பந்தை சேதப்படுத்திய விவகாரம்: ஸ்டீவன் சுமித், வார்னருக்கு ஓராண்டு தடை பான்கிராப்ட் 9 மாதங்கள் விளையாட முடியாது


பந்தை சேதப்படுத்திய விவகாரம்: ஸ்டீவன் சுமித், வார்னருக்கு ஓராண்டு தடை பான்கிராப்ட் 9 மாதங்கள் விளையாட முடியாது
x
தினத்தந்தி 28 March 2018 9:30 PM GMT (Updated: 28 March 2018 8:43 PM GMT)

பந்தை சேதப்படுத்திய விவகாரத்தில் ஆஸ்திரேலிய முன்னாள் கேப்டன் ஸ்டீவன் சுமித், டேவிட் வார்னர் ஆகியோருக்கு ஆஸ்திரேலிய கிரிக்கெட் வாரியம் ஓராண்டு தடை விதித்துள்ளது.

சிட்னி,

பந்தை சேதப்படுத்திய விவகாரத்தில் ஆஸ்திரேலிய முன்னாள் கேப்டன் ஸ்டீவன் சுமித், டேவிட் வார்னர் ஆகியோருக்கு ஆஸ்திரேலிய கிரிக்கெட் வாரியம் ஓராண்டு தடை விதித்துள்ளது.

பந்தை சேதப்படுத்திய சர்ச்சை

கேப்டவுனில் சமீபத்தில் நடந்த தென்ஆப்பிரிக்காவுக்கு எதிரான 3-வது டெஸ்டில் ஆஸ்திரேலிய அணி 322 ரன்கள் வித்தியாசத்தில் தோல்வியை தழுவியது. இந்த போட்டியின் 3-வது நாளில் ஆஸ்திரேலிய இளம் வீரர் கேமரூன் பான்கிராப்ட், சொரசொரப்பான மஞ்சள் நிற காகிதத்தை வைத்து பந்தை சேதப்படுத்தியது கண்டுபிடிக்கப்பட்டது. இதன் பின்னணியில் ஆஸ்திரேலிய கேப்டன் ஸ்டீவன் சுமித், துணை கேப்டன் டேவிட் வார்னர் ஆகியோர் இருப்பது தெரியவந்தது. ரிவர்ஸ் ஸ்விங் ஆவதற்காக சொரசொரப்பு காகிதத்தை கொண்டு பந்தை தேய்த்ததையும், இதற்கு ஜூனியர் வீரர் பான்கிராப்ட்டை பயன்படுத்தியதையும் ஸ்டீவன் சுமித் வெளிப்படையாக ஒப்புக்கொண்டார்.

இதனால் ஆஸ்திரேலிய மக்கள் மட்டுமின்றி அந்த நாட்டு அரசாங்கமே பேரதிர்ச்சிக்குள்ளானது. தலைக்குனிவை ஏற்படுத்திய கிரிக்கெட் வீரர்கள் மீது தகுந்த நடவடிக்கை எடுக்கும்படி ஆஸ்திரேலிய பிரதமர் மால்கம் டர்ன்புல் உத்தரவிட்டார். இதைத் தொடர்ந்து ஆஸ்திரேலிய அணியின் கேப்டன் பொறுப்பில் இருந்து ஸ்டீவன் சுமித்தும், துணை கேப்டன் பதவியில் இருந்து டேவிட் வார்னரும் விலகினர். சர்ச்சையில் சிக்கிய சுமித், வார்னர், பான்கிராப்ட் ஆகியோரை தென்ஆப்பிரிக்காவில் இருந்து உடனடியாக ஆஸ்திரேலியாவுக்கு திரும்பும்படியும் கட்டளையிடப்பட்டது. அவர்களுக்கு பதிலாக தென்ஆப்பிரிக்காவுக்கு எதிராக ஜோகன்னஸ்பர்க்கில் நாளை தொடங்கும் கடைசி டெஸ்டுக்கான ஆஸ்திரேலிய அணியில் மேத்யூ ரென்ஷா, மேக்ஸ்வெல், ஜோ பர்ன்ஸ் ஆகியோர் சேர்க்கப்பட்டு இருக்கிறார்கள்.

பந்தை சேதப்படுத்திய விவகாரம் தொடர்பாக ஆஸ்திரேலிய கிரிக்கெட் வாரியத்தின் சிறப்பு குழுவினர் தென்ஆப்பிரிக்காவுக்கு சென்று தனியாக விசாரணை நடத்தினர்.

விசாரணை அறிக்கையை அவர்கள் கிரிக்கெட் வாரியத்திடம் சமர்ப்பித்தனர்.

