கிரிக்கெட்

கிரிக்கெட்டில் இப்போது எந்த இலக்கையும் சேசிங் செய்து விடலாம் - கொல்கத்தா வீரர் உத்தப்பா + "||" + You can now chase any target in cricket - Kolkata Playar Uthappa

கிரிக்கெட்டில் இப்போது எந்த இலக்கையும் சேசிங் செய்து விடலாம் - கொல்கத்தா வீரர் உத்தப்பா

கிரிக்கெட்டில் இப்போது எந்த இலக்கையும் சேசிங் செய்து விடலாம் - கொல்கத்தா வீரர் உத்தப்பா
கிரிக்கெட்டில் இப்போது எந்த இலக்கையும் சேசிங் செய்து விடலாம் என கொல்கத்தா வீரர் உத்தப்பா தெரிவித்தார்.
ஜெய்ப்பூர்,

கிரிக்கெட்டில் இப்போது எந்த இலக்கையும் சேசிங் செய்து விடும் சூழல் உருவாகி இருப்பதாக கொல்கத்தா வீரர் உத்தப்பா கூறியுள்ளார்.

ஐ.பி.எல். கிரிக்கெட்டில் நேற்று முன்தினம் இரவு ஜெய்ப்பூரில் நடந்த லீக் ஆட்டத்தில் கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணி 7 விக்கெட் வித்தியாசத்தில் ராஜஸ்தான் ராயல்சை எளிதில் வீழ்த்தியது. இதில் ராஜஸ்தான் நிர்ணயித்த 161 ரன்கள் இலக்கை கொல்கத்தா அணி சுனில் நரின் (35 ரன்), ராபின் உத்தப்பா (48 ரன்), நிதிஷ் ராணா (35 ரன், நாட்-அவுட்), கேப்டன் தினேஷ் கார்த்திக் (42 ரன், நாட்-அவுட்) ஆகியோரின் சிறப்பான ஆட்டத்தால் 18.5 ஓவர்களில் எட்டிப்பிடித்தது. ஆல்-ரவுண்டராக ஜொலித்த நிதிஷ் ராணா (2 விக்கெட்டும் வீழ்த்தியிருந்தார்) ஆட்டநாயகன் விருதை பெற்றார்.


3-வது வெற்றியை ருசித்த பின்னர் கொல்கத்தா வீரர் ராபின் உத்தப்பா நிருபர்களிடம் கூறுகையில், ‘கிரிக்கெட் விளையாட்டு நிறைய மாற்றம் அடைந்து இருக்கிறது. இப்போது எந்த ஸ்கோரையும் விரட்டிப்பிடித்து விடலாம் (சேசிங்) என்றே தோன்றுகிறது. இது ஒரு ஆற்றல் மிக்க (பவர்கேம்) விளையாட்டாக உருவெடுத்துவிட்டதால் 20 ஓவர் கிரிக்கெட்டை பொறுத்தவரை ‘சேசிங்’ செய்வதே சிறந்த தேர்வாக இருக்கும்.

இந்த சீசனில் 5 ஆட்டங்களில் 3-ல் வெற்றி பெற்று நல்ல நிலையில் இருப்பது மகிழ்ச்சி அளிக்கிறது. சரியான நேரத்தில் உச்சத்திற்கு வருவது முக்கியமான ஒன்றாகும். ‘பிளே-ஆப்’ சுற்றுக்கு தகுதி பெறுவது தான் முதல் குறிக்கோள். அதற்கு தொடர்ந்து உத்வேகத்துடன் இருப்பது அவசியமாகும்.

உள்ளூர் போட்டிகளில் நான் போதிய ரன்கள் எடுக்கவில்லை. ஆனாலும் பந்தை அடித்து ஆடும் விதத்தில் நன்றாக இருப்பதாகவே எப்போதும் நினைப்பேன். இப்போதும் அப்படி தான் உணர்கிறேன். ஒவ்வொரு ஆட்டத்திலும் ஆட்டத்திறனை மேம்படுத்த வேண்டும்’ என்றார்.

கொல்கத்தா அணியின் முந்தைய கேப்டன் கவுதம் கம்பீரையும், தற்போதைய கேப்டன் தினேஷ் கார்த்திக்கையும் ஒப்பிட்டு கேட்டதற்கு பதில் அளித்த உத்தப்பா, ‘இருவரும் வெவ்வேறு விதமான ஆளுமை திறன் உடையவர்கள். தினேஷ் கார்த்திக் பதற்றமின்றி பொறுமையாக செயல்படுவார். நிறைய சிந்திப்பார். வீரர்கள் தங்களது இயற்கையான ஆட்டத்தை வெளிப்படுத்த வேண்டும் என்று அறிவுறுத்துவார். அதே சமயம் கம்பீர் செயல்திறன் மிக்க ஒரு கேப்டன் ஆவார்’ என்றார்.

இந்த ஆட்டத்தில் 36 ரன்கள் எடுத்த ராஜஸ்தான் கேப்டன் ரஹானே கூறுகையில், ‘டெல்லிக்கு எதிரான ஆட்டத்தின் போதும் இந்த மைதானத்தில் விளையாடினோம். ஆனால் அந்த ஆட்டத்திற்கு பயன்படுத்திய ஆடுகளத்திற்கும், இந்த போட்டிக்கான ஆடுகளத்திற்கும் நிறைய வித்தியாசம் இருந்தது. ஆடுகளத்தன்மை மெதுவாக காணப்பட்டது. நான் பொறுப்புடன் விளையாடி அணியை முன்னெடுத்து சென்றிருக்க வேண்டும். 14-15 ஓவர்கள் வரை நிலைத்து நின்று ஆட வேண்டும் என்று விரும்பினேன். அதற்குள் ஆட்டம் இழந்து விட்டேன். 175 முதல் 180 ரன்கள் எடுத்திருந்தால் சவாலான ஸ்கோராக இருந்திருக்கும்’ என்றார்.

ஆசிரியரின் தேர்வுகள்...