கிரிக்கெட்

சிறப்பாக செயல்பட்டு கோப்பையை வென்றோம்: சென்னை அணி கேப்டன் டோனி + "||" + We won the trophy: Chennai team captain Dhoni

சிறப்பாக செயல்பட்டு கோப்பையை வென்றோம்: சென்னை அணி கேப்டன் டோனி

சிறப்பாக செயல்பட்டு கோப்பையை வென்றோம்: சென்னை அணி கேப்டன் டோனி
சிறப்பாக செயல்பட்டு கோப்பையை வென்றோம் என சென்னை அணி கேப்டன் டோனி தெரிவித்தார்.
மும்பை,

‘சிறப்பாக செயல்பட்டு கோப்பையை வென்றோம். வயதை விட உடல் தகுதியே முக்கியம்’ என்று சென்னை அணியின் கேப்டன் டோனி தெரிவித்தார்.

11-வது ஐ.பி.எல். 20 ஓவர் கிரிக்கெட் போட்டி தொடரில் மும்பை வான்கடே ஸ்டேடியத்தில் நேற்று முன்தினம் இரவு நடந்த இறுதிப்போட்டியில் சென்னை சூப்பர் கிங்ஸ் அணி 8 விக்கெட் வித்தியாசத்தில் ஐதராபாத் சன் ரைசர்ஸ் அணியை வீழ்த்தி 3-வது முறையாக கோப்பையை உச்சி முகர்ந்தது.


முதலில் பேட்டிங் செய்த ஐதராபாத் அணி 20 ஓவர்களில் 6 விக்கெட் இழப்புக்கு 178 ரன்கள் எடுத்தது. அதிகபட்சமாக கேப்டன் கனே வில்லியம்சன் 47 ரன்னும், யூசுப் பதான் ஆட்டம் இழக்காமல் 45 ரன்னும் சேர்த்தனர். பின்னர் இலக்கை நோக்கி ஆடிய சென்னை அணி 18.3 ஓவர்களில் 2 விக்கெட் இழப்புக்கு 181 ரன்கள் எடுத்து அபார வெற்றியை ருசித்தது. தொடக்க ஆட்டக்காரர் ஷேன் வாட்சன் 57 பந்துகளில் 11 பவுண்டரி, 8 சிக்சருடன் 117 ரன்கள் குவித்து ஆட்டம் இழக்காமல் அணியை வெற்றிக்கு அழைத்து சென்றதுடன், ஆட்டநாயகன் விருதையும் தட்டிச் சென்றார். சென்னை அணி வெற்றி பெற்றதும் வீரர்கள் மட்டுமின்றி, அணியின் ரசிகர்களும் கொண்டாட்டத்தில் ஈடுபட்டனர்.

வெற்றிக்கு பிறகு சென்னை அணியின் கேப்டன் டோனி அளித்த பேட்டியில் கூறியதாவது:-

இறுதிப்போட்டியை எட்டும் போது அணியின் அனைத்து வீரர்களும் தங்கள் பொறுப்பை அறிந்து இருப்பார்கள். பீல்டிங் செய்கையிலும், பேட்டிங்கின் போதும் திட்டத்துக்கு தகுந்தபடி தங்களை மாற்றி கொண்டு செயல்பட வேண்டியது முக்கியமானதாகும். எதிரணியில் ரஷித் கான், புவனேஷ்வர்குமார் போன்ற சிறந்த பவுலர்கள் இருந்தனர். இருப்பினும் எங்களது பேட்டிங் அருமையாக இருந்தது. மிடில் ஆர்டரில் எங்களிடம் வலுவான பேட்ஸ்மேன்கள் உள்ளனர். அவர்கள் மீது நல்ல நம்பிக்கை இருந்தது. டுபிளிஸ்சிஸ்சை தொடக்க வீரராகவும், அம்பத்தி ராயுடுவை பின் வரிசையிலும் இறக்கியதில் எந்த திட்டமும் இல்லை. இதற்கு முந்தைய கோப்பையை வென்ற போது நடந்த சம்பவங்களை நினைவுக்கு கொண்டு வருவது கடினமானதாகும். நிறைய மக்கள் புள்ளி விவரங்கள் குறித்து பேசுகிறார்கள். இறுதிப்போட்டி தேதி 27, எனது பனியன் நம்பர் 7, எங்களுக்கு இது 7-வது இறுதிப்போட்டி என்று பட்டியலிடுகிறார்கள். இந்த புள்ளி விவரங்கள் எல்லாம் ஒரு பொருட்டல்ல. நாங்கள் கோப்பையை வெல்ல போதுமான காரணம் இருக்கிறது. நாங்கள் சிறப்பாக செயல்பட்டு கோப்பையை வென்றுள்ளோம்.

