ஐ.பி.எல். சாம்பியன் பட்டத்தை வெல்லப்போவது யார்? சென்னை–ஐதராபாத் அணிகள் இறுதிப்போட்டியில் இன்று மோதல்


ஐ.பி.எல். சாம்பியன் பட்டத்தை வெல்லப்போவது யார்? சென்னை–ஐதராபாத் அணிகள் இறுதிப்போட்டியில் இன்று மோதல்
x
தினத்தந்தி 26 May 2018 10:00 PM GMT (Updated: 26 May 2018 8:57 PM GMT)

ஐ.பி.எல். கிரிக்கெட்டில் இன்று (ஞாயிற்றுக்கிழமை) இரவு 7 மணிக்கு ‘கிளைமாக்ஸ்’ அரங்கேறுகிறது.

மும்பை, 

ஐ.பி.எல். கிரிக்கெட்டில் இன்று (ஞாயிற்றுக்கிழமை) இரவு 7 மணிக்கு ‘கிளைமாக்ஸ்’ அரங்கேறுகிறது. சாம்பியன் பட்டத்துக்கான இறுதி ஆட்டத்தில் சென்னை, ஐதராபாத் அணிகள் மும்பையில் சந்திக்கின்றன.

ஐ.பி.எல். இறுதிப்போட்டி

11–வது ஐ.பி.எல். கிரிக்கெட் போட்டி கடந்த மாதம் 7–ந்தேதி தொடங்கியது. 8 அணிகள் பங்கேற்ற இந்த 20 ஓவர் கிரிக்கெட் திருவிழாவில் லீக் மற்றும் ‘பிளே–ஆப்’ சுற்று முடிவில் முன்னாள் சாம்பியன்கள் சென்னை சூப்பர் கிங்சும், ஐதராபாத் சன்ரைசர்சும் இறுதிசுற்றை எட்டின.

இந்த நிலையில் மும்பை வான்கடே ஸ்டேடியத்தில் இன்று இரவு நடக்கும் மகுடம் யாருக்கு? என்பதை நிர்ணயிக்கும் இறுதிஆட்டத்தில் சென்னை சூப்பர் கிங்ஸ் –ஐதராபாத் சன்ரைசர்ஸ் அணிகள் கோதாவில் இறங்குகின்றன.

சென்னை அணி

டோனி தலைமையிலான சென்னை சூப்பர் கிங்ஸ் அணி ஏற்கனவே 2010, 2011–ம் ஆண்டுகளில் ஐ.பி.எல். பட்டத்தை ருசித்து இருக்கிறது. இரண்டு ஆண்டு கால தடை காலத்திற்கு பிறகு மறுபிரவேசம் செய்திருக்கும் சென்னை அணி, மீண்டும் தங்கள் பலத்தை நிரூபித்து நீண்ட கால ஏக்கத்தை தணிக்க வேண்டும் என்பதில் தீவிரம் காட்டுகிறது.

இந்த சீசனில் சென்னை அணியின் பந்து வீச்சு பெரிய அளவில் இல்லாவிட்டாலும், பேட்டிங்கில் அசத்தி வருகிறது. அம்பத்தி ராயுடு (586 ரன்), கேப்டன் டோனி (455 ரன்), வாட்சன் (438 ரன்), ரெய்னா (413 ரன்) உள்ளிட்டோர் நல்ல பார்மில் உள்ளனர். முந்தைய ஆட்டத்தில் பாப் டு பிளிஸ்சிஸ் அரைசதம் விளாசி தோல்வியின் விளிம்பில் இருந்து சென்னை அணியை காப்பாற்றினார். சென்னை அணியை பொறுத்தவரை குறிப்பிட்ட வீரரை நம்பி இருக்கவில்லை. இதுவரை 8 வீரர்கள் ஆட்டநாயகன் விருது பெற்றிருப்பதே அதற்கு சான்று. பந்து வீச்சில் நிகிடி, தீபக் சாஹர், ஜடேஜா, ‌ஷர்துல் தாகூர் ஓரளவு நம்பிக்கை தருகிறார்கள்.

ஏற்கனவே ஐதராபாத் அணியை லீக் சுற்றில் இரண்டு முறையும், இறுதிப்போட்டிக்கான தகுதி சுற்றிலும் புரட்டியெடுத்து இருப்பதால் சென்னை அணி மிகுந்த நம்பிக்கையுடன் களம் இறங்கும் என்பதில் சந்தேகமில்லை.

