கிரிக்கெட்

“வார்னர் செய்த தவறுக்கு நானே காரணம்” : மனைவி வெளியிட்ட புதிய தகவல் + "||" + Warner wife Kantis, said that I was responsible for the worst behavior of Warner.

“வார்னர் செய்த தவறுக்கு நானே காரணம்” : மனைவி வெளியிட்ட புதிய தகவல்

“வார்னர் செய்த தவறுக்கு நானே காரணம்” : மனைவி வெளியிட்ட புதிய தகவல்
பந்தை சேதப்படுத்திய வார்னரின் மோசமான நடத்தைக்கு நானே காரணம் என்று அவரது மனைவி கேன்டிஸ் கூறியுள்ளார்.
சிட்னி,

தலைக்குனிவு

தென்ஆப்பிரிக்காவுக்கு எதிரான 3-வது டெஸ்ட் கிரிக்கெட்டில் பந்தை சேதப்படுத்திய சர்ச்சையில் சிக்கிய ஆஸ்திரேலிய வீரர்கள் ஸ்டீவன் சுமித், டேவிட் வார்னர் ஆகியோருக்கு சர்வதேச மற்றும் உள்ளூர் போட்டிகளில் விளையாட தலா ஓராண்டு தடையும், இளம் வீரர் கேமரூன் பான்கிராப்டுக்கு 9 மாதங்கள் தடையும் விதித்து ஆஸ்திரேலிய கிரிக்கெட் வாரியம் அதிரடி நடவடிக்கையை எடுத்தது. தாயகம் திரும்பிய ஸ்டீவன் சுமித்தும், டேவிட் வார்னரும் தேசத்திற்கு தலைக்குனிவை ஏற்படுத்தி விட்டதாகவும், தங்களை மன்னிக்கும்படியும் கண்ணீர் விட்டனர்.

குறுக்குவழியை கையாண்டதால் பெயர், புகழை இழந்ததுடன் தனிப்பட்ட முறையில் ஆஸ்திரேலிய கிரிக்கெட் வாரியத்துடனான ஒப்பந்த ஊதியம், போனஸ், போட்டி கட்டணம், ஸ்பான்சர்ஷிப் இழப்பு, ஐ.பி.எல். தடை போன்றவற்றின் மூலம் ஏறக்குறைய தலா ரூ.30 கோடி வருவாயை இருவரும் பறிகொடுத்துள்ளனர்.

வார்னரின் மனைவி

பந்தின் தன்மையை மாற்றினால் ‘ரிவர்ஸ் ஸ்விங்’ ஆகும் என்று திட்டம் வகுத்து கொடுத்தவரான டேவிட் வார்னர், இனி ஆஸ்திரேலிய அணிக்கு விளையாட முடியாமலேயே போகலாம் என்று புலம்பிக்கொண்டிருக்கிறார். இந்த நிலையில் இந்த விவகாரத்தில் வார்னரின் மனைவி கேன்டிஸ் திடுக்கிடும் தகவல்களை வெளியிட்டுள்ளார். வார்னர்-கேன்டிஸ் தம்பதிக்கு இரண்டு மகள்கள் உள்ளனர். 33 வயதான கேன்டிஸ் ஆஸ்திரேலிய பத்திரிகை ஒன்றுக்கு அளித்த பேட்டியில் கூறியதாவது:-

‘பந்தின் தன்மையை மாற்றி வெற்றி காணும் தவறான திட்டம்’ எனது கணவரின் மனதில் உதித்ததற்கு நானே காரணம் என்று உணர்கிறேன். அந்த குற்றஉணர்ச்சி என்னை கொன்று விடும் போல் இருக்கிறது. எனது கணவரின் செயலுக்கு நான் மன்னிப்பு கோரவில்லை. ஆனால் தென்ஆப்பிரிக்க தொடரின் போது என் மீதும், குழந்தைகள் மீதும் விழுந்த அவதூறு பேச்சுகளுக்கு பதிலடி கொடுக்கவே அவ்வாறு செய்து விட்டதாக தோன்றுகிறது. எனது கடந்த கால வாழ்க்கையை இழுத்து அந்த நாட்டு ரசிகர்கள் மோசமாக நடந்து கொண்டனர்.

