ஐ.பி.எல். கிரிக்கெட் புனேக்கு மாற்றம்: ‘சென்னை ரசிகர்களின் ஆதரவை தவறவிடுவது வேதனை அளிக்கிறது’ வீரர்கள் உருக்கம்


ஐ.பி.எல். கிரிக்கெட் புனேக்கு மாற்றம்: ‘சென்னை ரசிகர்களின் ஆதரவை தவறவிடுவது வேதனை அளிக்கிறது’ வீரர்கள் உருக்கம்
x
தினத்தந்தி 12 April 2018 9:15 PM GMT (Updated: 12 April 2018 8:59 PM GMT)

ஐ.பி.எல். கிரிக்கெட் போட்டி சென்னையில் இருந்து புனேக்கு மாற்றப்பட்டதால் ஏமாற்றம் அடைந்துள்ள சென்னை சூப்பர் கிங்ஸ் வீரர்கள் உள்ளூர் ரசிகர்களின் ஆதரவை தவறவிடுவது வேதனை அளிப்பதாக கூறியுள்ளனர்.

சென்னை, 

ஐ.பி.எல். கிரிக்கெட் போட்டி சென்னையில் இருந்து புனேக்கு மாற்றப்பட்டதால் ஏமாற்றம் அடைந்துள்ள சென்னை சூப்பர் கிங்ஸ் வீரர்கள் உள்ளூர் ரசிகர்களின் ஆதரவை தவறவிடுவது வேதனை அளிப்பதாக கூறியுள்ளனர்.

சென்னையில் இருந்து புனேக்கு மாற்றம்

காவிரி மேலாண்மை வாரியம் அமைக்க கோரி தமிழகத்தில் பல்வேறு அரசியல் கட்சியினரும், அமைப்பினரும் தங்களது போராட்டத்தை தீவிரப்படுத்தியுள்ளனர். இதன் ஒரு பகுதியாக சென்னையில் ஐ.பி.எல். கிரிக்கெட் போட்டியை நடத்தக்கூடாது, இதனால் இளைஞர்களின் கவனம் திசைதிரும்பி விடும் என்று போர்க்கொடி தூக்கினர். பலத்த எதிர்ப்பையும் மீறி சென்னை-கொல்கத்தா இடையிலான ஆட்டம் நடந்தது. ஆனாலும் போராட்டக்காரர்களில் சிலர் மைதானத்திற்குள் காலணியை தூக்கி எறிந்ததால் பரபரப்பு ஏற்பட்டது. காவிரி விவகாரத்தில் தொடர்ந்து அசாதாரமாண சூழல் நிலவுவதால் மீதமுள்ள ஆட்டங்களுக்கு பாதுகாப்பு தர இயலாது என்று போலீஸ் தரப்பில் தெரிவிக்கப்பட்டது.

இதையடுத்து சென்னை சேப்பாக்கத்தில் நடக்க இருந்த எஞ்சிய 6 ஐ.பி.எல். ஆட்டங்களையும் வேறு இடத்துக்கு மாற்ற முடிவு செய்யப்பட்டது. இந்த 6 ஆட்டங்களும் மராட்டிய மாநிலம் புனேயில் நடைபெறும் என்று ஐ.பி.எல். நிர்வாகம் நேற்று அதிகாரபூர்வமாக அறிவித்தது. இதன்படி ராஜஸ்தான் ராயல்ஸ் (ஏப்.20), மும்பை இந்தியன்ஸ் (ஏப்.28), டெல்லி டேர்டெவில்ஸ் (ஏப்.30), பெங்களூரு ராயல் சேலஞ்சர்ஸ் (மே.5), ஐதராபாத் சன்ரைசர்ஸ் (மே.13), கிங்ஸ் லெவன் பஞ்சாப் (மே.20) ஆகிய அணிகளுக்கு எதிராக சென்னை சூப்பர் கிங்ஸ் அணி உள்ளூரில் மோத இருந்த ஆட்டங்கள் இப்போது புனேக்கு சென்றுள்ளது.

