கிரிக்கெட்

கொல்கத்தா நைட்ரைடர்ஸ் அணியை 5 விக்கெட்டுகள் வித்தியாசத்தில் வீழ்த்தி சன்ரைசர்ஸ் ஐதராபாத் அணி வெற்றி + "||" + Sunrisers Hyderabad won by 5 wkts

கொல்கத்தா நைட்ரைடர்ஸ் அணியை 5 விக்கெட்டுகள் வித்தியாசத்தில் வீழ்த்தி சன்ரைசர்ஸ் ஐதராபாத் அணி வெற்றி

கொல்கத்தா நைட்ரைடர்ஸ் அணியை 5 விக்கெட்டுகள் வித்தியாசத்தில் வீழ்த்தி சன்ரைசர்ஸ் ஐதராபாத் அணி வெற்றி
11 வது ஐபிஎல் போட்டியின் 10 வது லீக் ஆட்டத்தில் சன்ரைசர்ஸ் ஐதராபாத் அணி 5 விக்கெட்டுகள் வித்தியாசத்தில் கொல்கத்தா நைட்ரைடர்ஸ் அணியை வீழ்த்தியது. #IPL
கொல்கத்தா, 

11-வது ஐபிஎல் கிரிக்கெட் தொடரின் 10-வது லீக் ஆட்டத்தில் கொல்கத்தா நைட்ரைடர்ஸ் மற்றும் சன்ரைசர்ஸ் ஐதராபாத் அணிகளுக்கிடையேயான போட்டி கொல்கத்தா ஈடன் கார்டன்ஸ் மைதானத்தில் நடைபெற்றது. டாஸ் வென்ற ஐதராபாத் அணி கேப்டன் கனே வில்லியம்சன் கொல்கத்தா அணியை பேட்டிங் செய்யுமாறு பணித்தார். இதன்படி கொல்கத்தா அணியின் தொடக்க ஆட்டகாரர்களாக ராபின் உத்தப்பா மற்றும் கிறிஸ் லின் ஆகியோர் களமிறங்கினர். ஆட்டத்தின் 2 வது ஓவரின் 4 வது பந்தில் உத்தப்பா வெறும் 3 ரன்களுடன் பெவிலியன் திரும்ப பின்னா் நிதீஷ் ராணா கிறிஸ் லின்னுடன் கை கோர்த்தார்.

இரு வீரர்களும் பொறுப்பான ஆட்டத்தில் ஈடுபட்டிருக்க அணியின் ஸ்கோர் 55 ரன்களாக இருக்கும் போது நிதிஷ் ராணா 18 ரன்களில் ஸ்டான்லேக் பந்து வீச்சில் ஆட்டமிழந்தார். அடுத்து களமிறங்கிய எந்த வீரர்களும் சொல்லி கொள்ளும் படியாக விளையாடததால் கொல்கத்தா அணியின் ஸ்கோர் மந்த நிலையிலேயே ஏற்றம் கண்டது. அந்த அணியின் அதிகபட்சமாக கிறிஸ் லீன் (49 ரன்கள்) மற்றும் கேப்டன் தினேஷ் கார்த்திக் (29 ரன்கள்) எடுத்திருந்தனர். மற்ற வீரர்கள் அனைவரும் ஐதராபாத் அணியினரின் பந்து வீச்சை சமாளிக்க முடியாமல் சொற்ப ரன்களில் ஆட்டமிழந்தனர். 

இதனால் நிர்ணயிக்கப்பட்ட 20 ஓவர்களில் கொல்கத்தா நைட்ரைடர்ஸ் அணி 8 விக்கெட் இழப்புக்கு 138 ரன்கள் எடுத்திருந்தது. ஐதராபாத் அணியில் சார்பாக வேகபந்து வீச்சாளர் புவனேஷ்வர் குமார் 3 விக்கெட்டுகளையும், ஸ்டான்லேக் மற்றும் சகிப் அல் ஹசன் ஆகியோர் தலா 2 விக்கெட்டுகளையும் கைப்பற்றினர். 

பின்னர் 139 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் ஐதராபாத் அணியின் தொடக்க ஆட்டக்காரர்கள் சகா மற்றும் தவான் ஆகியோர் களமிறங்கினர். ஆரம்பம் முதலே அதிரடி காட்டிய சகா 5 பவுண்டரிகள் விளாசி நரேன் பந்து வீச்சில் அவுட் ஆனார். பின்னர் களமிறங்கிய ஐதராபாத் அணியின் கேப்டன் வில்லியம்சன், தவானுடன் கை கோர்த்தார். இருப்பினும் சிறிது நேரத்திலேயே இந்த ஜோடி பிரிந்தது. அணியின் ஸ்கோர் 46 ஆக இருக்க நரேன் பந்து வீச்சில் தவான் (7 ரன்கள்) கிளீன் போல்ட் ஆகி வெளியேறினார்.

அடுத்து வந்த மனிஷ் பாண்டேவும் 4 ரன்களில் வெளியேற வில்லியம்சன்னுடன் சகிப் அல் ஹசன் கை கோர்த்தார். இருவரும் மிகவும் பொறுப்பான ஆட்டத்தை வெளிபடுத்தி அணியின் ஸ்கோர் முன்னேற்றத்திற்கு உதவினர். இருந்தாலும் ஆட்டத்தின் 15 வது ஓவரின் 5 வது பந்தில் சாவ்லா பந்து வீச்சில் சகிப் (27 ரன்கள்) போல்ட் ஆகி வெளியேறினார். மறுமுனையில் தனது அரை சதத்தை பூர்த்தி செய்த வில்லியம்சன் (50 ரன்கள்) ஜான்சன் பந்து வீச்சில் ரஸெலிடம் கேட்ச் ஆகி வெளியேறினார்.

இதன் பின்னர் களமிறங்கிய யூசுஃப் பதான், தீபக் ஹூடாவுடன் இணைந்தார். ஆட்டத்தின் 18 வது ஓவரின் இறுதிப்பந்தில் சிக்ஸர் அடித்த யூசுஃப் பதான் ஐதராபாத் அணியின் வெற்றியை உறுதி படுத்தினார். இதன் மூலம் சன்ரைசர்ஸ் ஐதராபாத் அணி 5 விக்கெட்டுகள் வித்தியாசத்தில் கொல்கத்தா நைட்ரைடர்ஸ் அணியை வீழ்த்தியது. மேலும் கொல்கத்தா நைட்ரைடர்ஸ் அணியின் சுழல் பந்து வீச்சாளர் நரேன் 2 விக்கெட்டுகளை கைப்பற்றினார்.

இந்நிலையில் நாளை நடைபெறும் போட்டியில் ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு அணி, ராஜஸ்தான் ராயல்ஸ் அணியை பெங்களூரு சின்னசாமி மைதானத்தில் எதிர்கொள்கிறது. மேலும் மொஹாலியில் வைத்து நடைபெறும் மற்றொரு லீக் போட்டியில் சென்னை சூப்பர் கிங்ஸ் அணியும்,  கிங்ஸ் லெவன் பஞ்சாப் அணியும் பலப்பரீட்சையில் ஈடுபடுகின்றன.