ஒரு நாள் போட்டியில் அதிக சதங்கள் எடுத்துள்ள எனது சாதனையை கோலி முறியடித்தால் சாம்பைன் பாட்டில் கொடுத்து கொண்டாடுவேன்


ஒரு நாள் போட்டியில் அதிக சதங்கள் எடுத்துள்ள எனது சாதனையை கோலி முறியடித்தால் சாம்பைன் பாட்டில் கொடுத்து கொண்டாடுவேன்
x
தினத்தந்தி 24 April 2018 9:30 PM GMT (Updated: 24 April 2018 8:46 PM GMT)

இந்திய கிரிக்கெட்டின் ஜாம்பவான் சச்சின் தெண்டுல்கர் நேற்று தனது 45–வது பிறந்த நாளை குடும்பத்தினருடன் உற்சாகமாக கொண்டாடினார்.

மும்பை, 

இந்திய கிரிக்கெட்டின் ஜாம்பவான் சச்சின் தெண்டுல்கர் நேற்று தனது 45–வது பிறந்த நாளை குடும்பத்தினருடன் உற்சாகமாக கொண்டாடினார். சர்வதேச கிரிக்கெட் அரங்கில் 100 சதங்கள் அடித்த ஒரே வீரரான தெண்டுல்கருக்கு இன்னாள், முன்னாள் வீரர்கள் மற்றும் ரசிகர்கள் சமூக வலைதளம் மூலம் வாழ்த்து தெரிவித்தனர்.

மும்பை போலீசார் வித்தியாசமான வாழ்த்து செய்தியை வெளியிட்டுள்ளனர். தெண்டுல்கர் ஹெல்மெட்டுடன் இருப்பது போன்ற 3 படங்களை வெளியிட்டு, கிரிக்கெட்டின் கடவுளால் 1989–ல் இருந்து அணியப்பட்டது. ஹெல்மெட் அணிந்து லிட்டில் மாஸ்டர் பல சாதனைகளை படைத்துள்ளார். அவரின் வழியை நீங்களும் பின்பற்றலாமே என்று அதில் கூறியுள்ளனர். அவருடன் தொடக்க ஆட்டக்காரராக இணைந்து ஆடிய முன்னாள் வீரர் ஷேவாக், ‘தெண்டுல்கர் ஒரு கிரிக்கெட் வீரர் மட்டுமல்ல; அவர் என்னுடைய உலகம்’ என்று புகழாரம் சூட்டியுள்ளார்.

இதற்கிடையே தெண்டுல்கர் நேற்று முன்தினம் புத்தகம் வெளியீட்டு விழாவில் கலந்து கொண்டு சில ருசிகர வி‌ஷயங்களை பேசினார். ஒரு நாள் போட்டியில் தெண்டுல்கர் 49 சதங்கள் அடித்து முதலிடத்தில் உள்ளார். இந்திய கேப்டன் விராட் கோலி 35 சதங்களுடன் 2–வது இடம் வகிக்கிறார். இந்த சாதனையை விராட் கோலி தகர்த்தால் அதை பாராட்டும் வகையில் அவருக்கு 50 சாம்பைன் பாட்டில்களை (உற்சாக பானம்) பரிசாக அளிப்பீர்களா? என்று கேள்வி எழுப்பப்பட்டது. அதற்கு பதில் அளித்த தெண்டுல்கர், ‘விராட் கோலி 50–வது சதம் அடித்து எனது சாதனையை முறியடித்தால், அவருக்கு 50 சாம்பைன் பாட்டில்கள் எல்லாம் அனுப்பமாட்டேன். நானே ஒரு சாம்பைன் பாட்டில் வாங்கி அதை அவரை தேடி சென்று கொடுத்து மகிழ்ச்சியை பகிர்ந்து கொள்வேன்’ என்றார்.

தனது 200–வது மற்றும் கடைசி டெஸ்ட் போட்டியை மும்பையில் (2013–ம் ஆண்டு) நடத்த விரும்பியது ஏன் என்பதையும் தெண்டுல்கர் வெளியிட்டார். ‘பள்ளி அளவில் கிரிக்கெட் விளையாடத் தொடங்கியதில் இருந்து இந்திய அணிக்காக 24 ஆண்டுகள் விளையாடியது வரை ஒரு நாள் கூட எனது தாயார் எனது ஆட்டத்தை நேரில் பார்த்ததில்லை. நான் கடைசியாக விளையாடி ஓய்வு பெறும் ஆட்டத்தையாவது எனது தாயார் நேரில் பார்க்க வேண்டும் என்று ஆசைப்பட்டேன். எனது விருப்பத்தை இந்திய கிரிக்கெட் வாரியமும் ஏற்றுக்கொண்டது. நான் பேட்டிங் செய்த போது, எனது அம்மாவை மெகாதிரையில் காட்டினர். அதை பார்த்ததும் உணர்ச்சி வசப்பட்டேன். விலை மதிக்க முடியாத தருணம் அது. அதன் பிறகு ஒவ்வொரு பந்தையும் எதிர்கொள்வதே கடினமாக தோன்றியது. இருப்பினும் எனது உணர்ச்சிகளையும், அழுகையையும் கட்டுப்படுத்திக்கொண்டு பேட் செய்தேன். எனது வாழ்க்கையில் இதற்கு முன்பு கண்டிராத ஒரு அனுபவம் அது’ என்றார்.


Next Story