சூதாட்ட புகார் ஷமி 2 நாள் துபாய் ஓட்டலில் தங்கி இருந்ததை பிசிசிஐ உறுதிபடுத்தியது


சூதாட்ட புகார் ஷமி 2 நாள் துபாய் ஓட்டலில் தங்கி இருந்ததை பிசிசிஐ உறுதிபடுத்தியது
x
தினத்தந்தி 20 March 2018 7:26 AM GMT (Updated: 20 March 2018 7:26 AM GMT)

சூதாட்ட புகார் குறித்து முகமது ஷமியின் மனைவி கொடுத்த புகாரின் பேரில் கொல்கத்தா போலீசிடம் ஷமி 2 நாள் துபாய் ஓட்டலில் தங்கி இருந்ததை பிசிசிஐ உறுதிபடுத்தி உள்ளது. #BCCI #MohammedShami

கொல்கத்தா, 

இந்திய கிரிக்கெட் அணியின் முன்னணி வேகப்பந்து வீச்சாளர்களில் ஒருவரான முகமது ஷமி மீது அவரது மனைவி ஹசின் ஜஹன் கடந்த வாரம் பரபரப்பு புகார் தெரிவித்தார். அதில், ‘முகமது ஷமிக்கு பல பெண்களுடன் தகாத தொடர்பு உள்ளது. அவரும், அவருடைய குடும்பத்தினரும் என்னை கடந்த 2 ஆண்டுகளாக கொடுமைப்படுத்தி வருகிறார்கள். என்னை கொலை செய்யக்கூட முயற்சி செய்தார்கள்’ என்பது உள்பட பல்வேறு குற்றச்சாட்டுகளை சுமத்தி கொல்கத்தா போலீசில் புகார் செய்தார். இது குறித்து ஜாதவ்பூர் போலீசார் முகமது ஷமி மற்றும் அவரது குடும்பத்தினர் 4 பேர் மீது கொலைமுயற்சி உள்பட பல்வேறு பிரிவுகளில் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள்.

அத்துடன் முகமது ஷமி மீது திடுக்கிடும் சூதாட்ட புகாரையும் அவரது மனைவி தெரிவித்து இருந்தார். ‘தென்ஆப்பிரிக்க சுற்றுப்பயணம் முடிந்து நாடு திரும்பும் முன்பு முகமது ஷமி துபாய் சென்று பாகிஸ்தான் பெண்ணான அலிஸ்பா என்பவரை சந்தித்ததாகவும், இங்கிலாந்து தொழில் அதிபர் முகமது பாய் கொடுத்து அனுப்பிய பணத்தை அலிஸ்பாவிடம் இருந்து முகமது ஷமி பெற்றார் என்றும் அவர் தெரிவித்து இருந்தார். அத்துடன் அந்த குற்றச்சாட்டுக்கு ஆதரவாக ஆடியோ பதிவையும் அவர் வெளியிட்டு இருந்தார்.

ஆனால் தன் மீதான குற்றச்சாட்டுகளை மறுத்த முகமது ஷமி தனது மனைவியுடன் சமரச பேச்சுவார்த்தை நடத்த தயாராக இருப்பதாக தெரிவித்து இருந்தார். முகமது ஷமியின் சமரச முயற்சிக்கு செவி சாய்க்காத ஹசின் ஜஹன், முகமது ஷமிக்கு எதிரான வழக்கை வாபஸ் பெறமாட்டேன். இறுதி முடிவு கிடைக்கும் வரை போராடுவேன் என்று உறுதிபட கூறிவிட்டார். மனைவியின் புகார் எதிரொலியாக முகமது ஷமியின் ஊதிய ஒப்பந்தத்தை இந்திய கிரிக்கெட் வாரியம் நிறுத்தி வைத்தது.

இந்த நிலையில் முகமது ஷமி மீது அவரது மனைவி தெரிவித்த சூதாட்ட புகாரை இந்திய கிரிக்கெட் வாரியம் கவனத்தில் எடுத்து கொண்டுள்ளது. இது குறித்து விசாரிக்கும் படி இந்திய கிரிக்கெட் வாரியத்தின் ஊழல் தடுப்பு பிரிவு தலைவர் நீரஜ்குமாருக்கு, இந்திய கிரிக்கெட் வாரியத்தின் நிர்வாக கமிட்டி சேர்மன் வினோத்ராய் உத்தரவிட்டுள்ளார்.

முகமது ஷமியின் மனைவி குறிப்பிட்ட அந்த 2 நபர்கள் யார்? அவர்களின் பின்னணி என்ன? அவர்களிடம் இருந்து முகமது ஷமிக்கு பணம் வந்ததா?. முகமது ஷமி பணம் பெற்றது உண்மை என்றால்? என்ன காரணத்துக்காக பணத்தை வாங்கினார் என்பது குறித்து முழுமையாக விசாரித்து ஒரு வாரத்துக்குள் அறிக்கை தாக்கல் செய்யும் படி நீரஜ்குமாருக்கு, வினோத்ராய் அறிவுறுத்தி இருந்தார்.

இந்திய கிரிக்கெட் கட்டுப்பாட்டு வாரியம் (பிசிசிஐ)  பிப்ரவரி 17, 18 தேதிகளில் துபாயில் ஒரு ஓ ட்டலில் தங்கியிருந்ததாக கொல்கத்தா போலீசிற்கு  உறுதி அளித்துள்ளது.

அவரது மனைவி ஹசின் ஜஹான் கூறியது போல் ஷமி துபாய்க்கு சென்றிருந்தாரா என்பதை சரிபார்க்க போலீஸ் பிசிசிஐக்கு கடிதம் ஒன்று அனுப்பி இருந்தது.

கடந்த வாரம் வாரத்தில், உத்திரப்பிரதேச மாநிலத்தின் அமரோ நகரில் தனது இல்லத்தில் கொல்கத்தா போலீஸ் குழு வந்தபோது ஷமி தனது பக்கத்திலிருந்தும் அவரது குடும்பத்தினரிடமிருந்தும் முழு ஒத்துழைப்பு அளித்தார்.

Next Story