கிரிக்கெட்

ஆஸ்திரேலியா-இங்கிலாந்து மோதும் ஒரு நாள் கிரிக்கெட் போட்டி இன்று நடக்கிறது + "||" + Australia-England wins a one day cricket match today

ஆஸ்திரேலியா-இங்கிலாந்து மோதும் ஒரு நாள் கிரிக்கெட் போட்டி இன்று நடக்கிறது

ஆஸ்திரேலியா-இங்கிலாந்து மோதும் ஒரு நாள் கிரிக்கெட் போட்டி இன்று நடக்கிறது
ஆஸ்திரேலியா - இங்கிலாந்து அணிகள் இடையிலான முதலாவது ஒரு நாள் கிரிக்கெட் போட்டி லண்டனில் இன்று நடக்கிறது.
லண்டன்,

இங்கிலாந்துக்கு சென்றுள்ள ஆஸ்திரேலிய கிரிக்கெட் அணி 5 போட்டிகள் கொண்ட ஒரு நாள் தொடரில் விளையாடுகிறது. முதலாவது ஒரு நாள் போட்டி லண்டன் ஓவலில் இன்று நடக்கிறது.

தென்ஆப்பிரிக்க டெஸ்ட் தொடரில் பந்தை சேதப்படுத்திய விவகாரத்தில் ஆஸ்திரேலிய கேப்டனாக இருந்த ஸ்டீவன் சுமித், துணை கேப்டனாக இருந்த டேவிட் வார்னர் ஆகியோருக்கு ஓராண்டு விளையாட தடை விதிக்கப்பட்டது. தலைமை பயிற்சியாளர் டேரன் லீமான் ராஜினாமா செய்தார்.


ஆஸ்திரேலிய அணிக்கு புதிய கேப்டனாக டிம் பெய்னும், பயிற்சியாளராக ஜஸ்டின் லாங்கரும் நியமிக்கப்பட்டனர். அதன் பிறகு உலக சாம்பியன் ஆஸ்திரேலிய அணி பங்கேற்கும் முதல் தொடர் இது தான். புதிய தலைமையின் கீழ் ஆஸ்திரேலிய அணி எப்படி விளையாடப்போகிறது என்ற எதிர்பார்ப்பு ரசிகர்கள் மத்தியில் நிலவுகிறது. காயத்தால் முன்னணி பந்து வீச்சாளர்கள் மிட்செல் ஸ்டார்க், ஹேசில்வுட், கம்மின்ஸ் ஆகியோர் ஆஸ்திரேலிய அணியில் இடம் பெறவில்லை. அந்த அணி துணை கேப்டன் ஆரோன் பிஞ்ச், மேக்ஸ்வெல், டிராவிஸ் ஹெட், மார்கஸ் ஸ்டோனிஸ் ஆகியோரின் பேட்டிங்கைத் தான் மலை போல் நம்பி இருக்கிறது.

இயான் மோர்கன் தலைமையிலான இங்கிலாந்து அணி சில தினங்களுக்கு முன்பு குட்டி அணியான ஸ்காட்லாந்திடம் 6 ரன் வித்தியாசத்தில் அதிர்ச்சி தோல்வி அடைந்தது. அதற்கு பரிகாரம் தேடும் வகையில் இந்த தொடரில் விளையாடுவார்கள். ஒரு நாள் போட்டி தரவரிசையில் முதலிடம் வகிக்கும் இங்கிலாந்து அணி, இந்த தொடரை பறிகொடுத்தால் ‘நம்பர் ஒன்’ இடத்தை இழக்க வேண்டி இருக்கும் என்பதால் அதை தக்க வைக்க கடுமையாக போராடுவார்கள் என்பதில் சந்தேகமில்லை. காயத்தால் அவதிப்படும் ஆல்-ரவுண்டர்கள் பென் ஸ்டோக்ஸ், கிறிஸ் வோக்ஸ் இன்றைய ஆட்டத்தில் ஆடமாட்டார்கள். ஆனாலும் பேர்ஸ்டோ, ஜோஸ் பட்லர், ஜாசன் ராய், அலெக்ஸ் ஹாலெஸ் அதிரடியில் மிரட்ட காத்திருக்கிறார்கள்.

இவ்விரு அணிகளும் இதுவரை 142 ஆட்டங்களில் நேருக்கு நேர் சந்தித்துள்ளன. இதில் 81-ல் ஆஸ்திரேலியாவும், 56-ல் இங்கிலாந்தும் வெற்றி பெற்றன. 2 ஆட்டம் ‘டை’ ஆனது. 3 ஆட்டங்களில் முடிவு இல்லை.

இந்திய நேரப்படி மாலை 5.30 மணிக்கு தொடங்கும் இந்த ஆட்டத்தை சோனி சிக்ஸ் சேனல் நேரடி ஒளிபரப்பு செய்கிறது.