ஐபிஎல் 12-வது சீசன் 2019 மார்ச் மாதம் தொடங்கும் அல்லது துபாயில் நடைபெறும்?


ஐபிஎல் 12-வது சீசன் 2019 மார்ச் மாதம்  தொடங்கும் அல்லது துபாயில் நடைபெறும்?
x
தினத்தந்தி 1 Jun 2018 11:28 AM GMT (Updated: 1 Jun 2018 11:28 AM GMT)

அடுத்த வருட ஐபிஎல் சீசனை மார்ச் 29-ந்தேதியிலேயே தொடங்க பிசிசிஐ திட்டமிட்டுள்ளதாக கூறப்படுகிறது. #IPL #BCCI

மும்பை

இந்திய கிரிக்கெட் வாரியம் டி20 தொடரான பிரீமியர் லீக்கை ஆண்டுதோறும் நடத்தி வருகிறது. இந்த வருடம் நடைபெற்ற 11-வது சீசன் ஏப்ரல் 7-ந்தேதி முதல் மே 27-ந்தேதி வரை சுமார் 50 நாட்களுக்கு மேல் நடைபெற்றது.

அடுத்த ஆண்டு நாடாளுமன்ற தேர்தல் நடைபெற இருக்கிறது. இதனால் ஐபிஎல் தொடருக்கு சிக்கல் ஏற்படும். அத்துடன் இங்கிலாந்தில் 50 ஓவர் உலகக் கோப்பை தொடர் நடைபெற இருக்கிறது. 50 ஓவர் உலகக் கோப்பை கிரிக்கெட் தொடர் மே 30-ந்தேதி நடைபெறுகிறது.

ஐசிசி விதிமுறைப்படி உலகக் கோப்பை கிரிக்கெட் தொடர் நடைபெறுவதற்கு இரண்டு வாரங்களுக்கு முன்பு அணிகள் தயாராகிவிட வேண்டும். மேலும், லோதா கமிட்டியின் பரிந்துரையின்படி ஐபிஎல் தொடருக்கும் அதன்பின் இந்திய அணி விளையாடும் தொடருக்கும் இடையில் 15 நாட்கள் இடைவெளி இருக்க வேண்டும் என்று குறிப்பிடப்பட்டுள்ளது. இதனடிப்படையில் பார்த்தால் மே 15-ந்தேதிக்கு முன் ஐபிஎல் தொடரை பிசிசிஐ முடித்தாக வேண்டும்.

இதற்கிடையில் பாராளுமன்ற தேர்தல் மே மாதம் நடத்தப்பட வேண்டும். சுமார் ஒரு மாதத்திற்கு முன்பே தலைவர்கள் பிரசாரம் என தேர்தல் களைகட்டும். இதனால் போலீஸ் தரப்பில் இருந்து எங்களால் பாதுகாப்பு கொடுக்க முடியாது என்று அறிவித்துவிடும். 2009 மற்றும் 2014 சீசனில் இதுபோன்ற பிரச்சினை ஏற்பட்டது. 2009-ல் தென்ஆப்பிரிக்காவிலும், 2014-ல் பாதி தொடர் ஐக்கியர அரபு எமிரேட்ஸிலும் நடைபெற்றது.

இதனால் அடுத்த வருட சீசனை மார்ச் 29-ந்தேதியிலேயே தொடங்க பிசிசிஐ திட்டமிட்டுள்ளதாக கூறப்படுகிறது. இதற்கிடையில் நாடாளுமன்ற தேர்தல் எப்போது நடைபெறும் என திட்டவட்டமாக தெரியாத நிலை உள்ளது. இதனால் பாராளுமன்ற தேர்தல் குறித்து தெளிவான முடிவு ஏற்பட்ட பிறகுதான் பிசிசிஐ 12-வது சீசனை பற்றி முழுவதுமாக திட்டமிட முடியும்.அவ்வாறு நடக்காத பட்சத்தில் ஐபிஎல் சீசன் துபாயில் தான் நடக்கும்.

Next Story