முகமூடி அணிந்து கிண்டல்

போர்ட் எலிசபெத் டெஸ்ட் போட்டியை பார்க்க சென்ற போது, சில ரசிகர்கள் எனது முன்னாள் காதலரின் முகமூடியை அணிந்து கொண்டு என்னை கீழ்த்தரமாக கிண்டல் செய்தனர். என்னை பார்த்து ஏளனமாக சிரித்தனர். பாட்டுபாடி கேலி செய்தனர். இவற்றை எல்லாம் கேட்டு பொறுமையாக உட்கார்ந்து இருந்தேன். இதுபோன்ற சம்பவங்கள் வார்னரை வெகுவாக தடுமாற வைத்து விட்டது.

ஆட்டம் முடிந்து அறைக்கு வந்த அவர், படுக்கை அறையில் என் முன் கண்ணீர் விட்டு அழுததை பார்த்ததும் நானும், குழந்தைகளும் வேதனை அடைந்தோம். ஒரு கணம் இதயமே நொறுங்கி விடும் போல் இருந்தது. தற்போது மனரீதியாக துவண்டு போய் உள்ள வார்னர் மீது ஆஸ்திரேலிய ரசிகர்கள் இரக்கம் காட்ட வேண்டும் என்று கேட்டுக் கொள்கிறேன்.

இவ்வாறு கேன்டிஸ் கூறினார்.

நடந்தது என்ன?

கேன்டிஸ், நியூசிலாந்து ரக்பி வீரர் சோனி பில் வில்லியம்சை காதலித்தார். 2007-ம் ஆண்டு சிட்னியில் இரவு விடுதியின் கழிவறை ஒன்றில் இருவரும் மிக நெருக்கமாக இருக்கும் புகைப்படம் அந்த சமயத்தில் வெளியாகி பரபரப்பை ஏற்படுத்தியது. பிறகு அவரை விட்டு பிரிந்த கேன்டிஸ், வார்னரை கரம்பிடித்தார்.

டர்பனில் நடந்த முதலாவது டெஸ்டின் தேனீர் இடைவேளையின் போது, தென்ஆப்பிரிக்க விக்கெட் கீப்பர் குயின்டான் டி காக்குக்கும், வார்னருக்கும் இடையே கடுமையான மோதல் ஏற்பட்டது. அவரை அடிப்பது போல் வார்னர் சீறிப்பாய்ந்தார். பிறகு சக வீரர்கள் வார்னரை சமாதானப்படுத்தினர். தனது மனைவியை டி காக் வெறுக்கத்தக்க வகையில் பேசியதாலேயே அவ்வாறு நடந்து கொண்டதாக வார்னர் விளக்கம் அளித்தார்.

அடுத்து 2-வது டெஸ்டின் போது சில ரசிகர்கள், கேன்டிசின் முன்னாள் காதலர் சோனி பில் வில்லியம்சின் முகமூடி அணிந்தபடி மைதானத்திற்குள் வந்தனர். அவர்கள் முதலில் மைதானத்திற்குள் அனுமதிக்கப்படவில்லை. பிறகு தென்ஆப்பிரிக்க கிரிக்கெட் வாரியத்தின் இரண்டு நிர்வாகிகள் தலையிட்டதால் அந்த ரசிகர்கள் மைதானத்திற்குள் வந்து விட்டனர். அவர்களை பார்த்ததும் வார்னர் ரொம்பவே எரிச்சல் அடைந்தார். 3-வது டெஸ்டின் போது ஒரு ரசிகர் வேண்டுமென்றே அவரை வம்புக்கு இழுத்து வாக்குவாதம் செய்தார்.

இப்படி மனைவியின் நடத்தை குறிவைத்து தென்ஆப்பிரிக்க ரசிகர்களின் தொடர்ச்சியான சீண்டல்களே எப்படியாவது தென்ஆப்பிரிக்காவை வீழ்த்த வேண்டும் என்ற வெறி வார்னரை தவறான பாதைக்கு அழைத்து வந்திருக்கலாம். இதைத் தான் கேன்டிசும் மறைமுகமாக குறிப்பிட்டு இருக்கிறார்.