எங்கள் அணி வீரர்களின் வயது பற்றி அதிகம் பேசுகிறார்கள். ஆனால் வயது ஒரு பிரச்சினை கிடையாது. உடல் தகுதி தான் முக்கியம். உதாரணத்துக்கு அம்பத்தி ராயுடுவை எடுத்து கொள்வோம். 33 வயதான அவர் பீல்டிங்கில் எந்தவித புகாருக்கும் இடம் அளிக்காமல் வேகமாக செயல்பட்டு வருகிறார். வீரர்கள் களத்தில் வேகமாக செயல்பட வேண்டும் என்பது தான் ஒரு கேப்டனுக்கு தேவையானதாகும். முடிந்த அளவுக்கு தான் வீரர்களுக்கு பீல்டிங் பணியை கொடுக்க வேண்டும். இல்லாவிட்டால் காயம் ஏற்பட்டு அடுத்த ஆட்டத்தில் ஆட முடியாத நிலை ஏற்படலாம். இவ்வாறு அவர் கூறினார்.

தோல்வி குறித்து ஐதராபாத் அணியின் கேப்டன் கனே வில்லியம்சன் கருத்து தெரிவிக்கையில், ‘இது சவாலான ரன் இலக்கு என்று எண்ணினோம். ஷேன் வாட்சனின் ஆட்டம் அபாரமாக இருந்தது. இந்த வெற்றிக்கு சென்னை அணி தகுதியானது. சென்னை அணியினர் அவர்களது அனுபவத்தை ஆட்டத்தில் வெளிப்படுத்தினார்கள். ஐதராபாத் அணியில் இளம் வீரர்கள் சிறப்பாக செயல்பட்டனர். இந்த அணியை வழிநடத்தியது சிறப்பான அனுபவமாகும். இறுதிப்போட்டியில் வெல்லாமல் போனதை அவமானமாக கருதுகிறேன். எங்கள் அணியில் சிறந்த பவுலர்கள் இடம் பிடித்து இருந்தனர். இருப்பினும் ஒரு சில துறைகளில் நாங்கள் சமாளிக்க தான் வேண்டியது இருந்தது. அணிக்காக பேட்டிங்கில் சிறந்த பங்களிப்பை அளித்தது மகிழ்ச்சி அளிக்கிறது’ என்றார்.

ஆட்டநாயகன் விருது பெற்ற சென்னை அணியின் ஆல்-ரவுண்டர் ஷேன் வாட்சன் அளித்த பேட்டியில், ‘இந்த ஐ.பி.எல். சீசன் எனக்கு மிக வும் சிறப்பாக அமைந்தது. சென்னை சூப்பர் கிங்ஸ் போன்ற அணியில் இடம் பிடிப்பது மிகப்பெரிய விஷயம். முதல் 10 பந்துகளை எதிர்கொண்ட விதத்தை பார்க்கையில் அதன் பிறகு ஒரு பந்துக்கு ஒரு ரன் தான் எடுக்க முடியுமோ? என்று நினைத்தேன். புவனேஷ்வர்குமார் புதிய பந்தில் அருமையாக வீசினார். போகப்போக அடித்து ஆட முடிந்தது மகிழ்ச்சி அளிக்கிறது. பயிற்சியாளர் பிளமிங், கேப்டன் டோனி ஆகியோர் என்னை நன்றாக கவனித்து கொண்டனர். அணிக்கு நல்ல பங்களிப்பு அளித்ததை பெருமையாக கருதுகிறேன்’ என்று தெரிவித்தார்.

ஐ.பி.எல். சீசனில் அதிக சிக்சர்கள் விளாசிய சென்னை அணி

* ஐ.பி.எல். போட்டியில் இந்த சீசனில் சென்னை சூப்பர் கிங்ஸ் அணி மொத்தம் 145 சிக்சர்கள் விளாசியது. ஒரு சீசனில் ஒரு அணி அடித்த அதிகபட்ச சிக்சர்கள் இதுவாகும். இதற்கு முன்பு 2016-ம் ஆண்டில் பெங்களூரு ராயல் சேலஞ்சர்ஸ் அணி 142 சிக்சர்கள் அடித்ததே சாதனையாக இருந்தது.

* ஐதராபாத்துக்கு எதிரான இறுதிப்போட்டியில் சென்னை அணி வீரர் ஷேன் வாட்சன் 57 பந்துகளில் 117 ரன்கள் குவித்து கடைசி வரை ஆட்டம் இழக்காமல் இருந்து அணியின் வெற்றியில் முக்கிய பங்குவகித்தார். அபாரமான ஆட்டத்தை வெளிப்படுத்திய ஷேன் வாட்சனை, கேப்டன் டோனி இன்ஸ்ட்ராகிராமில் பாராட்டி இருக்கிறார். ஷேன் ஷாக்கிங் வாட்சன் என்று புகழாரம் சூட்டி இருக்கும் அவர் ஷேன் வாட்சன் இன்ப அதிர்ச்சி அளிக்கும் வகையிலான இன்னிங்சை ஆடினார் என்று புகழ்ந்து இருக்கிறார். அத்துடன் சென்னை அணிக்கு ஆதரவு அளித்த அனைவருக்கும் நன்றி தெரிவித்துள்ளார்.