கிரிக்கெட்

ஐ.பி.எல். கிரிக்கெட்டில் நெருக்கடியை சிறப்பாக கையாள்வேன்: கொல்கத்தா கேப்டன் தினேஷ் கார்த்திக் பேட்டி + "||" + The IPL teams Kolkata captain Dinesh Karthik said he believes that the crisis can be better tackled in cricket

ஐ.பி.எல். கிரிக்கெட்டில் நெருக்கடியை சிறப்பாக கையாள்வேன்: கொல்கத்தா கேப்டன் தினேஷ் கார்த்திக் பேட்டி

ஐ.பி.எல். கிரிக்கெட்டில் நெருக்கடியை சிறப்பாக கையாள்வேன்: கொல்கத்தா கேப்டன் தினேஷ் கார்த்திக் பேட்டி
ஐ.பி.எல். கிரிக்கெட்டில் நெருக்கடியை சிறப்பாக கையாள முடியும் என்று நம்புவதாக கொல்கத்தா கேப்டன் தினேஷ் கார்த்திக் கூறினார்.
கொல்கத்தா,

தினேஷ் கார்த்திக் பேட்டி

11-வது ஐ.பி.எல். 20 ஓவர் கிரிக்கெட் போட்டி வருகிற 7-ந்தேதி முதல் மே 27-ந்தேதி வரை இந்தியாவின் பல்வேறு நகரங்களில் நடக்கிறது. இதில் பங்கேற்கும் 8 அணிகளில் ஒன்றான கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணி தனது முதல் லீக் ஆட்டத்தில் 8-ந்தேதி பெங்களூரு ராயல் சேலஞ்சர்சை சந்திக்கிறது.

கொல்கத்தா அணிக்கான புதிய சீருடை அறிமுக விழா கொல்கத்தாவில் நேற்று நடந்தது. பின்னர் அந்த அணியின் புதிய கேப்டனான தமிழகத்தை சேர்ந்த தினேஷ் கார்த்திக் நிருபர்களிடம் கூறியதாவது:-

கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணிக்காக கவுதம் கம்பீர் செய்த சாதனைகள் (2 முறை சாம்பியன்) பிரமிக்கத்தக்கது. அவர் ஒரு தரத்தை நிர்ணயித்து சென்று இருக்கிறார். அணியின் கேப்டன் என்ற முறையில் கம்பீர் போலவே என்னிடமும் கொல்கத்தா நிர்வாகம் எதிர்பார்க்கும். அந்த எதிர்பார்ப்புகளை நானும் அறிவேன். இதனால் அதிக நெருக்கடி இருக்கத்தான் செய்யும். குறைந்தது பிளே-ஆப் சுற்றுக்கு முன்னேற வேண்டும் என்பதே எனது நோக்கமாகும். கேப்டன் பதவியை திறம்பட கையாண்டு, வீரர்களின் மிகச்சிறந்த திறமையை வெளிக்கொண்டு வர முடியும் என்ற நம்பிக்கை இருக்கிறது.

முத்தரப்பு 20 ஓவர் கிரிக்கெட் தொடரில் வங்காளதேசத்துக்கு எதிரான இறுதி ஆட்டத்தில் கடைசி பந்தில் சிக்சர் அடித்து இந்திய அணிக்கு வெற்றித்தேடி தந்த நிகழ்வு முடிந்து 10 நாட்கள் ஆகி விட்டது. ரசிகர்கள் அதில் இருந்து நகர்ந்து விட்டனர். நாமும் அதை மறந்துவிட்டு அடுத்த போட்டியில் கவனம் செலுத்த வேண்டும்.

பேட்டிங் வரிசை

இந்திய அணிக்குரிய ஆட்டம் போன்று இல்லாமல் ஐ.பி.எல். போட்டியில் தேவைக்கு ஏற்ப வெவ்வேறு பேட்டிங் வரிசைகளில் களம் இறங்குவேன். ஐ.பி.எல். போட்டி என்பது வித்தியாசமான சூழலையும், நெருக்கடியையும் சாதுர்யமாக சமாளிக்கக்கூடியதாகும். இன்னும் ஒரு வாரம் இருக்கிறது. நான் என்னை வித்தியாசமாக நடத்திக்கொள்ளமாட்டேன். எல்லாருமே இங்கு சிறந்த ஆட்டத்தை வெளிப்படுத்தவே வந்திருக்கிறார்கள். நானும் அதில் விதிவிலக்கல்ல.

எனது மனைவி தீபிகா பலிக்கல் (ஸ்குவாஷ் வீராங்கனை) காமன்வெல்த் போட்டியில் பங்கேற்பதற்காக இப்போது கோல்டு கோஸ்டுக்கு சென்றிருக்கிறார். அவரிடம் இருந்து நான் கடின உழைப்பையும், மனஉறுதியையும் கற்றுக்கொண்டேன். 4 ஆண்டுகளுக்கு முன்பு அவர் கிளாஸ்கோ காமன்வெல்த் விளையாட்டில் தங்கப்பதக்கம் வென்றார். ஒரு விளையாட்டு வீரராக தொடர்ந்து நிலையான ஆட்டத்தை வெளிப்படுத்த வேண்டியது முக்கியம். அடுத்த 2 வாரங்கள் எனது மனைவியின் வாழ்க்கையில் முக்கியமானவை.

இவ்வாறு தினேஷ் கார்த்திக் கூறினார்.