2026 உலக கோப்பை கால்பந்து போட்டிகள்; அமெரிக்கா, மெக்சிகோ மற்றும் கனடா இணைந்து நடத்துகின்றன


2026 உலக கோப்பை கால்பந்து போட்டிகள்; அமெரிக்கா, மெக்சிகோ மற்றும் கனடா இணைந்து நடத்துகின்றன
x
தினத்தந்தி 13 Jun 2018 3:19 PM GMT (Updated: 13 Jun 2018 3:19 PM GMT)

2026ம் ஆண்டிற்கான உலக கோப்பை கால்பந்து போட்டிகளை அமெரிக்கா, மெக்சிகோ மற்றும் கனடா ஆகிய 3 நாடுகள் இணைந்து நடத்துகின்றன.

மாஸ்கோ,

ரஷ்யாவில் 32 அணிகள் பங்கேற்கும் உலக கோப்பை கால்பந்து போட்டிகள் நாளை தொடங்கி வருகிற ஜூலை 15ந்தேதி வரை நடைபெற உள்ளன.  இதற்காக மாஸ்கோ, செயின்ட் பீட்டர்ஸ்பர்க் மற்றும் சொச்சி உள்ளிட்ட நகரங்களில் 12 மைதானங்கள் அமைக்கப்பட்டு உள்ளன.

இந்நிலையில், மாஸ்கோ நகரில் சர்வதேச கால்பந்து கூட்டமைப்பு (பிஃபா) மாநாடு இன்று நடந்தது.  இதில் வருகிற 2026ம் ஆண்டிற்கான உலக கோப்பை கால்பந்து போட்டிகளை அமெரிக்கா, மெக்சிகோ மற்றும் கனடா ஆகிய 3 நாடுகள் நடத்துவதற்கு ஒப்புதல் வழங்கப்பட்டன.

இதற்காக இன்று நடந்த ஓட்டெடுப்பில் வடஅமெரிக்கா 134 ஓட்டுகளை பெற்றன.  முதன்முறையாக இந்த போட்டிகளில் 48 அணிகள் கலந்து கொள்ள உள்ளன.

முதன்முறையாக 3 நாடுகள் உலக கோப்பை கால்பந்து போட்டிகளை இணைந்து நடத்துகின்றன.  இவற்றில் அமெரிக்காவில் 60 போட்டிகள் நடைபெறும்.  கனடாவில் 10 போட்டிகளும் மற்றும் மெக்சிகோவில் 10 போட்டிகளும் நடைபெறும்.

உலக கோப்பை கால்பந்து போட்டியின் தொடக்க ஆட்டத்தில் ரஷியா- சவூதி அரேபியா அணிகள் நாளை சந்திக்கின்றன. இந்த ஆட்டம் இந்திய நேரப்படி இரவு 8.30 மணிக்கு தொடங்குகிறது. 2-வது நாள் ஆட்டங்களில் எகிப்து-உருகுவே (இந்திய நேரப்படி மாலை 5.30 மணி), மொராக்கோ-ஈரான் (இரவு 8.30 மணி), போர்ச்சுகல்-ஸ்பெயின் (இரவு 11.30 மணி) அணிகள் மோதுகின்றன.

Next Story