரானி கோப்பை கிரிக்கெட் போட்டி நாக்பூரில் நடந்து வருகிறது.

நாக்பூர்,

ரஞ்சி கோப்பை கிரிக்கெட் சாம்பியன் விதர்பா–ரெஸ்ட் ஆப் இந்தியா அணிகள் இடையிலான இரானி கோப்பை கிரிக்கெட் போட்டி நாக்பூரில் நடந்து வருகிறது. இதில் முதலில் பேட்டிங் செய்த விதர்பா அணி 2–வது நாள் ஆட்ட நேரம் முடிவில் முதல் இன்னிங்சில் 180 ஓவர்களில் 3 விக்கெட் இழப்புக்கு 598 ரன்கள் குவித்து வலுவான நிலையை எட்டியது. சஞ்சய் ராமசாமி 53 ரன்னிலும், கேப்டன் பைஸ் பசால் 89 ரன்னிலும், கணேஷ் சதீஷ் 120 ரன்னிலும் அடுத்தடுத்து ஆட்டம் இழந்தனர். வாசிம் ஜாபர் 285 ரன்னுடனும், அபூர்வ் வான்கடே 44 ரன்னுடனும் களத்தில் இருந்தனர். நேற்று 3–வது நாள் ஆட்டம் நடந்தது. மழை காரணமாக நேற்றைய ஆட்டம் பிற்பகலில் தான் ஆரம்பமானது. தொடர்ந்து ஆடிய வாசிம் ஜாபர் (286 ரன்கள்) மேலும் ஒரு ரன் சேர்த்த நிலையில் சித்தார்த் கவுல் பந்து வீச்சில் போல்டு ஆனார். அடுத்து களம் கண்ட அக்‌ஷய் வாட்கர் 37 ரன்னில் ஆட்டம் இழந்தார்.

விதர்பா அணி முதல் இன்னிங்சில் 208 ஓவர்களில் 5 விக்கெட் இழப்புக்கு 702 ரன்கள் எடுத்து இருந்த போது போதிய வெளிச்சம் இல்லாததால் நேற்றைய ஆட்டம் அத்துடன் கைவிடப்பட்டது. நேற்று 28 ஓவர்கள் மட்டுமே நடந்தது. அபூர்வ் வான்கடே 99 ரன்னுடனும் (173 பந்துகளில் 12 பவுண்டரி, 2 சிக்சருடன்), ஆதித்யா சர்வாத் 4 ரன்னுடனும் களத்தில் நின்றனர். இன்று 4–வது நாள் ஆட்டம் நடக்கிறது.


Next Story