ரெய்னா- ஹர்பஜன்சிங்

சூதாட்ட சர்ச்சையால் 2 ஆண்டுகள் தடைக்கு பிறகு மறுபிரவேசம் செய்த சென்னை அணி மீண்டும் இங்கு விளையாட முடியாத நிலைமை உருவாகிவிட்டது. இதனால் ரசிகர்கள் மட்டுமின்றி சென்னை அணி வீரர்களும் தங்களது கவலையை கொட்டி தீர்த்துள்ளனர். அவர்கள் சமுக வலைதளத்தில் வெளியிட்டுள்ள உருக்கமான பதிவுகள் வருமாறு:-

துணை கேப்டன் சுரேஷ் ரெய்னா: சொந்த மண்ணில் விளையாடி, சென்னை அணி ரசிகர்களை மகிழ்விக்கும் வாய்ப்பை இந்த சீசனில் நழுவவிடுகிறோம். நீங்கள் (ரசிகர்கள்) எப்போதும் எங்களது மனதில் நிலையாக இருப்பீர்கள். வருத்தத்துடன் புனேக்கு செல்கிறோம்.

ஹர்பஜன்சிங்: சென்னையில் விளையாட முடியாமல் போனதில் மனம் உடைந்தது. பிற மண்ணில் களம் கண்டாலும் தமிழ் பாசமும், நேசமும் துளியும் குறையாது. மீண்டும் சந்திப்போம் என்ற நம்பிக்கையுடன், எங்கள் மீது அளவு கடந்த அன்பு வைத்திருக்கும் தமிழ்நாடு ரசிகர்களிடம் இருந்து விடைபெறுகிறேன்.

பாப் டு பிளிஸ்சிஸ்: இந்த சீசனில் மீண்டும் சென்னைக்கு வர இயலாது என்ற வருத்தத்துடன் புனேவுக்கு கிளம்புகிறோம்.

இம்ரான் தாஹிர்: சென்னைக்கு வருகை தந்த போது, ரசிகர்களின் வரவேற்பும், பாசமும் நெகிழ வைத்தது. இப்போது சென்னையில் போட்டி இல்லை என்பதை நினைக்கும் போது மிகவும் வேதனை அளிக்கிறது. அடுத்த முறை இங்கு வரும் போது எல்லா பிரச்சினைகளும் சரியாகி விடும் என்று நம்புகிறேன். தொடர்ந்து உங்களது ஆதரவை தாருங்கள்.

ஆதரவு தாருங்கள்

ஷேன் வாட்சன், சாம் பில்லிங்ஸ்: கடந்த ஆட்டத்தில் சேப்பாக்கத்தில் ரசிகர்களின் ஆதரவு நம்ப முடியாத அளவுக்கு பிரமிக்க வைத்தது. இப்போது ஐ.பி.எல். போட்டி இங்கிருந்து வேறு இடத்துக்கு செல்வது அதிர்ச்சி அளிக்கிறது. தொடர்ந்து நீங்கள் உற்சாகப்படுத்தி ஆதரவு தர வேண்டும். அது எங்களுக்குள் மிகப்பெரிய தாக்கத்தை ஏற்படுத்தும்.

ஸ்டீபன் பிளமிங் (சென்னை அணியின் தலைமை பயிற்சியாளர்): சென்னையை விட்டு செல்வது வருத்தம் அளிக்கிறது. 2 ஆண்டுகள் கழித்து சென்னை அணிக்கு திரும்பியது மிகப்பெரிய அனுபவம். கிரிக்கெட் மீதும், சென்னை சூப்பர் கிங்ஸ் மீதும் தமிழக ரசிகர்கள் காட்டும் அன்பும், அதீத ஆர்வமும் சிறப்பானது. தமிழகத்தில் தற்போது நிலவும் பிரச்சினைகளுக்கு அமைதியான முறையில் விரைவில் தீர்வு கிடைக்கும் என்று நம்புகிறோம். எங்களுக்கு சிறப்பான வரவேற்பு அளித்த அனைவருக்கும் நன்றி.

இவ்வாறு அவர்கள் கூறியுள்ளனர்.

Next Story