இந்தியாவுக்கு எதிரான கடைசி ஒரு நாள் போட்டியிலும் ஆஸ்திரேலியா வெற்றி மிட்செல் ஸ்டார்க்கின் மனைவி சதம் அடித்து அசத்தல்


இந்தியாவுக்கு எதிரான கடைசி ஒரு நாள் போட்டியிலும் ஆஸ்திரேலியா வெற்றி மிட்செல் ஸ்டார்க்கின் மனைவி சதம் அடித்து அசத்தல்
x
தினத்தந்தி 18 March 2018 8:45 PM GMT (Updated: 18 March 2018 8:45 PM GMT)

இந்தியா – ஆஸ்திரேலியா பெண்கள் கிரிக்கெட் அணிகள் இடையிலான 3–வது மற்றும் கடைசி ஒரு நாள் போட்டி வதோதராவில் நேற்று நடந்தது.

வதோதரா,

இந்தியா – ஆஸ்திரேலியா பெண்கள் கிரிக்கெட் அணிகள் இடையிலான 3–வது மற்றும் கடைசி ஒரு நாள் போட்டி வதோதராவில் நேற்று நடந்தது. இதில் முதலில் பேட் செய்த ஆஸ்திரேலியா 7 விக்கெட் இழப்புக்கு 332 ரன்கள் குவித்தது. விக்கெட் கீப்பர் அலிசா ஹீலே 133 ரன்கள் (115 பந்து, 17 பவுண்டரி, 2 சிக்சர்) விளாசினார். அலிசா ஹீலேவுக்கு இது தான் முதல் சர்வதேச சதமாகும். அது மட்டுமின்றி ஒரு நாள் கிரிக்கெட்டில் ஆஸ்திரேலிய பெண்கள் அணிக்காக சதம் அடித்த முதல் விக்கெட் கீப்பர் என்ற சிறப்பையும் பெற்றார். 27 வயதான அலிசா ஹீலே, ஆஸ்திரேலிய முன்னணி வேகப்பந்து வீச்சாளர் மிட்செல் ஸ்டார்க்கின் மனைவி என்பது குறிப்பிடத்தக்கது.

அடுத்து களம் இறங்கிய இந்திய அணியில் தொடக்க வீராங்கனைகள் ஜெமிமா ரோட்ரிக்ஸ் (42 ரன்), மந்தனா (51 ரன்) நல்ல தொடக்கம் தந்த போதிலும் பின்வரிசை வீராங்கனைகளில் யாரும் பெரிய அளவில் ஜொலிக்கவில்லை. கேப்டன் மிதாலிராஜ் 21 ரன்னிலும், ஹர்மன்பிரீத் கவுர் 25 ரன்னிலும் கேட்ச் ஆனார்கள். 44.4 ஓவர்கள் தாக்குப்பிடித்த இந்திய அணி 235 ரன்களுக்கு ஆல்–அவுட் ஆனது. இதன் மூலம் ஆஸ்திரேலியா 97 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றதுடன் தொடரையும் 3–0 என்ற கணக்கில் முழுமையாக கைப்பற்றியது.


Next Story