ஓராண்டு தடை

இதில், மூன்று பேரும் ஆஸ்திரேலிய கிரிக்கெட் வாரியத்தின் வீரர்களுக்கான நடத்தை விதி பிரிவு 2.3.5-ஐ மீறி இருப்பது உறுதியாகி இருக்கிறது. இதையடுத்து ஸ்டீவன் சுமித், டேவிட் வார்னருக்கு சர்வதேச மற்றும் உள்ளூர் முதல்தர கிரிக்கெட் போட்டிகளில் விளையாட ஓராண்டு தடையும், பான்கிராப்டுக்கு 9 மாதங்கள் ஆட தடையும் விதிக்கப்பட்டது. 5 நாட்களுக்குள் விசாரித்து தண்டனை விவரத்தை அறிவித்த ஆஸ்திரேலிய கிரிக்கெட் வாரியம் வெளியிட்ட அறிக்கையில் கூறப்பட்டு இருப்பதாவது:-

விளையாட்டின் உத்வேகத்தை சீர்குலைப்பது, தங்களுக்குள்ளாகவே ஒரு அதிகாரபூர்வமான பிரதிநிதி போல் செயல்படுவது, கிரிக்கெட்டின் நலனுக்கு எதிராகவும், அதன் புகழை கெடுக்கும் வகையிலும் நடந்து கொள்வது ஆகிய நடத்தை விதிகளை மூன்று பேரும் மீறியுள்ளனர்.

ஸ்டீன் சுமித்தை எடுத்துக் கொண்டால், பந்தின் தன்மையை திட்டமிட்டு மாற்ற முயற்சித்தது, தவறு நடக்காமல் தடுக்க தவறியது, பான்கிராப்ட் பந்தை தேசப்படுத்திய விஷயத்தில் நடுவர்களுக்கு பொய்யான தகவல்களை அளித்தது உள்ளிட்ட பிரிவுகளில் குற்றச்சாட்டுக்கு உள்ளாகி இருக்கிறார். டேவிட் வார்னரை எடுத்துக் கொண்டால், பந்தின் தன்மையை மாற்றுவதற்கு திட்டத்தை உருவாக்கி அதை செயல்படுத்த முயற்சித்தது, இந்த திட்டத்திற்கு ஜூனியர் வீரரை பயன்படுத்தியதோடு, பந்தை எப்படி சேதப்படுத்துவது என்ற ஆலோசனைகளை வழங்கியது, தனக்கு தெரிந்து நடந்த தவறான விஷயங்களை தானாக முன்வந்து சொல்லாதது உள்ளிட்ட பிரிவுகளில் குற்றவாளி ஆகிறார். பான்கிராப்ட்டை பொறுத்தவரை வேண்டுமென்றே பந்தை சேதப்படுத்த முயற்சித்தது, ஆதாரத்தை மறைக்க முயன்றது உள்ளிட்ட 5 பிரிவுகளில் குற்றம் இழைத்துள்ளார்.

கேப்டன் பதவி

ஸ்டீவன் சுமித், வார்னர் ஆகியோருக்கு ஓராண்டு தடையும், பான்கிராப்ட்டுக்கு 9 மாதங்கள் தடையும் விதிக்கப்பட்டாலும், கிரிக்கெட்டில் தொடர்ந்து தொடர்பு வைத்துக் கொண்டு பார்மில் இருக்க வேண்டும் என்பதற்காக அவர்களுக்கு கிளப் கிரிக்கெட்டில் விளையாட அனுமதி அளிக்கப்படுகிறது. இது தவிர கிரிக்கெட் சமுதாயத்துக்கு தாமாக முன்வந்து 100 மணி நேரம் ஏதாவது வகையில் சேவை செய்ய வேண்டும்.

எதிர்காலத்தில் டேவிட் வார்னரை எந்த வித கேப்டன்ஷிப் பணிக்கும் கருத்தில் கொள்ள மாட்டோம். அதே சமயம் ஸ்டீவன் சுமித், பான்கிராப்ட் ஆகியோருக்கு அவர்களது தடை காலம் முடிந்து குறைந்தது 12 மாதங்கள் அணிக்கான கேப்டன்ஷிப் பொறுப்புக்கு அவர்களின் பெயரை பரிசீலிக்கமாட்டோம். அதன் பிறகு வருங்காலத்தில் அவர்களை அணியின் கேப்டன் பதவிக்கு பரிசீலிப்பது என்பது ரசிகர்களின் விருப்பம், அவர்களின் ஆட்டத்திறன், அணி நிர்வாகத்தின் முடிவு ஆகியவற்றை பொறுத்து தீர்மானிக்கப்படும்.

இவ்வாறு அறிக்கையில் கூறப்பட்டுள்ளது.

31 வயதான வார்னர் இதுவரை 74 டெஸ்டுகளில் பங்கேற்று 21 சதங்கள் உள்பட 6,363 ரன்களும், 106 ஒரு நாள் போட்டிகளில் 14 சதங்கள் உள்பட 4,343 ரன்களும், 70 இருபது ஓவர் ஆட்டங்களில் 1,792 ரன்களும் எடுத்துள்ளனர். 25 வயதான பான்கிராப்ட் 8 டெஸ்டுகளில் விளையாடி 402 ரன்கள் எடுத்திருக்கிறார்.

Next Story