கிரிக்கெட்

‘பேட்டிங்கில் சரியாக செயல்படாததால் தோல்வி கண்டோம்’ ரோகித் சர்மா கருத்து + "||" + Batting Because it does not work properly Roghit Sharma commented on the defeat

‘பேட்டிங்கில் சரியாக செயல்படாததால் தோல்வி கண்டோம்’ ரோகித் சர்மா கருத்து

‘பேட்டிங்கில் சரியாக செயல்படாததால் தோல்வி கண்டோம்’ ரோகித் சர்மா கருத்து
‘ராஜஸ்தான் அணிக்கு எதிரான ஆட்டத்தில் கண்ட தோல்விக்கு பேட்டிங்கில் சரியாக செயல்படாததே காரணம்’ என்று மும்பை அணியின் கேப்டன் ரோகித் சர்மா தெரிவித்தார்.
ஜெய்ப்பூர்,

ஐ.பி.எல். 20 ஓவர் கிரிக்கெட் போட்டி தொடரில் ஜெய்ப்பூரில் நேற்று முன்தினம் இரவு நடந்த 21-வது லீக் ஆட்டத்தில் ரஹானே தலைமையிலான ராஜஸ்தான் ராயல்ஸ் அணி 3 விக்கெட் வித்தியாசத்தில் ரோகித் சர்மா தலைமையிலான மும்பை இந்தியன்ஸ் அணியை வீழ்த்தி 3-வது வெற்றியை ருசித்தது. 5-வது ஆட்டத்தில் ஆடிய மும்பை அணி சந்தித்த 4-வது தோல்வி இதுவாகும்.


முதலில் பேட்டிங் செய்த மும்பை அணி நிர்ணயிக்கப்பட்ட 20 ஓவர்களில் 7 விக்கெட் இழப்புக்கு 167 ரன்கள் எடுத்தது. அதிகபட்சமாக சூர்யகுமார் யாதவ் 72 ரன்னும், இஷான் கிஷன் 58 ரன்னும், பொல்லார்ட் 21 ரன்னும் எடுத்தனர். மற்ற வீரர்கள் ஒற்றை இலக்க ரன்னில் ஆட்டம் இழந்தனர். ராஜஸ்தான் அணி தரப்பில் ஜோப்ரா ஆர்ச்சர் 3 விக்கெட்டும், தவால் குல்கர்னி 2 விக்கெட்டும், ஜெய்தேவ் உனட்கட் ஒரு விக்கெட்டும் கைப்பற்றினார்கள்.

பின்னர் ஆடிய ராஜஸ்தான் அணி 19.4 ஓவர்களில் 7 விக்கெட் இழப்புக்கு 168 ரன்கள் எடுத்து வெற்றி இலக்கை எட்டியது. அதிகபட்சமாக சஞ்சு சாம்சன் 52 ரன்னும், பென் ஸ்டோக்ஸ் 40 ரன்னும், கிருஷ்ணப்பா கவுதம் ஆட்டம் இழக்காமல் 33 ரன்னும் (11 பந்துகளில் 4 பவுண்டரி, 2 சிக்சருடன்) எடுத்தனர். மும்பை அணி தரப்பில் ஜஸ்பிரித் பும்ரா, ஹர்திக் பாண்ட்யா தலா 2 விக்கெட்டும், மெக்லெனஹான், குணால் பாண்ட்யா, முஸ்தாபிஜூர் ரகுமான் தலா ஒரு விக்கெட்டும் வீழ்த்தினார்கள். ஒரே ஓவரில் 3 விக்கெட்டுகள் சாய்த்த ராஜஸ்தான் அணியின் அறிமுக வீரர் ஜோப்ரா ஆர்ச்சர் ஆட்டநாயகன் விருது பெற்றார்.

தோல்வி குறித்து மும்பை அணி கேப்டன் ரோகித் சர்மா கருத்து தெரிவிக்கையில், ‘கடைசி வரை வெற்றி வாய்ப்பில் இருந்து சந்தித்த இந்த தோல்வியை ஜீரணிப்பது கடினம். ஆனால் எதிரணியினரின் சிறப்பான செயல்பாடு பாராட்டுக்குரியது. இந்த பிட்ச்சில் ஒரு ஓவரில் 10 ரன்கள் எடுப்பது என்பது எளிதான காரியம் அல்ல. 180 முதல் 190 வரை ரன்கள் எடுக்காமல் போனது எங்களுக்கு பாதிப்பை ஏற்படுத்தியது. எங்களுக்கு கிடைத்த அருமையான தொடக்கத்தை நாங்கள் சரியாக பயன்படுத்தி கொள்ளவில்லை. 2 அல்லது 3 முறை இதேபோல் செய்து விட்டோம். இந்த பிரச்சினைக்கு நாங்கள் தீர்வு கண்டு முன்னேற வேண்டும். எதிரணியினரின் பந்து வீச்சு சிறப்பாக இருந்தது. எங்கள் அணியின் பந்து வீச்சை குறை சொல்ல முடியாது. நாங்கள் பேட்டிங்கில் சரியாக செயல்படாதது தோல்விக்கு காரணம். மேலும் 20 ரன்கள் எடுத்து இருந்தால் ஜெயித்து இருப்போம்’ என்றார்.

ஆசிரியரின் தேர்வுகள்...