ஐதராபாத் அணி

2016–ம் ஆண்டு சாம்பியனான ஐதராபாத் சன்ரைசர்ஸ் அணி லீக் சுற்று நிறைவில் புள்ளி பட்டியலில் முதலிடத்தை பிடித்தது. கடைசி கட்டத்தில் தொடர்ச்சியாக 4 ஆட்டங்களில் தோற்றாலும் 2–வது தகுதி சுற்றில் ஒரு வழியாக கொல்கத்தாவை வீழ்த்தி இறுதிப்போட்டிக்கு வந்து விட்டது.

பேட்டிங்கில் கேப்டன் வில்லியம்சனும் (688 ரன்), ஷிகர் தவானும் (471 ரன்) அந்த அணிக்கு தூண்களாக விளங்குகிறார்கள். ஆனால் ஐதராபாத்தை பொறுத்தவரை பந்துவீச்சே பிரதான பலம் என்பதை மறுப்பதற்கில்லை.

சுழலில் மிரட்டும் ரஷித்கான்

குறிப்பாக 20 ஓவர் கிரிக்கெட்டின் ‘நம்பர் ஒன்’ பவுலரான சுழற்பந்து வீச்சாளர் ரஷித்கான் தான் அவர்களின் ‘துருப்புசீட்டு’ ஆவார். அவரது சுழல்ஜாலத்தை கண்டாலே எதிரணியினர் நடுங்கி விடுகிறார்கள். இதுவரை 21 விக்கெட்டுகளை சாய்த்துள்ள அவர் ஓவருக்கு சராசரியாக 6.78 ரன்கள் மட்டுமே விட்டுக்கொடுத்துள்ளார். 4 முறை ஆட்டநாயகன் விருது பெற்றுள்ளார். இவரது பந்து வீச்சு தான் சென்னை அணிக்கு கடுமையான சவாலாக இருக்கும்.

இந்த சீசனில் ஐதராபாத் வீழ்த்தாத ஒரே அணி சென்னை சூப்பர் கிங்ஸ் தான். அதற்கு இறுதிப்போட்டியில் வட்டியும் முதலுமாக பதிலடி கொடுக்க வரிந்து கட்டி நிற்பார்கள். மொத்தத்தில் வலுவான இரு அணிகள் மல்லுகட்டுவதால் சுவாரஸ்யத்திற்கு பஞ்சமிருக்காது. நெருக்கடியை எந்த அணி திறம்பட சமாளிக்கிறதோ அவர்களுக்கே வெற்றி வாய்ப்பு அதிகமாகும்.

மைதானம் எப்படி?

மும்பை வான்கடே ஆடுகளத்தை நடப்பு தொடரில் கணிப்பது கடினமாக இருக்கிறது. இங்கு ஒரு ஆட்டத்தில் மும்பை அணி, பெங்களூருக்கு எதிராக 213 ரன்கள் குவித்தது. ஆனால் அதே ஆடுகளத்தில் மும்பை அணி ஐதராபாத்துக்கு எதிராக 87 ரன்னிலும் சுருண்டது.

இங்கு இந்த சீசனில் நடந்துள்ள 8 ஆட்டங்களில் முதலில் பேட் செய்த அணி 4 முறையும், 2–வது பேட் செய்த அணி 4 முறையும் வெற்றி பெற்று இருக்கிறது. பவுண்டரி தூரம் குறைவு, இரவில் பனிப்பொழிவின் தாக்கம் இவற்றை கருத்தில் கொண்டு ‘டாஸ்’ ஜெயிக்கும் அணி 2–வது பேட் செய்யவே அதிக வாய்ப்புள்ளது.

வீரர்கள் விவரம்

போட்டிக்கான இரு அணிகளின் உத்தேச பட்டியல்:–

சென்னை: ஷேன் வாட்சன், பாப் டு பிளிஸ்சிஸ், சுரேஷ் ரெய்னா, அம்பத்தி ராயுடு, டோனி (கேப்டன்), வெய்ன் பிராவோ, ரவீந்திர ஜடேஜா, தீபக் சாஹர், ஹர்பஜன்சிங், ‌ஷர்துல் தாகூர், நிகிடி.

ஐதராபாத்: ஷிகர் தவான், விருத்திமான் சஹா, வில்லியம்சன் (கேப்டன்), தீபக் ஹூடா அல்லது மனிஷ் பாண்டே, ‌ஷகிப் அல்–ஹசன், யூசுப் பதான், கார்லஸ் பிராத்வெய்ட், புவனேஷ்வர்குமார், ரஷித்கான், சித்தார்த் கவுல், சந்தீப் ‌ஷர்மா அல்லது கலீல் அகமது.

