ஐதராபாத் அணியிடம் தோல்வி: கொல்கத்தா பவுலர்களுக்கு தினேஷ் கார்த்திக் வேண்டுகோள்


ஐதராபாத் அணியிடம் தோல்வி: கொல்கத்தா பவுலர்களுக்கு தினேஷ் கார்த்திக் வேண்டுகோள்
x
தினத்தந்தி 15 April 2018 8:30 PM GMT (Updated: 15 April 2018 6:36 PM GMT)

ஐ.பி.எல். கிரிக்கெட்டில் நேற்று முன்தினம் இரவு கொல்கத்தா ஈடன்கார்டனில் நடந்த லீக் ஆட்டத்தில் ஐதராபாத் சன்ரைசர்ஸ் அணி 5 விக்கெட் வித்தியாசத்தில் கொல்கத்தா நைட் ரைடர்சை வீழ்த்தியது.

கொல்கத்தா, 

ஐ.பி.எல். கிரிக்கெட்டில் நேற்று முன்தினம் இரவு கொல்கத்தா ஈடன்கார்டனில் நடந்த லீக் ஆட்டத்தில் ஐதராபாத் சன்ரைசர்ஸ் அணி 5 விக்கெட் வித்தியாசத்தில் கொல்கத்தா நைட் ரைடர்சை வீழ்த்தியது. இதில் முதலில் பேட் செய்த கொல்கத்தா அணி 8 விக்கெட்டுக்கு 138 ரன்களுக்கு கட்டுப்படுத்தப்பட்டது. இந்த இலக்கை ஐதராபாத் அணி கேப்டன் வில்லியம்சனின் (50 ரன்) அரைசதத்தின் உதவியுடன் 19 ஓவர்களில் எட்டிப்பிடித்தது. கொல்கத்தா மைதானத்தில் ஐதராபாத் சன்ரைசர்சின் முதல் வெற்றி (இதற்கு முன்பு 5 ஆட்டங்களில் தோல்வி) இது தான்.

பின்னர் ஐதராபாத் கேப்டன் வில்லியம்சன் கூறுகையில், ‘தொடர்ச்சியாக 3 ஆட்டங்களில் வெற்றி பெற்றிருப்பது மகிழ்ச்சி அளிக்கிறது. இந்த ஆட்டத்தில் குறிப்பிட்டு சொல்ல வேண்டிய வி‌ஷயம் எங்களது பீல்டிங்கை தான். இதே போல் பந்து வீச்சும் அற்புதமாக இருந்தது’ என்றார்.

கொல்கத்தா கேப்டன் தினேஷ் கார்த்திக் கூறுகையில், ‘160 முதல் 170 ரன்கள் வரை எடுத்திருந்தால் பாதுகாப்பான ஸ்கோராக இருந்திருக்கும். இந்த ஆட்டத்தில் ஐதராபாத் வேகப்பந்து வீச்சாளர்கள் ‘நக்கில்’ வகை பந்து வீச்சில் (விரல்களை மடக்கிய நிலையில் பந்தை பிடித்து வீசுவது) கலக்கினர். இந்த மாதிரி பந்து வீசுவதை எங்களது பவுலர்கள் அவர்களிடம் இருந்து கற்றுக்கொள்ளலாம்’ என்றார்.


Next Story