ஐ.பி.எல். அணிகளின் பலம், பலவீனம் - ஒரு பார்வை


ஐ.பி.எல். அணிகளின் பலம், பலவீனம் - ஒரு பார்வை
x
தினத்தந்தி 7 April 2018 5:46 AM GMT (Updated: 7 April 2018 5:46 AM GMT)

ஐ.பி.எல். கிரிக்கெட் திருவிழா இன்று முதல் ஆரம்பமாகிறது.

வீரர்கள் விடுவிப்பு, புதிய வீரர்கள் ஏலம், சென்னை, ராஜஸ்தான் அணிகளின் வருகை, குஜராத்-புனே அணிகள் வெளியேற்றம்... என பல மாற்றங்களுக்கு பிறகு ஐ.பி.எல்.போட்டிகள் ஆரம்பமாக உள்ளன. அதனால் ஐ.பி.எல். அணிகளின் பலம்-பலவீனங்களை அறிந்து கொள்ள சுமந்த் சி.ராமனை அணுகினோம். விளையாட்டு உலகில் பல ஆண்டுகள் அனுபவமிக்கவரான அவர், ஐ.பி.எல். அணிகளின் நிறை-குறைகளை பட்டியலிட்டார்.

சென்னை சூப்பர் கிங்ஸ் (கில்லி)

நிறை: பழைய வீரர்களை தக்கவைத்திருப்பது, சி.எஸ்.கே. அணியின் பலம். டோனி, பாப் டூபிளசிஸ், ஜடேஜா, ரெய்னா, பிராவோ... ஆகியோரின் கூட்டணி, பல இக்கட்டான சூழ்நிலைகளையும் சமாளித்து, வெற்றி வாகை சூடியிருக்கிறது. இவர்களது கூட்டு முயற்சி சி.எஸ்.கே. அணிக்கு பக்கபலமாக அமையும். அதோடு சுழல்பந்து வீச்சில் சென்னை அணி வலுவாக இருக்கிறது. ஹர்பஜன், இம்ரான் தகீர், கரன் சர்மா ஆகியோரின் சுழல் தாக்குதல், எதிரணியினருக்கு கலக்கத்தை உருவாக்கும்.

குறை: அனுபவமிக்க வேகபந்து வீச்சாளர்கள் இல்லாதது பெரிய குறை. அதேபோல அனுபவ வீரர்களின் வயது முதிர்ச்சியும், குறையாக மாற வாய்ப்பு இருக்கிறது.

மும்பை இந்தியன்ஸ் (பலே பலே)

நிறை: மும்பையும் பழைய வீரர்களை தக்கவைத்திருக்கிறது. அதனால் பேட்டிங்கில் கலக்குவார்கள். கிரன் பொலார்ட், ரோகித் சர்மா, ஹர்திக் பாண்டியா ஆகியோரின் அதிரடி ஆட்டமும், ஜஸ்பிரிட் பும்ரா, முஷ்பிகூர் ரகுமான் ஆகியோரின் பவுலிங் தாக்குதலும் மும்பை அணியை, வலுவான அணியாக மாற்றுகிறது.

குறை: ஐ.பி.எல்.போட்டிகளின் வெற்றியை தீர்மானிக்கும் சுழல்பந்து வீச்சு, மும்பை அணியில் பலம் இழந்து காணப்படுகிறது. அதை தேற்றியிருந்தால் மும்பை அணி ‘பவர்புல்’ அணியாக மாறியிருக்கும்.

டெல்லி டேர்டெவில்ஸ் (புதுவேகம்)

நிறை: ரிஷப் பாண்ட், ஷ்ரேயாஸ் அய்யர், கிறிஸ் மோரிஸ், மேக்ஸ் வெல், கவுதம் கம்பீர்... என அதிரடி வீரர்கள் ஓர் அணியில் திரண்டிருப்பது, டெல்லி அணியை தலை நிமிர வைத்திருக்கிறது. அதேபோல பவுலிங்கிலும் வலுப்பெற்றிருக்கிறது. பேட்டிங்கும், பவுலிங்கும் சமநிலையாக இருப்பது டெல்லியின் பெரும்பலம்.