இரவு 7 மணிக்கு தொடங்கும் இந்த போட்டியை ஸ்டார் ஸ்போர்ட்ஸ் சேனல்கள் நேரடி ஒளிபரப்பு செய்கின்றன.

இறுதிப்போட்டிக்குள் நுழைந்த விதம்

சென்னை சூப்பர் கிங்ஸ்

லீக் சுற்று

மும்பையுடன் ஒரு விக்கெட்டில் வெற்றி

கொல்கத்தாவுடன் 5 விக்கெட்டில் வெற்றி

பஞ்சாப்புடன் 4 ரன்னில் தோல்வி

ராஜஸ்தானுடன் 64 ரன்னில் வெற்றி

ஐதராபாத்துடன் 4 ரன்னில் வெற்றி

பெங்களூருவுடன் 5 விக்கெட்டில் வெற்றி

மும்பையுடன் 8 விக்கெட்டில் தோல்வி

டெல்லியுடன் 13 ரன்னில் வெற்றி

கொல்கத்தாவுடன் 6 விக்கெட்டில் தோல்வி

பெங்களூருவுடன் 6 விக்கெட்டில் வெற்றி

ராஜஸ்தானுடன் 4 விக்கெட்டில் தோல்வி

ஐதராபாத்துடன் 8 விக்கெட்டில் வெற்றி

டெல்லியிடம் 34 ரன்னில் தோல்வி

பஞ்சாப்புடன் 5 விக்கெட்டில் வெற்றி

பிளே–ஆப் சுற்று

ஐதராபாத்துடன் 2 விக்கெட்டில் வெற்றி

ஐதராபாத் சன்ரைசர்ஸ்

லீக் சுற்று

ராஜஸ்தானுடன் 9 விக்கெட்டில் வெற்றி

மும்பையுடன் ஒரு விக்கெட்டில் வெற்றி

கொல்கத்தாவுடன் 5 விக்கெட்டில் வெற்றி

பஞ்சாப்புடன் 15 ரன்னில் தோல்வி

சென்னையுடன் 4 ரன்னில் தோல்வி

மும்பையுடன் 31 ரன்னில் வெற்றி

பஞ்சாப்புடன் 13 ரன்னில் வெற்றி

ராஜஸ்தானுடன் 11 ரன்னில் வெற்றி

டெல்லியுடன் 7 விக்கெட்டில் வெற்றி

பெங்களூருவுடன் 5 ரன்னில் வெற்றி

டெல்லியுடன் 9 விக்கெட்டில் வெற்றி

சென்னையுடன் 8 விக்கெட்டில் தோல்வி

பெங்களூருவுடன் 14 ரன்னில் தோல்வி

கொல்கத்தாவுடன் 5 விக்கெட்டில் தோல்வி

பிளே–ஆப் சுற்று

சென்னையுடன் 2 விக்கெட்டில் தோல்வி

கொல்கத்தாவுடன் 14 ரன்னில் வெற்றி

பட்டம் வெல்லும் அணிக்கு ரூ.20 கோடி பரிசு

ஐ.பி.எல். இறுதி ஆட்டத்தில் வெற்றி பெறும் அணிக்கு சாம்பியன் கோப்பையுடன் ரூ.20 கோடி பரிசுத்தொகை வழங்கப்படும். தோல்வி அடைந்து 2–வது இடத்தை பிடிக்கும் அணிக்கு ரூ.12½ கோடி கிடைக்கும். இதே போல் ஆரஞ்சு நிற தொப்பியை தக்கவைக்கும் பேட்ஸ்மேனுக்கு ரூ.10 லட்சமும், ஊதா நிற தொப்பியை கைப்பற்றும் பவுலருக்கு ரூ.10 லட்சமும் கொடுக்கப்படும்.

சென்னை வென்றால்....

ஐ.பி.எல். கோப்பையை அதிகபட்சமாக மூன்று முறை வென்ற மும்பை இந்தியன்சின் சாதனையை சென்னை அணி சமன் செய்யும்.

ஐதராபாத் வென்றால்....

ஐ.பி.எல். மகுடத்தை வெளிநாட்டு கேப்டன் மூலம் இரண்டு முறை வசப்படுத்திய முதல் அணி என்ற பெருமை ஐதராபாத் அணிக்கு கிடைக்கும்.


Next Story