பெண்கள் முத்தரப்பு 20 ஓவர் கிரிக்கெட்: இங்கிலாந்தை வீழ்த்தி ஆஸ்திரேலிய அணி ‘சாம்பியன்’


பெண்கள் முத்தரப்பு 20 ஓவர் கிரிக்கெட்: இங்கிலாந்தை வீழ்த்தி ஆஸ்திரேலிய அணி ‘சாம்பியன்’
x
தினத்தந்தி 31 March 2018 9:45 PM GMT (Updated: 31 March 2018 9:11 PM GMT)

பெண்கள் முத்தரப்பு 20 ஓவர் கிரிக்கெட் தொடரில் இங்கிலாந்தை வீழ்த்தி ஆஸ்திரேலிய அணி சாம்பியன் கோப்பையை கைப்பற்றியது.

மும்பை,

பெண்கள் முத்தரப்பு 20 ஓவர் கிரிக்கெட் தொடரில் இங்கிலாந்தை வீழ்த்தி ஆஸ்திரேலிய அணி சாம்பியன் கோப்பையை கைப்பற்றியது.

பெண்கள் கிரிக்கெட்

இந்தியா, இங்கிலாந்து, ஆஸ்திரேலியா ஆகிய 3 நாடுகள் இடையிலான முத்தரப்பு பெண்கள் 20 ஓவர் கிரிக்கெட் போட்டி மும்பையில் நடந்தது. இதில் நேற்று நடந்த இறுதி ஆட்டத்தில் ஆஸ்திரேலியா-இங்கிலாந்து அணிகள் பலப்பரீட்சை நடத்தின. காயம் காரணமாக இங்கிலாந்து அணி கேப்டன் ஹீதர் நைட் ஆடவில்லை. அவருக்கு பதிலாக டேனியல் ஹாசெல் கேப்டன் பொறுப்பை கவனித்தார். ‘டாஸ்’ ஜெயித்த இங்கிலாந்து அணி பீல்டிங்கை தேர்வு செய்தது.

இதன்படி முதலில் பேட்டிங் செய்த ஆஸ்திரேலிய அணி இங்கிலாந்து பந்து வீச்சை துவம்சம் செய்து நிர்ணயிக்கப்பட்ட 20 ஓவர்களில் 4 விக்கெட் இழப்புக்கு 209 ரன்கள் குவித்து சாதனை படைத்தது. பெண்கள் 20 ஓவர் சர்வதேச கிரிக்கெட் போட்டியில் குவிக்கப்பட்ட அதிகபட்ச ரன் இதுவாகும். இதற்கு முன்பு 2010-ம் ஆண்டில் நெதர்லாந்துக்கு எதிராக தென்ஆப்பிரிக்க அணி ஒரு விக்கெட் இழப்புக்கு 205 ரன்கள் எடுத்து இருந்ததே அதிகபட்சமாக இருந்தது.

பவுண்டரியில் சாதனை

ஆஸ்திரேலிய அணியில் அதிகபட்சமாக கேப்டன் மெக் லேனிங் 45 பந்துகளில் 16 பவுண்டரி, ஒரு சிக்சருடன் 88 ரன்கள் விளாசி ஆட்டம் இழக்காமல் இருந்தார். எல்சி விலானி 51 ரன்னும், அலிசா ஹீலே, ஆஷ்லிக் கார்ட்னர் தலா 33 ரன்னும் எடுத்தனர். ஆஸ்திரேலிய அணி தனது இன்னிங்சில் மொத்தம் 32 பவுண்டரிகள் விரட்டியிருந்தது. ஆண்கள் மற்றும் பெண்கள் சர்வதேச 20 ஓவர் போட்டியில் ஒரு இன்னிங்சில் அடிக்கப்பட்ட அதிகபட்ச பவுண்டரி எண்ணிக்கை இது தான். இதற்கு முன்பு 2007-ம் ஆண்டில் ஆண்கள் 20 ஓவர் கிரிக்கெட் போட்டியில் கென்யாவுக்கு எதிரான ஆட்டத்தில் இலங்கை அணி ஒரு இன்னிங்சில் 30 பவுண்டரிகள் அடித்ததே சாதனையாக இருந்தது.

பின்னர் 210 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இமாலய இலக்கை நோக்கி ஆடிய இங்கிலாந்து அணியால் 9 விக்கெட் இழப்புக்கு 152 ரன்களே எடுக்க முடிந்தது. இதன் மூலம் ஆஸ்திரேலிய அணி 57 ரன்கள் வித்தியாசத்தில் அபார வெற்றி பெற்று சாம்பியன் பட்டத்தை வசப்படுத்தியது.

Next Story