குறை: ஐ.பி.எல்.பட்டத்தை, டெல்லி அணி இதுவரை வென்றது இல்லை.  எவ்வளவு பவர்புல்லான வீரர்களை வைத்திருந்தாலும் டெல்லிக்கு தோல்வியே மிஞ்சும். இந்த சாபம் இம்முறையும் பலித்துவிடுமோ என்ற சந்தேகம் மட்டும் டெல்லி அணி யின் குறையாக இருக்கிறது.

ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு (பவர்புல்)

நிறை: விராட் கோலி, ஏ.பி.டிவில்லியர்ஸ், குவின்டன் டிகாக், சர்பிராஸ் கான்... ஆகிய பெரும் தலைகள் அங்கம் வகிக்கும் அணி. அதனால் பேட்டிங்கில் வலுவான அணியாக திகழ்கிறது.

குறை:
வாஷிங்டன் சுந்தர், சஹால்... என சுழல் தாக்குதல் இருந்தாலும், முழுமையான வேகப்பந்து வீச்சு தாக்குதல் இல்லை.

கிங்ஸ் லெவன் பஞ்சாப் (அதிரடி)

நிறை: மற்ற அணிகளில் விளையாடிய வீரர்களை கொண்டு புதிய பலமான அணியை கட்டமைத்திருக்கிறார்கள். அதற்கு ஐ.பி.எல்.போட்டிகளில் அதிக அனுபவமிக்க அஸ்வின் தலைமை ஏற்றிருப்பது கூடுதல் பலம். கே.எல்.ராகுல், ஆரோன் பின்ச், கிறிஸ் கெய்ல், யுவராஜ் சிங், மாயங் அகர்வால்... போன்றோரின் அதிரடி ஆட்டம் பஞ்சாப்அணிக்கு பலம்சேர்க்கும்.

குறை: புதிய வீரர்களை கொண்டு உருவாக்கப்பட்ட அணி என்பதால் கூட்டுமுயற்சியில் தடுமாறலாம். அதேசமயம் வேகபந்து வீச்சிலும் பஞ்சாப் சற்று பலவீனமாக இருக்கிறது.

சன் ரைசர்ஸ் ஐதராபாத் (நிதானம்)

நிறை: நபி, ராஷித் கான்... ஆகியோரின் சுழல் தாக்குதல் கச்சிதமாக இருக்கிறது. அதேசமயம் வில்லியம்சன், ஷிகர் தவான், பிராத்வெய்ட், மணிஷ்பாண்டே என பேட்டிங்கிலும் வலுவான அணி.

குறை: சன் ரைசர்ஸ் அணியின் முன்னாள் கேப்டனும், அதிரடி ஆட்டக்காரருமான வார்னர் இல்லாதது பெரும் குறை. புவனேஷ்குமாரை தவிர, டி-20 போட்டிகளில் முத்திரை பதித்த வேகபந்துவீச்சாளர்கள் இல்லாததும் பெரும் குறை.

ராஜஸ்தான் ராயல்ஸ் (தலைமை இல்லாத படை)

நிறை: ரகானே, சஞ்சு சாம்சன், ஸ்டோக்ஸ் ஆகியோரின் ஆட்டம் ராஜஸ்தானுக்கு பலமாக இருக்கும்.

குறை: ராஜஸ்தான் அணியை சரிவில் இருந்து தாங்கிப் பிடிக்கும் ஸ்டீவன் ஸ்மித் இல்லாதது வருத்தம் அளிக்கிறது. அவரது இழப்பு ராஜஸ்தான் அணிக்கு பெரும் இடி. அதேசமயம் ராஜஸ்தான் பேட்டிங்கிலும், பவுலிங்கிலும் பலவீனமாக இருப்பது வெளிப்படையாகவே தெரிகிறது.

கொல்கத்தா நைட் ரைடர்ஸ் (காயம்)

நிறை: பழைய அணி, இளம் பவுலர்களுக்கு வாய்ப்பு, ஆல்-ரவுண்டர்களின் ஆதிக்கம் என கொல்கத்தா வலிமையான அணியாக விளங்குகிறது.

குறை: கொல்கத்தாவின் நம்பிக்கை தூண்கள் ஒவ்வொன்றும் காயம் காரணமாக, ஐ.பி.எல்.போட்டிகளில் இருந்து விலகி இருப்பது பெரும் பின்னடைவு. 

Next Story